மரணப்படுக்கையில் மனித உரிமைகள்

தலையங்கம்

தூத்துக்குடி விமான நிலையத்தில் கனடாவில் மேற்படிப்பு படித்து வந்த மாணவி சோபியா என்பவர் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனைப் பார்த்து பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று முழக்கமிட்டார்.

அதற்காக சோபியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளி வந்துள்ளார். ‘பா.ஜ.க.வின் பாசிச ஆட்சி ஒழிக’ என்று சொல்லும் ஒரு மாணவியிடம் தங்கள் ஆட்சி ஜனநாயக ஆட்சி என விளக்கம் சொல்லத் துப்பில்லாமல், போலீசிடம் புகார் கொடுத்து மாணவியைக் கைது செய்து சிறைப் படுத்தியுள்ள இந்த ஆட்சி, பாசிச ஆட்சியின்றி வேறு என்ன?. தனது பெற்றோர்களுடன் பயணம் செய்த
சோபியா தூத்துக்குடி விமான நிலையத்தில் விமானத்திலிருந்து இறங்கும் போது தனது உள்ளக் குமுறலை வெளிப்படுத்தும் விதமாக பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று முழக்கமிட்டுள்ளார். ஆளும் கட்சி ஒன்றை எதிர்த்து முழக்கமிடுவது ஜனநாயகத்தில் அங்கீகரிக்கப்பட வடிவம்தான்.


பாசிச ஆட்சி என்று கோஷம் போடுவது கலவரத்தைத் தூண்டுவது என இந்திய தண்டனைச் சட்டம் 505 ன் கீழ் வழக்குப் பதிவு செய்து அவமானப்படுத்துவது எந்த வகையில் நியாயம் ? காவல்துறை போடும் வழக்கில் எல்லாம் இயந்திர கதியில் ரிமாண்ட் செய்யக்கூடாது என்றும் அவ்வாறு செய்தால் அந்தக் குறிப்பிட்ட நீதிபதி மீது உயர் நீதிமன்றம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என அர்நேஷ் குமார் எதிர் பீகார் மாநிலம் என்ற வழக்கில் 2.6.2014 அன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் நீதிமன்றம் இவ்வாறு அந்த மாணவியைச் சிறைப்படுத்தியது அறமற்ற செயலாகத்தான் பார்க்கப்படுகிறது
பல வழக்குகளில், முழக்கம் போடுவது கருத்துரிமை என நீதிமன்றம் சுட்டிக் காட்டியுள்ளது. கேரளாவில் “தேர்தல் சமயம் வாக்குச் சாவடியின் முன் தேர்தல் பாதை திருடர் பாதை என்றும் ஆயுதப் போராட்டம் மூலம் ஆட்சியைப் பிடிப்போம்” என்றும் முழக்கமிட்ட வழக்கில் (அரவிந்தன் எதிர் கேரளா மாநிலம் 1983) அம் மாநில உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சந்திர சேகர மேனன் என்ன சொன்னார்? ஆயுதப் போராட்டம் மூலம் ஆட்சியைப் பிடிப்போம் எனச் சொல்வது ஆட்சியைக் கவிழ்ப்பதாக பொருளல்ல, அது ஒரு வகை அரசியல் கல்வி. அதே போன்று ’காலிஸ்தான் ஜிந்தாபாத்’ என முழக்கமிட்டவர்களைக் கைது செய்து தேசத் துரோகம் என குற்றம் சாட்டியபோது..


உச்ச நீதிமன்றம் “பல்வந்த் சிங் மற்றும் சிலர் / எதிர் ./ பஞ்சாப் மாநில அரசு என்ற வழக்கில் 1.3.1995 நீதிபதி டாக்டர். ஆனந்த் மற்றும் பைசன் உத்தின் அமர்வு இது போல சில முறை தனி நபர் கோஷம் போடுவதால் இந்திய இறையாண்மைக்கு எந்தப் பாதிப்புமில்லை எனக் கூறி தள்ளுபடி செய்தனர். (Raising of some lonesome slogan, a couple of times by two individuals , without anything more, did not constitute any threat to government of india as by law established not could the same give rise to feelings of enmity or hatred among different communities or religion or other groups.)


