வெளியேற்றுவோரை வெளியேற்ற வேண்டிய வேளை...

தலையங்கம்

வரலாறு காணாத வன்கொடுமையை மியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் சந்தித்து வருகின்றனர்.

கொத்துக் கொத்தாய்க் கொல்லப்பட்டு மானபங்கத்திற்கு உள்ளாக்கப்பட்டு, குழந்தைகளும் முதியோர்களும் எரிக்கப்பட்டு, எழுத்தில் வடிக்க முடியாத கொடூரங்களை வெறிபிடித்த பயங்கரவாதிகளாலும், அவர்களோடு கைகோர்த்துக் கொண்ட மியான்மர் ராணுவத்தாலும் சந்தித்த ரோஹிங்கிய முஸ்லிம்கள் உயிரை மட்டும் காப்பாற்றிக் கொண்டு தரைவழியாகவும், கடல் வழியாகவும் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.


உலக நாடுகள், ரோஹிங்கிய அகதிகளுக்கு உதவிக்கரத்தை நீட்டுகின்றன. ஐ.நா.வின் அறிக்கை ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு மியான்மர் அரசு இழைத்து வரும் மிகப்பெரிய கொடுமைகளை மிகையின்றி வெளிப்படுத்தியுள்ளது. மிருகங்களை விடவும் கேடுகெட்ட மியான்மர் அரசுக்கும் அதன் பௌத்த பயங்கரவாதத்துக்கும் எதிராக உலக நாடுகளின் கண்டனக் குரல்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
வங்கதேசத்தில் 4 லட்சத்துக்கு அதிகமானோரும், இந்தியாவில் 40 ஆயிரத்திற்கு மேற்பட்டோரும் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், மனிதநேயத்தை மறந்துவிட்ட மத்திய அரசு, ரோஹிங்கிய அகதிகள் குறித்து வெளிப்படுத்தி வரும் கருத்துகள், இந்தியாவின் மாண்பை சிதைக்கும் வகையிலும், மனிதநேயத்தை மண்ணில் புதைக்கும் வகையிலும் காவிமிராண்டித்தனமாக அமைந்து இருக்கின்றன.


ரோஹிங்கிய முஸ்லிம் அகதிகளுக்கு இந்தியா மனிதாபிமான உதவிகளைச் செய்ய வேண்டும். நம் சட்டப்படியே அவர்களுக்கும் குடிமக்களுக்கு காட்டும் கரிசனத்தைக் காட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கருத்துக் கூறியதும், மதம் பிடித்த மத்திய அரசுக்கு பொல்லாத கோபம் பொத்துக் கொண்டு வந்துவிட்டது.


நீட் தேர்வு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் கருத்தைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்ட மோடி அரசு, ரோஹிங்கிய முஸ்லிம் அகதிகள் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் கூறிய கருத்துக்கு எதிராக, பச்சைத் துரோக பிரமாணப் பத்திரத்தை 16 பக்க அளவில் தயாரித்து தாக்கல் செய்துள்ளது. அதில் மோடி அரசின் மூர்க்கக் குணம் தீர்க்கமாகவே வெளிப்பட்டுள்ளது.


"ரோஹிங்கிய அகதிகள் விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது. இதில் உச்சநீதிமன்றம் தலையிடக் கூடாது. ரோஹிங்கிய அகதிகளுக்கு எந்தச் சலுகையும் வழங்கப்பட மாட்டாது. எந்த வெளிநாட்டினரையும் வெளியேற்றும் உரிமை அரசுக்கே உள்ளது. ரோஹிங்கிய அகதிகளால் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு தீவிரவாத எண்ணம் உள்ளது" என்பதுதான் மோடியின் மதவாத மத்திய அரசின் மனிதநேயமற்ற பிரமாணப் பத்திரம்.


