வன்முறை இவர்களின் வழிமுறை

தலையங்கம்

காமுகச் சாமியார் குர்மீத் ராமைக் குற்றவாளி என்றது நீதிமன்றம். ஊரையே கொளுத்துகிறார்கள் சாமியாரின் அடியார்(ட்)களும், சங்பரிவார ஃபாசிஸ்டுகளும்.

அரியானாவில் அரியணையில் இருக்கும் காவி அரசாங்கத்தைப் பார்த்து, அதிகாரத்தை அடியாட்களிடம், அரசியல் ஆதாயம் பெறுவதற்காக அடகு வைத்துவிட்டீர்களா? என்கிறது நீதிமன்றம்.

முகத்தில் உமிழப்பட்ட எச்சில் அருவியை வழித்துத் துடைத்து விட்டு, தனது ராஜதர்மத்தை நிலைநாட்டிக் கொண்டிருக்கின்றன மத்திய மாநில மதவாத அரசுகள்.இவர்களின் வன்முறை இப்போது திடீரென முளைத்தது அல்ல. காவி அரசாங்கத்தின் வேடிக்கையாளர்களும் இக்கயமைத்தனமும் இன்று நேற்றாய் நடப்பதல்ல.இவர்கள் வரலாறு படைத்த வன்முறைப் பொறியாளர்கள் (ஸிவீஷீt ணிஸீரீவீஸீமீமீக்ஷீs). கலவரத்தை எப்படி உருவாக்க வேண்டும், எப்படி முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும், அரசு எந்திரத்தை எப்படிச் சாதகமாக்கிக் கொள்ள வேண்டும், சிறுபான்மையினரை எப்படிக் குறிவைத்து அழிக்க வேண்டும், அழித்த பிறகு எப்படித் தப்ப வேண்டும், அனைத்தையுமே இவர்கள் பாடத்திட்டம் மூலம் பயின்று வந்த பயங்கரவாதிகள். சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதமான காந்தியின் கொலை முதல் இன்று வரை அவர்களது கொலைத் தாகம் குறையவில்லை. கோட்சேவை நவீன இந்தியாவின் சிற்பியாக வெளிப்படையாகக் கொண்டாடிட, அவர்களின் கைக்கு கட்சி வந்துவிட்ட பிறகு, வெறுப்புக் கொலைகளின் வீச்சு பன்மடங்கு அதிகரித்து விட்டது.

1992ம் ஆண்டு டிசம்பர் 6 அம்பேத்கர் நினைவு நாளைத் தேர்ந்தெடுத்து, அயோத்தியில் கரசேவை என்றார்கள். 450 ஆண்டுகால பாபரி மஸ்ஜிதின் ஒரு செங்கல்லுக்கு கூட சேதம் வராது என்று உச்ச நீதிமன்றத்தில் உ.பி.யை ஆண்ட கல்யாண் சிங்கின் காவி அரசு பிரமாணம் செய்தது.ஆனால் என்ன நடந்தது? வரலாற்றுச் சிறப்புமிக்க பாபரி மஸ்ஜித் அருகே நூற்றுக்கணக்கான வன்முறையாளர்கள் ஆயுதங்களுடன் திரள அனுமதிக்கப்பட்டனர். பஜனை, பூஜை போன்ற சடங்குகளுக்கு மிகவும் அவசியமான, கடப்பாரை, சம்மட்டி, மண்வெட்டி போன்ற ஆன்மீகத்(?) தளவாடங்களை அயோக்கிய அரசு அனுமதித்தது.பட்டப் பகலில் பாரறிய பாபரி மஸ்ஜித் பயங்கரவாதிகளால் தகர்க்கப்பட்டது. பாஜகவின் மூத்த தலைவர்கள், தங்களது அகிம்சைத் தொண்டர்களை அருகிலிருந்து உற்சாகப்படுத்தி உரைகளை ஆற்றினர்.

மூவாயிருக்கும் மேற்பட்ட வீரர்களைக் கொண்டிருந்த ‘பாரா மிலிட்டரி’ என்ன செய்தது? போக்கிரிகளின் வெறியாட்டத்தைத் தடுத்ததா? இயந்திரத் துப்பாக்கிகளை இயக்கியதா? இல்லை. கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு கயமைத்தனத்தைக் கண்கொட்டாமல் வேடிக்கைப் பார்த்தது. உச்ச நீதிமன்றத்தை ஏமாற்றிய மிகச்சிறய குற்றத்தை செய்த உ.பி. அரசின் காவி முதல்வர் கல்யாண் சிங்கிற்கு, ஒருநாள் வீட்டுச் சிறை என்ற மிகக்கொடிய(?) தண்டனைக் கொடுக்கப்பட்டது.