பொய் வழக்குப் போட்டுக் காவல்துறை ஆட்சியாளர் களைத் திருப்திப்படுத்த முயலும் சமயம், பொது மக்களின் கருத்துரிமையையும், தனி மனித சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் நீதிமன்றத்தின் முன் உள்ளது. அது இயந்திர கதியில் அரசாங்கம் செய்யும் கைதுகள் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலையின் வெளிப்பாடு என்பதில் சந்தேகமே இல்லை தனது சொந்தமண்ணில் நிகழ்ந்த ஸ்டெர்லைட் படுகொலைகளுக்கு எதிராக பொங்கி அந்த வீரமங்கை குரல் கொடுத்தார் . இதற்காக பொங்குபவர்கள் தங்கள் எதிர்ப்பினை எவ்வளவு அறமற்ற முறையில் பதிவு செய்துள்ளனர் என்பதை பார்த்தோமானால் காலணிகளை வீசுவதும் எதிர் கருத்துடையவர்கள் மீது முகத்தில் கறுப்புச் சாயம் பூசி அவமானப்படுத்தியும் சுவாமி அக்னிவேஷ் என்ற 80 வயது முதியவரைக் கூட இரக்கமற்ற முறையில் தாக்கி ஆடைகளை கிழித்ததையும் எப்படி எடுத்துக்கொள்வது ?


மத்திய அரசும் மாநிலங்களில் ஆளும் பாஜக அரசுகளும் சட்டிஸ்கரில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் போராடி வருபவரும் வழக்கறிஞருமான சுதா பரத்வாஜ் மற்றும் வெர்னான் கன்சல்வஸ், கவுதம் நவ்லகா ஆகியோரை கைது செய்துள்ளனர் மும்பை, டில்லி, ராஞ்சி, கோவா மற்றும் அய்தராபாத் ஆகிய இடங்களில் செயற்பாட்டாளர்களின் வீடுகளில் சோதனைகள் நடந்துள்ளன. இந்திய குற்றவியல் சட்ட பிரிவுகள் 153 எ, 505, 117 120 மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகள் கீழ் சுதா பரத்வாஜ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


பீமா கோரோகான் பிரச்சனையை ஒட்டி ஏற்கனவே தலித்துள், பெண்ணிய செயல்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ளபோது, இந்த கைதுகளும் சோதனைகளும் புனே காவல்துறையின் கட்டளைப்படியே நடந்துள்ளன. அமைதியாக நடந்த பீமா கோரேகான் நிகழ்வை பயங்கரவாத நிகழ்வு போல காட்ட முயற்சிப்பது அடிப்படையற்றது. கண்டனத்துக்குரியது. மத்தியிலும் மகாராஷ்டிராவிலும் உள்ள பாஜக அரசாங்கங்கள் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்களை கைது செய்வது, பயங்கரவாதச் செயல்களுக்காக கருப்புச் சட்டங்களின் கீழ் வழக்குகள் பதிவு செய்வது அதிர்ச்சி தந்தாலும் ஆச்சரியம் தரவில்லை. தலித்துகள் மீது தாக்குதல் நடத்தும், பயங்கரவாதத் தாக்குதல்களை திட்டமிடும், எதிர்ப்புக் குரல் எழுப்புபவர்களை படுகொலை செய்யும் சனாதன் சன்ஸ்தா, சிவ பிரதிஸ்தான் போன்ற அமைப்புகளை பிரதமர் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தேசப் பற்றாளர்கள் என்று அழைப்பதும் நடக்கிறது.


இந்த கைதுகளும் சோதனைகளும், நாடாளுமன்ற தேர்தல்கள் நெருங்கும் நேரத்தில் எதிர்ப்புக் குரல் எழுப்புபவர்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்தும் முயற்சியே ஆகும். இந்தக்கைதுகளையும் சோதனைகளையும் வன்மையாகக் கண்டிக்கிறோம். மோடி ஆட்சியின் அறிவிக்கப்படாத அவசர நிலையில் செயற் பாட்டாளர்களும், எதிர்ப்புக் குரல் எழுப்புபவர்களும் படுகொலை செய்யப்படுகிறார்கள்; அரசியல் சாசனச் சட்டத்தின் 19(1)(ணீ) பிரிவின் படி சோபியாக்களுக்கும் நாடுமுழுவதும் ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகும் அனைவருக்கும் முழு உரிமை உண்டு (“All citizens shall have the right to freedom of speech and expression”)
இதனை அரசியல் சாசன சட்டத்தின்படி பதவியேற்றுள்ள அரசே மறுதலிப்பதும் காலில் போட்டு மிதித்தும் மக்களாட்சிக்கு எதிராக பாசிச பாதையை நோக்கி நடைபோடுவதும் இந்த அரசு மக்கள் மன்றத்தில் கடும் எதிர்விளைவை சந்திக்க போகிறது. வாக்குரிமை எனும் கூர்வாளை வைத்துக்கொண்டு மக்கள் அறச் சீற்றத்துடன் காத்துக்கொண்டு நிற்கிறார்கள் என்பதை மட்டும் சொல்லி வைக்கிறோம்.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.