மோடி அரசின் மனித வதை

தலையங்கம்

மதவெறியை ஒரு கண்ணாகவும், பெருமுதலாளித்துவ நெறியை மறு கண்ணாகவும் பெற்றுள்ள மத்திய பாஜக அரசுக்கு மக்கள் விரோதம் ததும்பும் நடவடிக்கைகளே சுவாசமாக உள்ளன.


ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்கள் படுகிற துன்பத்தில் இன்பம் காணுவதை இயல்பாக்கிக் கொண்ட மோடியின் ‘சேடிஸ்ட்’ (பிறர் துன்பத்தில் இன்பம் காணும்) அரசாங்கம் அண்மையில், இறைச்சிக்காக கால்நடைகளை விற்கத் தடை விதித்து இந்தியாவையே அதிர வைத்துள்ளது.


மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாறுபாடு அமைச்சகம் மே 23, 2017 தேதியிட்டு வெளியிட்டுள்ள அறிவிக்கையில் மிகக்கொடூரமான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ரமலான் நோன்பு தொடங்கும் காலத்தில், இறைச்சிக்காக கால்நடைகளை விற்கத் தடை விதித்து சட்டம் இயற்றியுள்ள சங்பரிவார அடிவருடி அரசு, முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி மாமிச உணவு உண்ணும் மக்கள் அனைவரின் மீதும் பெரும் கொடுமையை இழைத்துள்ளது.


இளங்கால்நடைகளை விற்கக் கூடாது


இறைச்சிக்காக விற்கவில்லை என உறுதிமொழி தரவேண்டும். விவசாய நிலம் இருந்தால் மட்டுமே கால்நடைகளை விற்கலாம். மாநில எல்லையிலிருந்து 25 கி.மீ, சர்வதேச எல்லையிலிருந்து 50 கி.மீ. தூரத்திற்குள் கால்நடைச் சந்தை இருக்கக்கூடாது. வாங்கியவரும் கால்நடையை இறைச்சிக்கு வாங்கவில்லை என உறுதிமொழி தரவேண்டும்.


இப்படி ஏராளமான கட்டுப்பாடுகளை மாட்டு பக்தர்கள் நாட்டு மக்கள் மீது தீட்டிய கத்திபோல் பாய்ச்சியுள்ளனர். பாஜகவும் அதன் மூதாதை முன்னோடிகளும் பசுப் புனிதத்தை முன்வைத்து பயங்கரவாதங்களை அரங்கேற்றினர்.


கடந்த வாஜ்பாய் ஆட்சியில், அரியானாவில் காவல் நிலையத்தில் மாட்டுத் தோலை வைத்திருந்ததாக 5 தலித்கள் அடித்துக் கொல்லப்பட்டனர். மறுநாள் டெல்லியில், ‘மனிதர்களை விட மாடு உயர்ந்ததா? இவ்வாறு படுகொலை செய்தது நியாயமா?’ என்ற செய்தியாளர்கள் கேள்விக்கு, ‘ஆம் அப்படித்தான் வேதங்களில் உள்ளது’ என்று திமிர்த்தனமாக பதிலளித்தார் அசோக் சிங்கால். மோடியின் ஆட்சியில், உ.பி. தாத்ரியில், முஹம்மது அக்லாக் என்ற முதியவர், வீட்டில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி வெறிக்கும்பலால் வீடு புகுந்து அடித்துக் கொல்லப்பட்டார். ராஜஸ்தானில் பெஹ்லுகான் என்ற பால் வியாபாரி, வளர்ப்பதற்காக வாங்கிய பசுவை, அறுப்பதற்கு வாங்கியதாகக் கூறி சங்பரிவாரக் கும்பல் அடித்தே கொன்றது.


‘மாட்டை அறுப்பவர்களை அடித்தே கொல்லுங்கள்’ என்று ஆணையிட்டார் பாஜக தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சாத்வி பிராச்சி. மாட்டுக்கறி சாப்பிடுவோர் நாட்டை விட்டே வெளியேற வேண்டும் என்றார், பிறகு உ.பி. முதல்வராகி விட்ட வெறியர் ஆதித்யநாத்.


