காவிகளிடமிருந்து கல்விச் சுதந்திரம் பெற ஒரே வழி

தலையங்கம்

கல்வியை மாநிலப் பட்டியலுக்கே முழுமையாகக் கொண்டுவர வேண்டும் என்ற முழக்கம் தமிழகத்தில் பேரெழுச்சியோடு தொடங்கியுள்ளது. மாநில உரிமைகளை அணுவளவும் மதிக்காமல் மத்திய அரசு தொடர்ந்து வந்த அத்துமீறல்கள், மாநிலத்தின் கல்வி நிலையைச் சிக்கலாக்கி, சிதிலமாக்கி வந்தன.

அதன் உச்சகட்டமாக அரியலூர் மாணவி அனிதாவின் மரணம் அமைந்தது. ஆவேசத்தோடு வீதிக்கு வந்து போராடத் தொடங்கிய பல்வேறு தரப்பினரும் இந்தப் பிரச்சினையின் ஆணிவேர் எதுவெனப் புரிந்துகொண்டு அதற்காகத் தங்களின் கோரிக்கையைக் கூர்மைப்படுத்தி முன்வைத்துள்ளனர். அதுதான் மீண்டும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கே மாற்று என்ற போர்க்குரல்.

இந்தியா என்பது பல மாநிலங்களையும் உள்ளடக்கிய ஓர் ஒன்றியம் (Union). இந்திய ஒன்றிய அளவில் கூட்டாட்சியையும், மாநில அளவில் ஒற்றையாட்சியையும் அரசியல் சட்டம் நிர்ணயித்துள்ளது. இந்திய அரசியலமைப்பின்படி மத்திய அரசு சட்டமியற்றி நிர்வகிக்கும் துறைகளின் பட்டியல், மாநில அரசு சட்டமியற்றி நிர்வகிக்கும் துறைகளின் பட்டியல் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.

இதில் மாநிலப் பட்டியலில் 66 துறைகள் ஆரம்பத்தில் இடம்பெற்றிருந்தன. 1976/-77 காலகட்டத்தில் அவசர நிலையின் போது கல்வியும், விளையாட்டும் மாநிலப் பட்டியலிலிருந்து இசைவுப் பட்டியலுக்கு (Concurrence List) மாற்றப்பட்டு மாநிலப் பட்டியல் 64ஆகக் குறைக்கப்பட்டது.பொதுப் பட்டியல் என்று தவறாக அழைக்கப்படும் இசைவுப் பட்டியலில் முதலில் 49 துறைகள் இருந்தன. கல்வியும், விளையாட்டும் அதில் இணைக்கப்பட்ட பின் இசைவுப் பட்டியலில் 49 துறைகள் இடம்பெற்றன. 42வது சட்டதிருத்தத்தின் இசைவுப் பட்டியலுக்கு மாற்றுவதற்கு ஒரு காரணம் கூறப்பட்டது. "சுதந்திரம் அடைந்து 30 ஆண்டுகளைக் கடந்தும் கல்வி பரவலாக்கப்பட முடியாமல் உள்ளது. அதை மக்களிடம் பரவலாக எடுத்துச் செல்லவே இசைவுப் பட்டியலுக்கு மாற்றி மத்திய அரசும் அதற்கு ஊக்கமளிக்க வேண்டும் என்பதே அந்தக் காரணம்.

ஆனால் நடந்தவை எல்லாம் எதிர்பார்ப்புக்கு எதிராகவே இருந்தன.கல்வி மாநிலப் பட்டியலில் இருந்த காலத்திலேயே தமிழகத்தில் கல்வி பரவலாக்கப்பட்டிருந்தது. அரசுப் பள்ளிகள் மிகுந்த தரத்தோடு இருந்தன. 1980 வரை அனைவரும் அரசுப் பள்ளி வாயிலாகவே அடிப்படைக் கல்வியைப் பெற்றனர்.

