மத்திய அமைச்சரின் பொறுப்பற்ற பேச்சு

தலையங்கம்

அணு உலைகளை வேண்டாம் என்று சொல்லும் மாநிலங்களுக்கு மின்சாரம் கிடையாது என்று மத்திய எரிசக்தி துறை அமைச்சர் பியூஸ் கோயலின் பேச்சு, அடிப்படை ஜனநாயக விழுமியங்களுக்கு விரோதமானது.

மக்கள் வாழும் பகுதிகளில் எந்த மாதிரியான திட்டங்கள் வரலாம் அல்லது வரக்கூடாது என்று முடிவு செய்யும் உரிமை மக்களுக்கு உள்ளது. ரசாயன தொழிற்சாலை முதல் அணு மின் நிலையங்கள் வரை மக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடைபெறுவதன் அடிப்படை நோக்கமே, அந்த திட்டம் பற்றி மக்களின் கருத்துக்களை கேட்டறிவதுதான். இந்திய அரசியல் அமைப்பு சட்டம் வழங்கியிருக்கிற அடிப்படை உரிமை இது. மத்திய எரிசக்தி துறை அமைச்சரின் மக்கள் விரோத பேச்சு இதற்கு எதிரான, யதேச்சதிகார அரசியல் பேச்சாகும்.


உலகத்தில் அணு சக்தியை அதிகமாக பயன்படுத்தும் நாடு, பிரான்ஸ், அந்த நாடு தற்போது அணுசக்தியிலிருந்து 75% மின்னுற்பத்தி செய்கிறது, அதை வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் 50% ஆக குறைத்து, வரக்கூடிய ஆண்டுகளில் மேலும் குறைக்கப்போவதாக முடிவுசெய்திருக்கிறது. தன்னுடைய மின் உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை அணு சக்தியை நம்பியிருக்கும் தென் கொரியா, அணு சக்தி பயன்பாட்டிலிருந்து முழுவதும் வெளியேறப்போவதாக தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவும், தன்னுடைய அணுசக்தி பயன்பாட்டை 19 சதவீதத்திலிருந்து 11 சதவீதமாக குறைக்கப்போவதாக அறிவித்திருக்கிறது.


2050-களில் இந்தியாவின் மின்சாரத் தேவை ஆண்டுக்கு 8 டிரில்லியன் கிலோவாட்-மணிகளாக (ளீகீலீ) இருக்கும் என அணுசக்தித்துறை 2004ம் ஆண்டில் மதிப்பீடு செய்தது. 2002-&2003-ல் மின் உற்பத்தி 0.6 டிரில்லியன் கிலோவாட்- மணிகளாக (ளீகீலீ) இருந்தது என்றும், இது 13 மடங்கு அதிகரிக்கும் என்றும் அணுசக்தித் துறையின் ஆய்வு குறிப்பிடுகிறது. மேலும், மக்கள்தொகை அதிகரிப்பைக் கருத்தில் கொண்டபின் (மக்கள் தொகை அதிகரிப்பு சுமார் 1.5 பில்லியனில் [150 கோடி]- நிலைகொள்ளும் எனக் கணிக்கப்படுகிறது) நபர்வாரி மின்சாரப் பயன்பாடு 614 ளீகீலீ யில் இருந்து 5305 ளீகீலீ ஆக, சுமார் 9 மடங்கு உயரும் என்றும் இந்த ஆய்வு முன்னறிவிக்கிறது.


அணு மின்சாரம் இல்லாமல் இவ்வளவு பெரிய தேவையை சமாளிக்க சாத்தியமில்லை என்றும் இந்த ஆய்வு வாதிடுகிறது. 2050-களின் மொத்த மின்சாரத் தேவையில் 25 சதவீதத்தை அணுமின் சக்தி வழங்கும் என்றும் இந்த ஆய்வு மதிப்பிடுகிறது. இக்கூற்றின்படி, 275 ஜிகாவாட் திறன் கொண்ட அணுமின் நிலையங்கள் நிறுவப்பட்டு ஆண்டுக்கு 2 டிரில்லியன் கிலோவாட்-மணி(ளீகீலீ)அளவுக்கான அணு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்றாகிறது.