மேற்கண்டவை உள்ளிட்ட அனைத்து பயங்கரவாதங்களும் மோடியின் ஆசிகளுடனே அரங்கேறியுள்ளன என்பதற்கு ஆதாரமாக வெளிவந்துள்ளது, கால்நடை விற்பனைக்குத் தடை விதிக்கும் மத்திய அரசின் அறிவிக்கை. புகழ்பெற்ற வரலாற்றாய்வாளரும் பிறப்பால் பிராமணருமான அறிஞர் டி.என்.ஜா (த்வேந்திர நாராயண் ஜா) எழுதியுள்ள ‘ஜிலீமீ விஹ்tலீ ஷீயீ பிஷீறீஹ் சிஷீஷ்’ என்ற நூலில், இந்து வேதங்களில் மாட்டிறைச்சி உணவு எவ்வாறு போற்றிப் புகழப்பட்டுள்ளது என்பதையும், பிற்காலத்தைய பிஜேபி செய்யும் பித்தலாட்டங்களையும் அம்பலப்படுத்தி உள்ளார். அதனை மக்கள் உரிமையிலும் நாம் பிரசுரித்திருந்தோம். விலங்கு நலம், பராமரிப்பு, பயிற்சி அளித்தல் ஆகியவை தொடர்பான சட்டங்களில், மாநிலப் பட்டியலில் 15வதாக உள்ளன. அரசியல் சாசனத்தின் 243வது பிரிவு இதுகுறித்த விதிகளை உருவாக்கிக் கொள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அதிகாரம் அளிக்கிறது. இந்தியாவை மாநிலங்களற்ற ஒற்றைத் தேசமாய், ஒரு மதம், ஒரு மொழி, ஒரு பண்பாட்டுக்குரிய மதவாத நாடாக மாற்ற ஆசைப்படும் மத்தியக் கோமாளிகள், மாநில அரசுகளின் உரிமையைக் காலில் போட்டு மிதித்துள்ளனர்.


இந்த அறிவிக்கைக்கு எதிராகப் பொங்கி எழுந்துள்ள கேரள கம்யூனிஸ்ட் முதல்வர் பினராயி விஜயன், மத்திய அரசின் கெடுபிடி விதிகளை கேரளத்தில் செயல்படுத்த முடியாதென திட்டவட்டமாக மறுத்துள்ளதுடன், அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதமும் எழுதி, மத்திய அரசின் கால்நடை விற்பனைத் தடை அறிவிக்கையைக் குப்பையில் வீசிடக் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழகத்தின் அனைத்துக் கட்சியினரும் இந்த அறிவிக்கையை எதிர்த்துள்ளனர் ஆளும் அதிமுக (அம்மா) பிரிவு மற்றும் பாஜக தவிர. மத்திய அரசை விமர்சிக்கவே கூடாது என அமைச்சர்களை அறிவுறுத்தியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இவர் எடப்பாடி பழனிச்சாமியா இல்லை பாஜகவின் எடுபிடி பழனிச்சாமியா என்று இவரது கட்சியினரே பேசிக்கொள்கின்றனர்.


‘மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம் இனியுண்டோ’ என்று பாடினான் பாரதி.மனிதர் உணவை மத்திய அரசாங்கமே பறிக்கின்ற கொடுமை இங்கே. பசு என்று ஆரம்பித்த பயங்கரவாதக் கும்பல், காளை, எருமை, ஒட்டகம் என எல்லாப் பிராணிகளையும் இறைச்சிக்காக விற்க முடியாது என்பதை சட்டமாக்கியுள்ளது.


திருவிழாக்களில் பலியிடுவதற்கும் மாடுகளை விற்க கூடாது என்கிறது இந்த அரசாணை. பொதுவாக இது முஸ்லிம்களுக்கு எதிரானது என்று எண்ணப்பட்டாலும் ஒட்டு மொத்தமாக விவசாயிகள், கூலித் தொழிலாளர்கள் என அனைத்து பிரிவு மக்களின் வாழ்வாதாரத்தை சீரழிக்கும் கருப்பாணை தான் இந்த ஆணை. எனவே தான் தமிழகத்தில் உள்ள பிரதான மதசார்பற்ற கட்சிகளான திமுக, காங்கிரஸ், மனிதநேய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய ஏழு கட்சிகளின் தலைவர்கள் ஒருமித்து இந்த ஆணைக்கு எதிராக கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.


2001-2006 காலத்தில் அதிமுக ஆட்சியில், ஜெயலலிதா, கோவில்களில் ஆடு, கோழி பலியிடத் தடைச் சட்டம் கொண்டு வந்தார். நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுக தோற்றது. அடித்தட்டு மக்களின் வயிற்றில் அடித்துள்ள மோடி அரசுக்கு, தக்க பதிலடியை நாட்டு மக்கள் கூட்டாகத் தருவார்கள்.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.