எடுபிடி அரசின் கெடுபிடி சதிகள்...

தலையங்கம்

"தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா" என்ற நாமக்கல் கவிஞரின் வரிகள் தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் ஒளிவீசி நிற்கின்றன. அங்கு அண்மைக் காலமாக அரங்கேறி வரும் அரசியல் அவலங்களோ தமிழனைத் தலைகுனிய வைத்துக் கொண்டிருக்கின்றன.


மாபெரும் நெருக்கடிகளுக்கிடையிலும் மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காமல், உணவுப் பாதுகாப்புச் சட்டம், நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசுக்கு எதிராக ஜெயலலிதா உறுதியான நிலைப்பாட்டை எடுத்தார்.


நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையிலும், "மோடியா? இந்த லேடியா?" என்று பாஜகவுடன் நேரடியாக மோதினார். அவரது மறைவுக்குப் பிறகு, ஆளும் அதிமுகவின் முன்னணி தலைவர்களின் மோசமான பின்னணி பலவீனங்களைத் தனது துருப்புச் சீட்டாக்கிய, மத்தியில் ஆளும் பாஜக, அதிமுகவைத் தனது அடிமைக் கட்சியாக்கி ஆட்டிப் படைக்கிறது.


ஜெயலலிதா கடுமையாக எதிர்த்த மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும் அவர் மறைவுக்குப் பின் பொறுப்பேற்ற உண்மை விசுவாசி(?) ஓ.பி.எஸ்.ஸ§ம், அமைதிப் படை(?) ஈ.பி.எஸ்.ஸ§ம் அடிமை சாசனம் எழுதித் தந்துவிட்டு, ஏற்றார்கள். தஞ்சாவூரில் முள்ளி வாய்க்கால் முற்றத்தில் நடந்த நினைவேந்தல் கூட்டம் ஒன்றில், அதிமுகவின் அதிமுக்கியப் பின்புலமான எம்.நடராஜன் (சசிகலா), பாஜக தலைவர்களையும், ஆர்எஸ்எஸ் ஆடிட்டர் குருமூர்த்தியையும் வறுத்தெடுக்க, மோடியின் திருவிளையாடல் ஆரம்பமானது.அதிமுகவின் பொதுச் செயலாளராகவும் முதல்வராகவும் தேர்வு செய்யப்பட்ட சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்குப் போனார்.


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் களமிறங்கிய துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை மீட்க லஞ்சம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.ஓ.பன்னீர் செல்வம் பாஜகவின் ஆதரவோடு தொடங்கிய கர்மம் பிடித்த தர்ம யுத்தத்தில் (?) 12 பேர் அரசை எதிர்த்து வாக்களித்தாலும், எடப்பாடி பழனிச்சாமி அரசு தப்பித்தது.

கொறடா உத்தரவை மீறி அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்த 12 பேர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.அன்று எடப்பாடி அரசைக் காப்பாற்றி, பிறகு முதலமைச்சரை மாற்ற வேண்டும் என ஆளுநரிடம் மனு கொடுத்த 18 பேர், சபாநாயகர் தனபாலால் தகுதியிழப்பு செய்யப்பட்டுள்ளனர்.


தகுதியிழப்பு நடவடிக்கை மூலம் பெரும்பான்மையைக் குறைத்து, நம்பிக்கை வாக்கெடுப்பில் நயவஞ்சகமாய் வென்று விடலாம் என பாஜகவின் பினாமி அரசு திட்டம் தீட்டுகிறது.


அரசுக்கு எதிராக வாக்களித்த 12 பேர் மீது நடவடிக்கை இல்லை. முதல்வரை மாற்ற வேண்டும் என மனு கொடுத்த 18 பேர் மீது தகுதியிழப்பு நடவடிக்கை. இது யார் எடுக்கிற முடிவு? நிச்சயமாக இது மோடி அரசாங்கத்தின் முடிவு. பாசிச பாஜகவின் உத்தரவு என்பது மிக வெளிப்படையாகவே தெரிகிறது.டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த 18 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தின் கதவைத் தட்டியுள்ளனர்.
இந்தத் தலையங்கம் எழுதப்படும் நேரத்தில், அவர்களது வழக்கை அவசர வழக்காக உயர்நீதிமன்றம் ஏற்றுள்ள செய்தியையும், அவசரத்திற்கு வராத பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர்ராவ், அவசரமாகத் தமிழகம் வருகிற செய்தியையும் தொலைக் காட்சிகள் சொல்லிக் கொண்டிருக்கின்றன.


கர்நாடகாவில் எடியூரப்பா அரசு நம்பிக்கை வாக்கெடுப்பின் போது 11 அதிருப்தி பாஜக எம்.எல்.ஏ.க்களை அதில் 15 சுயேச்சை எம்.எல்.ஏ.க்களையும் தகுதியிழப்பு செய்துவிட்டு, உச்சநீதிமன்றத்தில் மொத்துபூசை வாங்கி மூக்குடைந்து நின்றது. 16 எம்.எல்.ஏ.க்களின் தகுதியிழப்பு நடவடிக்கையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.எடியூரப்பா அரசு மூக்குடை பட்டதுபோல, எடப்பாடி பழனிச்'சாமியார் அரசும் முகத்தில் கரிபூசிக்கொள்ளப் போவதை சட்ட நிபுணர்களும், அனைத்து ஊடகங்களும், எதிர்க்கட்சித் தலைவர்களும் ஒருமித்த குரலில் முன்னறிவிப்புச் செய்துள்ளனர்.காவிகள் கொடுக்கும் சாவிகளுக்கு ஏற்ப பழனிச்‘சாமியார்’ அரசு அறங்களை மீறி அடாவடி செய்து வருகிறது.தமிழகத்தின் வாழ்வாதாரங்களை வஞ்சித்து, தமிழ்நாட்டையே தகுதியிழப்பு செய்துள்ள, மோடி அரசின் தில்லுமுல்லு விளையாட்டுகளுக்கு எதிராக தமிழகம் கொந்தளித்துக் கொண்டிருக்கிறது.


எரிமலையின் மேலே, ஆசனம் பதித்து அமர்ந்திருக்கிறது எடப்பாடியின் எடுபிடி அரசு. மதவெறி பிடித்த மத்திய அரசுடன் கள்ளத் தொடர்பு வைத்து தமிழக அரசியலில் கற்பை விற்றுக் காசாக்கி வருபவர்கள் செல்லாக்காசாகி வீட்டுக்கும் பிறகு மாமியார் வீட்டுக்கும் (?)செல்லும் நாள் வெகுதூரமில்லை.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.