2002ஆம் ஆண்டு மோடியின் தர்பார் குஜராத்தில் நடந்த போது, இதே பாணியில் தான் கோரத்தாண்டவம் அரசின் உதவியோடு அரங்கேறியது.காவிகளின் சூலங்களுக்கு காவல்துறை துப்பாக்கிகள் ஒத்தாசை செய்ய, 3000 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.எண்ணற்ற பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டனர். சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இந்தக் கொடூரத்தை மார்ச் 21, 2002 தேதியிட்ட இந்துஸ்தான் டைம்ஸ் இப்படி எழுதியது.

"தந்தைகளின் முன்னிலையிலேயே மகள்கள் பாலியல் கொடுமை செய்யப்பட்டு, தலையிலடித்துக் கொல்லப்பட்டனர். பிள்ளைகளின் கண்முன்னால் தந்தையர் உயிரோடு கொளுத்தப்பட்டனர். சொத்துக்கள் சூறையாடப்பட்டன. வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. காவல்துறை அனைத்தையும் அமைதியாக வேடிக்கைப் பார்த்தது."2016ம் ஆண்டிலும் இதே பாணியில் பாஜக குண்டர்களால் ஹரியானா மாநிலம் போர்க்களமாய் ஆக்கப்பட்டது. சுமார் 12 நாட்கள் பொதுச் சொத்துக்களை போக்கிரிகள் தீக்கிரையாக்க போலீசே ஒத்துழைத்தது. 30 பேர் கொல்லப்பட்டனர். பல்லாயிரம் கோடி ரூபாய் பாழாக்கப்பட்டது. பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டனர்.அரசாங்கம் கலவரம் செம்மையாக நடக்கிறதோ என வேடிக்கைப் பார்க்கும் பொம்மையாக வீற்றிருந்தது. இப்போது காமுகச் சாமியாரும், காவிகளின் அரசியல் புரவலருமான குர்மீத் ராம்ரஹீம் சிங்கிற்கு எதிராக நீதிமன்றம் பாலியல் வழக்கில் தீர்ப்பளிக்கிறது.

சாமியார் மீது பாலியல் புகாரைக் கூறி, அரசியல் சாமியாரின் அந்தரங்க லீலைகளையும், கொலைகளையும் வெளிக்கொண்டு வந்தது பிற மதத்தைச் சேர்ந்தவர்களல்ல. அவரது மடத்திலேயே பாலியல் வக்கிரக் கொடுமைகளுக்கு தொடர்ந்து ஆளாகி வந்த சாமியாரினிகள் தாம். வாஜ்பாய் காலத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் மோடியின் காலத்தில் முடிவுக்கு வந்தது. நீதியின் வேகத்தைப் பார்த்தால் யாருக்குத்தான் அதைப்பெற மனம் விடுமோ?

ஆனாலும் அராஜகம், பக்தர்கள் போர்வையில் உள்ள பயங்கரவாதிகளால் நடத்தப்படுகிறது. 250 ரயில் நிலையங்கள் சூறையாடப்பட்டுள்ளன. 50க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். பல்லாயிரம் கோடி பொதுச் சொத்து நாசமாக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் பலர் படுகாயம் அடைந்தனர். ஊடக வாகனங்களும் நாசமாக்கப்பட்டுள்ளன.

எல்லாவற்றிற்கும் ஒத்தாசை செய்துவிட்டு, பக்தியின் பெயரால் வன்முறைகள் நடப்பதை ஏற்க முடியாது என்று பசப்புகிறது மோடியின் குரல்.

ராம்ரஹீம் சிங்காக இல்லாமல் ரஹீம் என்பவன் வன்முறை செய்திருந்தால், அதை எதிர்கொள்ளும் அளவுகோல் இப்படியா இருந்திருக்கும். சட்டத்தின் ஆட்சி என்ற போர்வையில் சங்பரிவாரம், குண்டர்களை வைத்து கும்பலாட்சி நடத்தி வருகிறது. குண்டாராட்சி வீழ்த்தப்படாத வரை குடிமக்களுக்கு நிம்மதியும் கிடைக்காது. உலக அரங்கில் இந்தியாவுக்கு மரியாதையும் கிடைக்காது.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.