கல்வி இசைவுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட பின் பள்ளிக் கல்வியின் வீழ்ச்சி தொடங்கியது. தனியார் பள்ளிகள் புற்றீசல் போல பெருகின. அரசுப் பள்ளிகள் அதீத வேகத்தில் நலிவுறுத் தொடங்கின.கல்வி வணிகப் பண்டமானது. வர்க்கத்திற்கு ஏற்ற கல்வி வழக்கமாகிறது. ஏழைகள் அரசுப் பள்ளியிலும், செல்வந்தர்கள் தனியார் பள்ளியிலும் சேரும் சூழல் உருவானது. உயர்கல்வியிலும் முடிவெடுப்பதில் பல முட்டுக்கட்டைகள் இசைவுப் பட்டியலால் உருவானது.இசைவுப் பட்டியல் என்றால் என்ன பொருள். கல்வியைத் தீர்மானிக்கும் ஒரு சட்டத்தை மத்திய அரசு இயற்ற நினைத்தால் அது மாநிலங்களின் சம்மதத்தைப் பெற்றே சட்டமியற்ற வேண்டும். அதுபோல, மாநில அரசுகளும் மத்திய அரசின் ஒத்திசையைப் பெற்று சட்டங்களை இயற்ற வேண்டும்.

ஆனால், கல்வியைத் தீர்மானிக்கும் சட்டத்தை மத்திய அரசு இயற்றும் போது மாநிலத்தின் கருத்தை அறவே கேட்பதில்லை. மேலும் மாநிலத்தின் உணர்வுகளுக்கு எதிராகவும் சட்டங்கள் இயற்றப்படுகின்றன.எடுத்துக்காட்டாக, மருத்துவக் கல்விக்கு நீட் தேர்வு கூடாது என தமிழக சட்டமன்றமே தீர்மானம் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது. ஆனால், மத்திய அரசு அதைக் கடுகளவும் மதிக்காமல், நீட் தேர்வைக் கட்டாயமாக்கி நடைமுறைப்படுத்துகிறது.இப்போது மாநில அரசின் முடிவைக் கேட்காமல் காலங்காலமாய் தமிழக மக்கள் எதிர்த்து வந்த நவோதயா பள்ளிகளை அறிமுகப்படுத்துகிறது. பள்ளிகளில் இந்தியைத் திணிக்க முயல்கிறது. மதவாத நஞ்சு பூசப்பட்ட பாடங்களை தமிழகத்தில் பரப்பும் தரங்கெட்ட முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மாநிலத்தின் பண்பாடு, கலாச்சாரம், மொழிப்பற்று குறித்த எதைப் பற்றியும் அறிவற்ற, அக்கறையற்ற மேனாமினுக்கி தலைமுறையை உருவாக்கும் கல்வி முறையையே மத்திய பாடத்திட்டங்கள் வழங்குகின்றன. இந்தியாவின் பன்முகத்தன்மையை மறுத்து, ஒற்றைக் கலாச்சாரத்தைத் திணிப்பதற்கு கல்வியைக் கருவியாக்கி காவிகள் செய்யும் சதிகளுக்கு இசைவுப் பட்டியல் மிகவும் ஒத்தாசையாக இருக்கிறது.

மாநில உணர்வுகள் மதிக்கப்படுவதற்கும், மனிதநேயம் சார்ந்த கல்வி முறை வளர்வதற்கும், சமூகநீதி நிலைநாட்டப்படுவதற்கும், உயர்கல்வியில் உள்ள முட்டுக்கட்டைகள் அகல்வதற்கும் இந்தி, சமஸ்கிருதத் திணிப்புகளிலிருந்து தமிழகத்தைப் பாதுகாப்பதற்கும், பிஞ்சுகளின் உள்ளத்தில் வகுப்புவாத நஞ்சை, வகுப்பறைகளிலேயே கலக்காமல் தடுப்பதற்கும் ஒரே வழி, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது மட்டுமே தீபங்களாய் எழுந்தவர்கள் தீப்பந்தங்களாய் நிற்கிறார்கள். தேவைப்பட்டால் எரிமலைகளாகவும் மாறுவார்கள். மாநில மக்களின் மனஓட்டத்தை உணர்ந்து, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவது மத்திய அரசு செய்ய வேண்டிய கட்டாயக் கடமை.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.