இந்திய அரசியல் சாசனத்தின் 14வது பிரிவு, ‘இந்தியாவில் வசிக்கிற அதேநேரத்தில் இந்தியக் குடிமக்களாய் இல்லாதிருப்பவர்களும் சட்டத்தின் முன் சமமே, அவர்களுக்கு நீதியும் நிவாரணமும் பெற உரிமையுண்டு’ என்கிறது. 21வது பிரிவு, ‘குடிமக்களாய் இல்லாது இங்கு வாழும் மக்களுக்கு உயிர் வாழ உரிமையும் சுதந்திரமும் உண்டு’ என்கிறது.


"ஐ.நா.மன்றத்தில் 1951ல் கொண்டு வரப்பட்ட, அகதிகள் குறித்த நெறிமுறைகளில் இந்தியா கையப்பமிடவில்லை. அதனால் சர்வதேச மனித உரிமை நெருக்கடிகள் எங்களைக் கட்டுப்படுத்தாது" என்று சண்டித்தனம் பேசுகிறது சங்பரிவார அடிவருடி அரசு.


அதேநேரம், நேபாளம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து வந்தவர்களுக்கும், திபெத் போன்ற பகுதியிலிருந்து ஊடுருவி வந்தவர்களுக்கும், குடிமக்களுக்கு இணையான உரிமை அளிக்கும் மத்திய அரசு, ரோஹிங்கிய அகதிகள் முஸ்லிம்கள் என்பதாலேயே மனிதாபிமானத்தை மறுதலிப்பதும், அவர்களை வெளியேற்றியே தீருவோம் என்பதும், உயிர் பிழைக்க ஓடிவந்த அப்பாவிகளை தேசத்தின் ஆபத்துகளாய்க் காட்டுவதும் கடைந்தெடுத்த கயமைத்தனம் அன்றி வேறென்ன?


மோடி அரசின் இந்த மூர்க்க முடிவை தினமணி, தி இந்து உள்ளிட்ட பல ஏடுகளும் கூட கண்டித்து தலையங்கம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.


வங்கதேச எல்லைப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் அகதிகளாக வரும் ரோஹிங்கிய மக்கள் மீது மிளகாய் பொடி மற்றும் நாட்டு வெடிகுண்டுகளை வீசி படுகாயப்படுத்தும் அசிங்கங்களும் அரங்கேறியுள்ளன. இந்த மிருகத்தனத்திலும் கீழான கொடூரத்தை யார் தூண்டிவிட்டிருப்பார்கள் என்பதை சொல்லத் தேவையே இல்லை.


ஐ.நா. மன்றத்தின் உரிமை ஆணையர், சர்வதேச சட்டங்களுக்கு உட்படே இந்தியா செயல்பட முடியும், அகதிகளைப் பராமரிப்பது சர்வதேச கோட்பாடு ஆகும் என்று கூறியுள்ளார்.


ஐ.நா.வின் 1951ம் ஆண்டு அகதிகள் நெறிகளைச் சட்டத்தில் இந்தியா கையெழுத்திடவில்லை எனினும் சர்வதேச மனித உரிமை அமைப்பில் ஓர் உறுப்பு நாடாக இந்தியா உள்ளது. மேலும், சர்வதேச குடிமையியல் மற்றும் மனித உரிமை ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டுள்ளது. எனவே ரோஹிங்கிய அகதிகளை, அவர்களைக் கொன்று குவிக்கும் தேசத்திற்குத் திருப்பியனுப்பிடக் கூடாது என ஐ.நா.வின் சர்வதேச மனித உரிமை ஆணையமும் வலியுறுத்தியுள்ளது.


‘வெள்ளையனே வெளியேறு’ என்று வீரதீர விடுதலைப் போர் நடத்திய இந்தியா, ஒருபோதும் ‘அகதிகளே வெளியேறு’ என்று சொன்னதில்லை. வெள்ளையரை வெளியேற்றும் போராட்டத்தில் பங்கேற்காத சங்பரிவாரத்தின் சந்ததியினரே, அகதிகளை வெளியேற்றும், அருவறுப்புக் கொள்கையை முன்வைக்கின்றனர்.


இந்தியாவின் மானத்தையும், மனிதாபிமானத்தையும் வெளியேற்றப் பார்ப்பவர்களை, ஆட்சியிலிருந்து வெகுசீக்கிரம் வெளியேற்ற வேண்டும்.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.