கனம் கோர்ட்டார் அவர்களே

தலையங்கம்

கர்ணப்பரம்பரைக் கதைகளையெல்லாம் விஞ்சி விட்டது. நீதிபதி கர்ணனின் கதை . உச்சநீதிமன்றம் அவருக்கு ஆறுமாதகால சிறைத்தண்டனை விதித்ததும். அவரது கருத்துக்களை ஊடகங்கள் வெளியிடத் தடை விதித்ததும் இந்த நாடகத்தின் உச்சகட்ட காட்சியாய் அமைந்தன.


பதவியில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் சிறைத் தண்டனை விதித்திருப்பது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை. நீதிபதி சி.எஸ்.கர்ணன் சில வாரங்கள் முன்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் 7 பேருக்கு,5ஆண்டு சிறைத் தண்டனையும்,ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது. நீதித்துறையை பீதித்துறையாக்கிய பரஸ்பர அதிரடித் தீர்ப்புகளுக்குப் பின்னணியில் இருக்கும் உண்மைகளை (?) தேசமக்கள் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர்.


ஜனநாயகத்தின் முதன்மைத் தூணாகவும், எளிய மனிதர்களின் கடைசி நம்பிக்கையாகவும் இருக்கின்ற நீதித்துறை,என்ன நிலையை இப்போது அடைந்துள்ளது என்பதை மாண்பமை நீதியரசர்கள் மனசாட்சியோடு சிந்திக்க வேண்டும்.


பிரச்சனைகளின் மையப்புள்ளியாக மாறியுள்ள, நீதிபதி சி.எஸ்.கர்ணணின் பின்புலங்களைச் சுருக்கமாகப் பார்ப்போம். கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம் மங்கலம் பேட்டையருகே உள்ள கர்நத்தம் காலணியில் ஜுன் 12,1955ல் பிறந்த கர்ணணின் தந்தையார் குடியரசுத் தலைவரின் நல்லாசிரியர் விருது பெற்றவர்.


தாயாரும் படித்தவர். ஆத்திராவிடர் நலத் தொடக்கப் பள்ளியிலும் மங்கலம் பேட்டை உயர்நிலைப் பள்ளியிலும் படித்த கர்ணன், விருத்தாச்சலம் கலைக் கல்லூரியில் புகுமுக வகுப்பு (PUC) படித்து விட்டு,தென்னிந்திய முஸ்லிம் கல்விச்சங்கத்தால் (MEASI) நடத்தப்படும், புகழ்பெற்ற சென்னைப் புதுக்கல்லூரில்,மூன்றாண்டு அறிவியல் பட்டப்படிப்பை முடித்து. சென்னை சட்டக் கல்லூரியில் சட்ட கல்வியில் பட்டம் பெற்றார்.

சென்னையின் நீதிமன்றங்களில் உரிமையியல் வழக்குகளை நடத்தி வந்த கர்ணன், சென்னைப் பெருநகர -குடிநீர் வடிகால் வாரிய சட்ட ஆலோசகராகவும், மத்திய, மாநில அரசுகளின் வழக்கரைஞராகவும் பணியாற்றினார். இதன் பிறகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்று எட்டு ஆண்டுகள் பணியாற்றினார். இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைப்படி கொல்கத்தா உயர்-நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். இதனால் கொந்தளித்துப்போன நீதிபதி சி.எஸ்.கர்ணன், பிரதமர் மற்றும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்குப் புகார் மனுக்களை அனுப்பினார். மேலும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் புகார்களையும் முன்வைத்தார். இதைப் பிரதமர் அலுவலகத்துக்கும் புகார் மனுவாக அனுப்பினார். இதை உச்சநீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பாகக் கருதி, கர்ணனை வறுத்தெடுக்க ஆரம்பித்தது. தலித்துகள் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இவருக்குப் பணிகளை ஒதுக்காமல், இவரையே ஒதுக்கி வைத்தது உச்சநீதிமன்றம்.உச்சநீதிமன்றம் பிப் 13,2017 அன்று ஆஜராகுமாறு கர்ணனுக்கு சம்மன் அனுப்பியது.கர்ணன் அதை ஏற்க மறுத்து விட்டு, ஏப் 28,2017 அன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தன்முன் ஆஜராக வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு மனநலப் பரிசோதனை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்த கர்ணன் அந்த 7 உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் மனநலப் பரிசோதனை நடத்துவதற்கு ஆணையிட்டதோடு, பிடியாணையும் பிறப்பித்தார்.


