செல்லாப்பணம் என்ற ‘செல்லாக்காசுகளின்’ சீரழிவுத் திட்டம்

தலையங்கம்

கார் திருடர்கள் தங்களின் செயல்பாட்டுக்கு உகந்ததாக இரவு நேரத்தைத் தேர்ந்தெடுப்பார்கள். மத்தியில் ஆளும் மதவாத மோடி அரசின் மிக முக்கிய செயல்பாடுகளும் கூட இரவு நேரத்திலேயே அறிவிக்கப்பட்டன.ஓர் அரசின் நடவடிக்கையை கொள்ளைக்காரர்களின் நடவடிக்கையோடு எப்படி ஒப்பிட முடியும்... முடியாதுதான். அந்த முடிவு ஜனநாயகப் பண்புகளோடும், அரசு நெறிகளோடும் எடுக்கப்பட்டிருந்தால்... ஆனால்....மோடி அரசின் ஜிஎஸ்டி கொள்கைக்காக நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் மணியடிக்கப்பட்டது. அதுதான் சாதாரண வணிகர்களின் நிம்மதிக்கு சாவுமணியானது. அதானி, அம்பானி கும்பலுக்கு அது சங்கீதமாய் இருந்திருக்கலாம்.


மோடி அரசின் செல்லா நோட்டு நடவடிக்கையும் மிகப்பெரிய வரலாற்றுத் தோல்வி என்பதை தற்போது மத்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையே தெளிவுபடுத்தியுள்ளது.2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி இரவு 8. மோடி, இன்று முதல் ரூ.1000 மற்றும் ரூ.500 தாள்கள் செல்லாது என அறிவித்தார்.


ஒட்டுமொத்த தேசமும் அந்த அறிவிப்பில் அதிர்ந்தது. தேசத்துக்காக இந்த தியாகத்தை செய்தே தீரவேண்டும் என அக்மார்க் தியாகிகள்(?) அழைப்பு விட்டனர். கறுப்புப் பணம் எனப்படும் கணக்கில் காட்டப்படாத கள்ளப்பணத்தை அடியோடு ஒழிக்கவே இந்த அதிரடி நடவடிக்கை என்ற இந்த நீசத்தனமான நடவடிக்கைக்கு நியாய சாயம் பூசப்பட்டது.உண்மையிலேயே, கள்ளப்பணத்தை மிகப்பெரிய அளவில் வைத்திருந்தவர்கள் சிக்காமல் தப்பித்ததும், சிறு வணிகர்களும், சாதாரண குடிமக்களும் அனைத்து வதைகளுக்கும் ஆளானதும் இந்த தேசம் பார்த்த கொடுமை.


பணத்தை மாற்றுவதற்காக வரிசையில் நின்று பலர் இறந்த சம்பவங்களும் நடந்தன. மக்களை தியாகிகளாக்குவதற்காகவே பிரதமர் பதவியில் ஏறியவருக்கு இதுவெல்லாம் வருத்தம் தருமா என்ன?ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் உங்கள் ஆட்சியில் படுகொலை செய்யப்பட்டபோது, வருத்தமில்லையா? என்ற கேள்விக்கு, "எனது காரில் ஒரு நாய் குட்டி அடிபட்டு செத்தால் சிறு வருத்தம் வரும் அல்லவா?" என்று பதில் சொன்ன ‘மனிதநேய மகானுபவருக்கு', எவன் செத்தால் என்ன?ஆனால், இவர் பீற்றிக் கொண்டதற்கும், நடந்திருப்பதற்கும் இடையே மாபெரும் முரண்பாடு காந்திக்கும், கோட்சேவுக்கு உள்ள முரண்பாடு அளவுக்கு மோடியின் சொல்லுக்கும், செயலுக்கு இருக்கிறது.


இந்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டு அறிக்கையின் 195வது பக்கம், செல்லாப்பண நடவடிக்கை ஒரு வரலாற்றுத் தோல்வி என்பதை வெளிப்படுத்தியுள்ளது.


மோடியின் செல்லாப்பண அறிவிப்பு வெளிவந்தபோது 15.44 டிரில்லியன் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இவற்றைக் கணக்கில் கொண்டுவர நிபந்தனைகளின்படி வங்கியில் முதலீடு செய்வோர், வரி கட்டியாக வேண்டும். கணக்கில் காட்டாத, காட்டவும் முடியாத, முறைகேடாக திரட்டப்பட்ட மிகப்பெரிய தொகை வைத்திருப்பவர்கள் அவற்றை ரூ.1000, ரூ.500 வடிவில்தான் வைத்திருப்பர். இந்தப் பணத்தோடு பிடிபடாதிருக்க அவற்றை அழித்து விடுவார்கள் என்பது மோடி சொன்ன ஆரூடம்.


ஆனால் நடந்தது என்ன? ஜூன் 30, 2017 வரை 99 சதவீதம் ரூ.1000, ரூ.500 நோட்டுகள் வங்கியில் முதலீடு செய்யப்பட்டு விட்டதாக (அதாவது 15.28 டிரில்லியன்) அறிக்கை கூறுகிறது. அதாவது கள்ளப் பணம் எல்லாம் சகல தந்திரங்களோடும் நல்ல பணமாக உருமாறி விட்டன.இதுதான் 56 இன்ச் மார்பரின் டக்கு. மேலும் பல சீரழிவுகளும் பொருளாதார வல்லுநர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கள்ளப் பண ஒழிப்பு படுதோல்வி அடைந்துள்ளது. இந்திய தேசத்தின் 86 விழுக்காடு பணம் ஒரே இரவில் செல்லாமலாக்கப்பட்டு அழிக்கப்பட்டது. தவறான பொருளாதார நடவடிக்கைகள் தடுக்கப்பட முடியவில்லை. இந்தியாவில் பணத்தாள் நெருக்கடி ஏற்பட்டது.இல்லத்தரசிகள் ரகசியமாக சேமிக்கும் (சிறுவாட்டுப்பணம்) தொகையையும் இழக்க நேர்ந்தது.

மோடி அரசு, உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டை செல்லாது என அறிவித்து விட்டு, அதைவிட அதிக உயர்மதிப்புடைய 2000 ரூபாய் நோட்டை, சாவர்க்கரின் கண்ணாடியை ஒருபுறமும், காந்தியை ஒருபுறமும் போட்டு அறிமுகப்படுத்தியது.இந்த கேலிக்கூத்தான நடவடிக்கை இந்தியாவுக்குப் பெரும் பொருளாதாரப் பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளது என்பதை பொருளாதாரப் பேரறிஞர் விவேக் கவுல் ஆதாரங்களோடு அம்பலப்படுத்தியுள்ளார். நோட்டை செல்லாமல் ஆக்கியவர்கள் இந்த நாட்டை செல்லாததாக ஆக்கிடும் முன், அவர்கள் ஆட்சிக் கோட்டையை விட்டு வீட்டை நோக்கி செல்ல வேண்டும். வெல்லும் மக்கள் எழுச்சி அவர்களை செல்ல வைக்க வேண்டும்.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.