விடைபெறலாமா விழுமியங்கள்

தலையங்கம்

குடியரசுத் துணைத் தலைவர் பொறுப்பை இரண்டு முறை வகித்த பெருமைக்குரிய ஹமீத் அன்சாரி, ஏற்ற பொறுப்பின் பதவிக்காலம் முடிந்து விடைபெறும் வேளையில் வலியுறுத்தியுள்ள கருத்துக்களை தேசம் கவலையோடு கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது.


பெங்களூருவில் உள்ள இந்திய, தேசிய சட்டப் பள்ளி என்ற பெயரிலான சட்டப் பல்கலைக்கழகத்தின் 25வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றிய ஹமீத் அன்சாரி, இந்நாட்டின் சமயசார்பற்றத் தன்மையை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தத்துவங்களையும், அணுகுமுறைகளையும் மறுஉயிர்ப்போடு மீட்டுருவாக்கம் செய்து, செயல்தளத்தில் அவற்றிற்கு ஒரு வீச்சை வழங்க வேண்டும் என்பதே இன்று நம் முன்னால் நிற்கும் மாபெரும் சவால் என்று பேசியுள்ளார். சமத்துவம், சமயச்சுதந்திரம், சகிப்புத்தன்மை ஆகியவற்றிற்கு புத்துயிர் அளிப்பது மிகவும் தலையாயக் கடமை என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பில் இருந்து விடைபெறும் ஒருவர், இந்நாட்டின் அதிகார மையங்களில் இருந்து அறங்களும், அரசியல் நெறிகளும், விழுமியங்களும் விடைபெற்று விடக்கூடாது என்ற கவலையை வெளிப்படையாகக் கூறும் அளவுக்கு தேசம் ஓர் அபாய திசைநோக்கி அழைத்துச் செல்லப்படும் நிலையை யாரும் உணர்ந்துகொள்ள முடியும். சமத்துவத்தின் நிலைபேற்றையும், சமயச் சுதந்திரத்தின் செயல்பாட்டையும் உறுதிப்படுத்துவதற்கும், ஒழியாமல் காப்பதற்கும், பல்வேறு பரிமானங்களில் அவற்றின் இருப்பைத் தக்கவைப்பதற்கும் பாடுபட வேண்டிய மிகப்பெரிய சவால் நாட்டின் முன் இருப்பதாக ஹமீத் அன்சாரி தனது உரையில் சுட்டிக்காட்டினார்.


பல்வேறு சமயத்தினரும், மொழியினரும், இனத்தினரும் இணைந்து வாழும் தேசத்தில் சகிப்புத்தன்மை என்பது மிகவும் அவசியமான ஒன்று. மேலும், பன்முகத் தன்மையுள்ள தேசத்தின் சமூகக் கட்டமைப்புக்கு சகிப்புத்தன்மை மட்டுமே போதுமானதல்ல, மக்களிடையே புரிந்துணர்வும், மாற்றுத் கருத்தையும் போற்றுகிற மனப்பான்மையும் மிகமிக அவசியம்.


பிற சமயங்களை சகித்தல் என்ற உணர்வைத் தாண்டி அதில் உள்ள உண்மைகளை உணர்ந்து, போற்றுதல் என்ற நிலையை அடைய வேண்டும் என்று தான் விவேகானந்தர் வலியுறுத்தியுள்ளார். அது இன்று தேவையாக உள்ளது.


ஒற்றை தேசியம், ஒற்றைக் கலாச்சாரம் ஆகியவற்றை மிகுந்த சடங்குத் தன்மைகளோடு வலியுறுத்துவதும், அதற்காக ஆக்ரோஷத்தோடு செயல்படுவதும் தேசத்தின் வளர்ச்சிக்கு உதவாது. மாறாக, சகிப்பின்மையையும், வெறித்தனமான தேசிய உணர்வையுமே அது வளர்க்கும்.


பல பத்தாண்டுகளாக சுதந்திர இந்தியா அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அன்பு நெறியை அடிப்படையாகக் கொண்டே இயங்கி வந்துள்ளது. பல்வேறு பழங்களின் துண்டுகளும் சேர்ந்து இருக்கின்ற ‘கனிக்கோப்பை’ போலவே இத்தேசம் திகழ்ந்து வருகிறது.


சமீபகாலங்களில், உள்ளடக்காத் தன்மை கொண்ட சமூக அமைப்பை உருவாக்கும் முயற்சிகள் வீச்சோடு வெளிப்பட்டு வருகின்றன. இது இம்மண்ணின் அரசியல் மற்றும் பண்பாட்டில் பெரும் சேதத்தை ஏற்படுத்தக் கூடியது. தேசிய வெறியை ஊட்டுவதும், சமூகங்களுக்கிடையே பிளவை வளர்ப்பதும் தேசத்தின் மதிப்பை வீழ்த்துவதாகவும், குடிமக்களை கவலையில் ஆழ்த்துவதாகவுமே அமையும் என்று ஹமீத் அன்சாரி குறிப்பிட்டுள்ளார்.


காவி வெறி அரசியலின் காட்டுமிராண்டித் தனங்களை, பூக்களின் மென்மைக் கொண்ட சொற்களால் புலப்படுத்தியுள்ளார் முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி. அமைதிப் பூங்காவான அன்னை தேசத்தை அமளிக்காடாக்கும் முயற்சியில் மதவெறி நரிகள் பெரும் முன்னேற்றம் கண்டுவரும் சூழலில் கவலைமிகு சொற்கள் கண்ணீர்த் துளிகள் போல் உதிர்கின்றன. சொந்த நாட்டு மக்களை மிருகத்தனமாக அடித்துக் கொள்ளும் கும்பல்களும், அந்தக் கும்பல்களுக்கு கொம்பு சீவி ஆசீர்வதிக்கும் ஆட்சியும் இந்தக் கவலைகளுக்கு காரணமாகியுள்ளன.


சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிற நேரத்தில், வெள்ளையர்களிடம் பெற்ற சுதந்திரத்தை வெறியர்களிடம் இழந்துவிடக் கூடாது என்பதில் தேசம் அதிக அக்கறை கொள்ள வேண்டியுள்ளது.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.