அதன் தொடர் விளைவாக, உச்சநீதிமன்றத்தின் 6மாதகால சிறைத்தண்டனைத் தீர்ப்பும், கர்ணன் கருத்துக்களை ஊடகங்கள் வெளியிடத் தடையும், வந்துவிட, தலைமறைவாகி விட்டார் கர்ணன். இப்பிரச்சினை குறித்து நம்மிடம்"தலித் அடையாளத்தை நீதிபதி கர்ணன் தவறாகப் பயன்படுத்துகிறார். கொடுமையாக ஒடுக்கப்பட்டு வரும் தலித்துகளுக்கு இவர் சட்டப்படியான ஆதரவைக் கூட சரியாகத் தரவில்லை. தனக்கு சிக்கல் வரும்போது தலித் அடையாளத்தைக்கையிலெடுப்பது தவறான முன்னுதாரணமாகிவிடும் " என்றார் உயர்நீதிமன்றத்தின் முக்கிமான (தலித் சமுதாயம் சார்ந்த) வழக்குரைஞர் ஒருவர்.


கர்ண கடூரமான அதிரடிகளை கர்ணன், முன்னெடுத்து, சான்றாண்மைக்குரிய நீதித்துறையை சர்ச்சைக் குரிய தாக்கியதில் நமக்கு உடன்பாடில்லை.உயர்நீதிமன்ற நீதிபதிக்கு அரசியல்சாசனம் பல பாதுகாப்புகளை அளித்துள்ளது. அவர்களை மாவட்ட நீதிபதிகளைப் போல் தகுதியிழப்புச் செய்து விட முடியாது. நாடாளுமன்றம் மட்டும் தான் உயர்நீதிமன்ற நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க முடியும். இதுதான் கலியுக நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு கவச குண்டலமாக இருந்தது. ஆனால் உச்சநீதிமன்றத்தின் அதிரடி அவரைத் தேடப்படும் குற்றவாளி ஆக்கி விட்டது.நீதிபதி கர்ணனின் அதிரடிகளில் நமக்கு ஆயிரம் விமர்சனம் இருக்கலாம். ஆனால் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள நீதிபதிகள், தங்களை வெளிப்படையான விசாரணைக்கு தாங்களே முன்வந்து ஒப்புவித்திருக்க வேண்டும்.


உச்சநீதி மன்றத்தின் அதிரடிகள் எல்லாம், நீதித்துறையில் குற்றங்கள் இருந்தாலும் கூட அதை யாரும் குறை சொல்லக் கூடாது, நீதித் துறையினர் மீது குற்றம் சாட்டுவதே குற்றம் என்பது போல் உள்ளது. கர்ணன் தலித் அடையாளத்தைப் பயன்படுத்துவது தன்னலமானது என்ற வாதம் ஒருபுற மிருக்கட்டும், நீதியில் ஜாதி உணர்வு அறவே இல்லை என சொல்ல முடியுமா?முஸ்லிம்கள் ஜனாதிபதிகளாக இருந்துள்ளனர் என்பதால் முஸ்லிம் சமுதாயம் முழுமீட்சி பெற்றுவிட்டதா? அதுபோலவே தலித் தலைமை நீதிபதியாக இருந்தாலும், தலைவிதி முற்றாக மாறி விடவில்லை. பாதிக்கப்பட்டோரின் அழுகையைப் போக்க வேண்டிய நீதித்துறை பார்த்து சிரிக்கும் நிலைக்கும் ஆளானது வேதனையே....!

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.