இந்தளவுக்கு அணு உலைகள் அமைக்கப்பட்டால் இதற்கான பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்வது யார்? போபால் விஷவாயு சம்பவத்தையே சமாளிக்க வக்கற்ற அரசு இத்தனை ஆபத்து மிக்க விளயாட்டில் இறங்குவது பெரும் கேடில் முடியும். மிகப் பாதுகாப்புடன் இயங்கி வருகிறது என்று தம்பப்பட்டம் அடிக்கப்பட்ட ரஸ்யாவின் செர்நோபில் அணு உலை விபத்து ஏற்படுத்திய தாக்கத்தை மறக்க முடியுமா? ஐ. நாவால் ஏப்ரல் 26 தேதி செர்நோபில் பேரழிவு தினமாக அனுசரிக்க படுவது அந்த பேரழிவை மறந்து விடக்கூடாது என்பதற்காகத்தான்.


இந்திய அணு உலைகள் பெரும்பாலும் ரஷ்ய கூட்டுறவுடன் கட்டப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. சொந்த நாட்டிலேயே பாதுகாப்பான அணு உலை அமைக்க முடியாத ரஷ்யா இந்தியாவில் பாதுகாப்பான அணு உலைகளை அமைக்க உதவி வருவது முரண் நகை.


உலகம் முழுவதும் அணுசக்திக்கு எதிரான மன நிலையிலிருக்கும் போது, இந்தியாவின் எரிசக்தி துறை அமைச்சர் இவ்வாறு பேசியிருப்பது அவருடைய பொறுப்பற்ற தன்மையை வெளிக்காட்டுகிறது. குஜராத் மாநிலத்திலுள்ள பாவ் நகர் மாவட்டம், மிதிவிர்தியில் அமையவிருந்த அணு உலைகளை, மக்கள் போராட்டங்கள் காரணமாக விலக்கிக்கொண்டு ஆந்திர மாநிலத்திற்கு மாற்றியிருக்கிறது மத்திய அரசு. அப்படி என்றால் இனிமேல் குஜராத் மாநிலத்திற்கு மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரம் கொடுக்காமல் இருக்க மத்திய அரசு முடிவு செய்யுமா?


கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்க சுரங்கங்களில் கூடங்குளம் கழிவுகள் கொட்டப்படும் என்று அறிவித்த போது, மொத்த கர்நாடக மாநிலமும் போராட்டத்தில் இறங்கியது. போராட்டம் இரண்டு நாட்கள் நடைபெற்றவுடன் அன்றைய மாநில முதல்வர் ‘‘ஷெட்டர்’’ கர்நாடகாவின் எந்த பகுதியிலும் அணுக்கழிவுகளை கொட்ட விட மாட்டோம் என்று அறிவித்தார். மத்திய அமைச்சரின் கூற்றுப்படி பார்த்தால் "கர்நாடக மாநிலத்திற்கு கூடங்குளம் மின்சாரம் போகக்கூடாது, ஆனால் சுமார் 442 விகீ மின்சாரம் கர்நாடகாவுக்கு செல்கிறது.இதற்க்கு காரணம் அரசியல் லாபக் கணக்கே தவிர வேறு என்ன?


தமிழகத்தில் ஏற்கனவே நீட் நுழைவு தேர்வு, ஜி.எஸ்.டி. என்ற பெயரில் மாநிலங்களின் அதிகாரங்கங்களை பறித்துக் கொண்டிருக்கும் மத்திய அரசு மாநிலங்களின் அரசியல் ஸ்திரத்தன்மையற்ற சூழல்களை பயன்படுத்தி பல்வேறு திட்டங்களை திணித்துக் கொண்டிருக்கிறது. இப்போது வெளிப்படையாகவே மாநில அரசுகளை மிரட்டும் தொனியில் பேசுவது மத்திய அரசின் அதிகார திமிரையே காட்டுகிறது. மத்திய அமைச்சரின் இந்த பொறுப்பற்ற பேச்சை விலக்கி கொண்டு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். மத்திய அரசு தனது புதிய அணு உலை அமைக்கும் ஒப்பந்தந்தங்களை ரத்து செய்ய வேண்டும். குறிப்பாக தமிழகத்தில் கூடங்குளம்,கல்பாக்கம் அணு உலைகளின் விரிவாக்க பணிகளை உடனே நிறுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.