முஸ்லிம்களுக்கும், தலித், பழங்குடி மக்களுக்குமான சமூக -நீதியை தொலைத் தொழிக்க பாஜக செய்யும் சூழ்ச்சிகள்

தலையங்கம்

தெலுங்கானாவை ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டு அளவை 4விழுக்காட்டிலிருந்து 12 விழுக்காடாக உயர்த்தி, சமூகநீதி வரலாற்றில் ஒரு சாதனை மைல்கல்லை உருவாக்கியுள்ளது. அதுபோல பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டை 6விழுக்காட்டிலிருந்து 10விழுக்காடாக உயர்த்தியுள்ளது.

தேர்தல் வாக்குறுதியை நேர்மையாக நிறைவேற்றி சாதனை படைத்துள்ள முதல்வர் சந்திரசேகரராவ் பாராட்டுக்குரியவர். ஏப்16, 2017 அன்று முஸ்லிம்கள் மற்றும் பழங்குடியினருக்கு இடஒதுக்கீட்டு அளவை உயர்த்தும் சிறப்பு மசோதா தெலுங்கானா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டு,உடனடயாக குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. தெலுங்கானாவின் மொத்த இடஒதுக்கீட்டு அளவு 68% எட்டியுள்ளது. இதை அரசியல் சாசனத்தின் 9வது அட்டவணையில் சேர்த்து சட்டப் பாதுகாப்பு கொடுக்கவும், சந்திரசேகர்ராவ் அரசு முன் வந்துள்ளது. இதில் தெலுங்கானா தமிழகத்தின் 69% ஐ முன்னுதாரணமாகக் கொண்டுள்ளது.


இந்நிலையில், சந்திரசேகர்ராவ் அரசின் முடிவை அனைத்துக் கட்சிகளும் வரவேற்றுள்ள நிலையில், பாஜக மட்டும் ஆளுமையாக எதிர்த்து, சட்டசபையில் அநாகரீகங்களை அரங்கேற்றி 5 உறுப்பினர்கள் சஸ்பென்ட் ஆகியுள்ளனர்.


சமூக நீதியின் ஜென்ம விரோதியான பாஜக சமூகநீதியை நேரடியாக எதிர்த்தால் கேவலப்பட நேருமென்று, காலந்தோறும் வேறொரு பிரச்சினையை எழுப்பி சமூகநீதிக்குப் பின்னடைவை ஏற்படுத்துவது வாடிக்கையானதே.


வி.பி.சிங் மண்டல் குழு பரிந்துரைக்கு சட்ட வடிவம் கொடுத்த போது தான், பாஜக ராமர் கோவில் பிரச்சினையைக் கையில் எடுத்தது. அத்வானியின் ரதயாத்திரையின் உண்மையான நோக்கம் ராமருக்கு கோவில் கட்டுவது அல்ல.சமூகநீதிக்கு சமாதி கட்டுவதே.


அது போலவே,முத்தலாக் பிரச்சினையை மூளும் தீயாக விசிறி விட்டு, சமூகநீதிக்கு சாவு மணியடித்து விடலாம் என்று மோடி வகையறா, மூடக்கணக்குப் போட்டு,மூர்க்கத் தனமாகப் பேசி வருகிறது. முஸ்லிம் பெண்கள் மீது திடீர் கரிசனம் காட்டும் மோடி அரசு, 2002 குஜராத் கலவரங்களின் போது கொல்லப்பட்ட, பாலியல வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட, சூலத்தால் கர்ப்ப வயறு கிழிக்கப்பட்ட பெண்களுக்கு என்ன நீதியை அளித்துள்ளது.


இஹ்சான் ஜாஃப்ரி என்ற காங்கிரஸ் தலைவர்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரைக் கொன்ற கும்பலுக்குத் தண்டனை பெற்றுதர, நீதிமன்றப் படிக்கட்டுகளில் நெடும் போராட்டம் நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஜாக்கியா ஜாஃப்ரிக்கு நீதி கிடைத்துள்ளதா?


கௌசர் பானுவின் கர்ப்ப வயிற்றை சூலத்தால் கிழித்து, சிசுவை வெளியில் எடுத்துப் போட்டுக் கொளுத்திய கொடியவர்களுக்கு மோடி அரசு தண்டனை கொடுத்ததா?அவர்களைப் பாராட்டி பரவசப்பட்டவர் அல்லவா, நமது பா(ரா)தப் பிரதமர்.


முத்தலாக் பிரச்சினையில் முஸ்லிம் பெண்ணுலகம் முழுவதும் பாதிக்கப்பட்டு, பதற்றமுற்று நிற்பது போலவும், அவர்களைப் பாதுகாத்திடவும், நீதி வழங்கிடவும் மோடி அரசு வந்திருப்பது போலவும், போலியான சித்திரத்தைத் தீட்ட முயல்கிறது மத்திய அரசு. அதனால் தான் முஸ்லிம்களின் பிரச்சினை முத்தலாக் மட்டும் தான் என்று நிறுவப் பார்க்கிறது.


கல்வி வேலை வாய்ப்பில் காலங்காலமாய் முஸ்லிம் சமூகத்தின் மீது நிகழ்த்தப்பட்டு வந்துள்ள புறக்கணிப்புகளையும் சதிகளையும், பல்வேறு ஆய்வறிக்கைகள் அம்பலப்படுத்தியுள்ளன. அரசு அதற்குத் தீர்வு காண முயன்றால் பாஜக பரிவாரங்கள் பாய்ந்து பிராண்டுகிறார்கள்?


இடஒதுக்கீட்டின் மொத்த அளவு 50% சதவீதத்துக்கு மேல் போகக் கூடாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஒரு துருப்புச் சீட்டாக்கி, தெலுங்கானா முஸ்லிம் இடஒதுகீட்டை ரத்து செய்யப் பார்க்கிறது. ரத்தத்தில் பூக்கும் தாமரை.


இதே பாஜக, தான் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் அதிகளவில் உள்ள ஜாட்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரித்ததை தெலுங்கானா விவகாரத்தில் வசதியாக மறந்து விடுகிறது. (மறைத்து விடுகிறது)


முஸ்லிம்களுக்கும் தலித் பழங்குடி மக்களுக்குமான சமூக -நீதியை தொலைத் தொழிக்க பாஜக பல சூழ்ச்சிகளை செய்து வருகிறது. முத்தலாக் விவகாரமும் அதில் ஒன்று. மக்கள் விழிப்போடு இருந்து,பாஜக பரிவாரங்களின் பயங்கர சதிகளை முறியடிக்க வேண்டும்...