அந்த ராணுவ அதிகாரிக்கு நேர்ந்த இழிவுக்கு காரணம் ஒன்றுதான்:

தலையங்கம்

ஒரு கொடுமையை அதைவிடப் பெரிய கொடுமையால் மறக்கடிக்கும் மகாக் கொடூர செயல்களில் மோடியின் அரசாங்கம் மும்முரமாய் ஈடுபட்டு வருகிறது. அராஜகங்களை நிறைவேற்ற அரசு அதிகாரங்களை ஆக்டோபஸின் கரங்களாகப் பயன்படுத்தி வருகிறது ஆரியதாச மோடி அரசு. அதன் அருவருப்பு நடவடிக்கைகளில் ஒன்று தாஜ்மகாலை சுற்றுலாப் பட்டியலிருந்து நீக்கியதாகும்.

பசுப்பாதுகாப்பு என்ற பெயரில் ஃபாசிச குண்டர்களால் ஏராளமான இந்தியக் குடிமக்கள், முஸ்லிம்கள் மற்றும் தலித்கள் என்ற காரணத்திற்காகவே கொல்லப்பட்டனர். இந்தக் கொடியவர்களுக்கு, முடிமன்னர் மோடி அரசின் மறைமுக ஆதரவும் நேரடிப் பாதுகாப்பும் உண்டு. அண்மையில் உச்சநீதிமன்றமே மாநில அரசுகளுக்கு, பசுக்குண்டர்களை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அறிக்கை அனுப்புமாறு உத்தரவிட்டது. நாட்டின் நிலைமை எவ்வளவு படுமோசமாகியுள்ளது என்பதற்கு இதுவே நல்லசான்று.சாதாரணக்குடிமக்களுக்கு பாதுகாபில்லையே என்று ஆதங்கப்பட்டால் ராணுவ அதிகாரியாக இருந்திருந்தாலும் அவர் முஸ்லிம் என்றால் அவமதித்தே தீர வேண்டும் என்று "அசத்யா கிரகத்தில்" குதித்துள்ளது மோடியின் அரசாங்கம்.


முஹம்மது அஜ்மல் ஹக், அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரி, இந்திய ராணுவத்தில் 30ஆண்டுகள் சேவை ஆற்றி ஓய்வு பெற்றவர். 2016ம் ஆண்டு செப் 30 அன்று ஓய்வு பெற்ற முஹம்மது அஜ்மல் ஹக்கிற்கு மத்திய அரசின் வெளிநாட்டினர் தீர்ப்பாயத்திலிருந்து சம்மன் (அழைப்பானை)வந்துள்ளது. அதில் அவர் இந்தியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைந்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் பங்காள தேசி அல்ல. இந்தியக் குடிமகனே என்று நிரூபிக்கத்தக்க ஆதாரங்களுடன் ஆஜராக வேண்டும் என்று தாக்கீது அனுப்பட்டுள்ளது.


அதுவும் காலம்கடந்தே அவர் கைக்கு கிடைத்துள்ளது. இதேபோல் ஒரு தாக்கீதை சில ஆண்டுகளுக்கு முன் இவரது மனைவிக்கும் அனுப்பியுள்ளனர். ‘ஜெய்ஜவான், ஜெய்கிசான் ‘என்பது சுதந்திர இந்தியாவின் முழக்கம்.ராணுவத்தினரும் விவசாயிகளும் மரியாதைக் குரியவர்கள் என்பதே இதன் சாரம்.மண்ணைக் காக்கும் வீரர்களுக்கும், மண்ணை வளமாக்கும் உழவர்களுக்கும் ஷ்ஷ்மோடி அரசாங்கம் மோசமான அவமதிப்புகளைச் செய்து வருகிறது.தனக்கும் தன்போன்ற வீரர்களுக்கும் வழங்கப்படும் மோசமான உணவு குறித்து, உண்மைகளை வெளிபடுத்திய ராணுவ வீரர் மீது இந்த அரசு மனிதாபிமானமற்ற நடவடிக்கையை எடுத்தது. விமானப்படை வீரரின் தந்தையான, முஹம்மது அஹ்லாக்கை தாத்ரியில் ராத்திரியில் வீடு புகுந்து அடித்துக் கொன்ற கும்பலை ஆசிர்வதித்து, ஆதரித்துப் பாதுகாக்கிறது காவிநாயக அரசு.
முப்பது ஆண்டுகள் தனது பொன்னான இளமையை மண்ணுக்காக செலவிட்டவரைப் பார்த்து குடிமகனா நீ? என்கிறது கொடுமதி பிடித்த அரசு. ராணுவத்தின் உயர் அதிகாரிகள் அஜ்மலுக்குத் தேவையான உதவிகளைச் செய்யுப்போவதாக,அமன்வதூத் என்ற அவரது வழக்குரைஞருக்குச் செய்தி அனுப்பி இருப்பது ஓர் ஆறுதல்.இத்தகையக் கேவலங்களில் இதற்குமுன் எந்த அரசும் இறங்கியதில்லை.


மோடி அரசின் மூர்க்க நடவடிக்கைகள் ராணுவத்தினரின் மன உறுதியைக் குலைப்பதாக உள்ளன.தேசத்தைக் காக்கும் பணியில் உயிரைப் பணயம் வைத்துப் பணியாற்றி ராணுவ வீரர் முஸ்லிம் என்பதாலேயே, அவமதிப்புக்கு ஆளாக்கப்படுவார், என்ற நிலை எவ்வளவு அருவருப்பானது, எத்தனை இழிவானது.


இந்திய ராணுவத்தின் வெடி மருந்துகளையும் தளவாடங்களையும் வகுப்பு வாத அபினவ் பாரத் தீவிரவாத அமைப்புக்கு கடத்தியதக குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீகாந்த் புரோஹித்து இடை நீக்கம் செய்யப்பட்டபோதும் அவருக்கு ஊதியம் நிறுத்தப்படாமல் போனது இப்போது பிணையும் கொடுத்து விடுவித்திருக்கிறது. அவரை பாஜகவினர் பின்னணியில் பாதுகாத்திருக்கிறார்கள்.இந்திய ராணுவ தளபதியாக இருந்து பல்வேறு சர்ச்சைகளுக்கு காரணமாக இருந்த வீகே சிங் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டு அமைச்சராகவும் ஆகி இருக்கிறார். சமூகத்தை ராணுவ மயமாக்கு, ராணுவத்தை இந்து மயமாக்கு என்ற கோட்ப்பாடுடைய சங்கிகள் நியாயமாக மதச்சார்பற்ற முறையில் செயல் படும் ராணுவ அதிகாரிகளுக்கும், சிறுபான்மை அதிகாரிகளுக்கும் அவமதிப்புக்களை வழங்கி ராணுவத்தில் இருந்து ஓரம் கட்டி தங்கள் விரும்பக்கூடிய பாசிச நடவடிக்கைகளுக்கும், சங் பரிவார் லட்சியங்களையும் எட்டும் வகையில் அதற்குகந்த ராணுவ சூழலை உருவாக்குகிறார்களோ என்ற சந்தேகம் எழும்பி இருக்கிறது. மோடியின் கொட்டம் முடிகின்ற காலம் நெருங்கிவிட்டதன் அடையாளங்களில் இதுவும் ஒன்று.