குஜராத் தேர்தலுக்குப்பின் பாஜகவின் கதி என்னவாகும்?

வட மரைக்காயர் பதில்கள்

குஜராத் தேர்தலுக்குப்பின் பாஜகவின் கதி என்னவாகும்? எம்.சிராஜீதீன், சின்னமன்னூர்.

ரொம்ப அவசரப்படாதீர்கள் மாநில காங்கிரசின் அடுத்தடுத்த அடிகள் மூலமே பாஜக நிலை குறித்து முடிவுக்கு வரமுடியும் . ராகுல் மிகுந்த சிரத்தை எடுத்து பரப்புரை களம் அமைத்து செயல்படுகிறார் . ஷொராபுதீன் போலி மோதல் கொலை வழக்கை மீண்டும் விசாரிக்கவேண்டும் என்கிறார் பாஜக மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா, பொதுத்தேர்தலில் பாஜகவை எதிர்த்து பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்கிறார் முன்னாள் பாஜக மத்திய மைச்சர் அருண் ஷோரி. குஜராத்தில் பாஜக எழ முடியாத அளவு தோல்வியை சந்திக்கும்போது அதன் முன்னாள் மூத்த தலைவர்களே அதற்கு மூடுவிழா நடத்த ஆயத்தமாகி வருகிறார்கள்.

தினகரன் & பாண்டே பற்றி? எம்.காதர்பாட்ஷா, சென்னை 79.

தினகரனிடம் சிக்கி சின்னாபின்னமான பாண்டே என தமிழ்நாடே குதூகலிக்கும் நிலை ஏற்பட்டது. நாம் அறிந்தவரையில் சமூக வலை தளங்கள் உள்ளிட்ட அனைத்து மட்டங்களிலும் குதூகலிப்பது இது இரண்டாவது முறை என்று எண்ணுகிறேன். அந்த முதலாவது சந்தோசம் எது என கேட்கிறீர்களா? திருவாளர் ஹெச்.ராஜா என்ற ஹரிஹர ராஜா சர்மா சாரணர் தேர்தலில் உலக சாதனையை (!) முறியடிக்கும் வகையில் 52 வாக்குகள் வாங்கினாரே அப்போது தமிழக மக்களிடையே கொண்டாடும் உணர்வு இதைபோன்றே வெளிப்பட்டது. தந்தி டிவி பாண்டே,
ஹெச்.ராஜா போன்றவர்களை மக்கள் எந்த அளவு தாறுமாறாக நேசிக்கிறார்கள் என்பதை அவர்கள் புரிந்து பூரித்து போகட்டும்.

தமிழ்நாடு பாடத்திட்டத்திற்கான வரைவு குறித்து உங்கள் கருத்து யாதோ ? என்.அப்துல்வஹ்ஹாப்,பாடி.

தமிழ்நாடு அரசு புதிய பாடத்திட்டத்திற்கான வரைவைத் தயார் செய்துவெளியிட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மாற்றம் செய்யப்படாமல் இருந்த பாடத்திட்டத்தை மாற்றி அமைக்கும் அரசின்
முயற்சியை பாராட்டுவோம். தாய்மொழிவழியில் கல்வி பயில முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளதும், நமது தொடர்பு மொழியானஆங்கிலம் சிறப்பாக பயிற்றுவிக்கப் படும் என்று கூறப்பட்டுள்ளதும் நிச்சயம் வரவேற்கத்தக்க அம்சங்கள்.


நவீனமாற்றங்களுக்கேற்றவாறு குழந்தைகளின் திறன்களை வளர்த்திடும் நோக்கத்துடன் புதிய பாடத்திட்ட வரைவு வெளியிடப்பட்டுள்ளதாகவே நம்புகிறோம் வரைவின் மீது கருத்துச் சொல்ல போதுமான அவகாசம் வழங்கப்படவில்லை. கூடுதல்அவகாசம் வழங்கப்படவேண்டும், மண்டலவாரியாக ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்கள் கலந்துகொள்ளும் வகையிலான கலந்துரையாடல் கூட்டங்களை அரசு நடத்த வேண்டும். ஒரு சில பாடங்கள் தவிர அனைத்துப் பாடங்களுக்கும் ஆங்கிலத்தில் மட்டுமே தான் வரைவு வெளியிடப்பட்டுள்ளது. எனவே அனைத்துப் பாடத்திட்ட வரைவுகளையும் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் வெளியிட வேண்டும்எனவும், பொதுமக்களும் பெற்றோரும்பங்கேற்க வேண்டும் கருத்து தெரிவிக்க வேண்டும் எனில் அனைத்துப் பாடவரைவுகளும் தமிழில் இருப்பது அவசியம். குறிப்பாக அண்மைக்காலங்களில் வடஇந்தியாவில் நடக்கும் மதவாத வெறுப்பூட்டும் கருத்துக்கள் தமிழ் கூறும் நல்லுலகில் இடைச்செருகலாக கூட திணித்து விட துளியும் இடம் கொடுத்து விடலாகாது. மேலும் மனித உரிமைகள், சமூக அக்கறை , சமூக நீதி உள்ளிட்ட அம்சங்கள் கண்டிப்பாக சேர்க்கப்பட்டு பயிற்றுவிக்கப்படவேண்டும்


இரட்டை இலை விவகாரத்தில் வெற்றி யாருக்கு ? ஆர். எம்.பாசித், நாகப்பட்டணம்.

தமிழக பாஜக முதல்வர் எடப்பாடிக்கு வெற்றி. சின்னம்மா சின்னம்மா என்று சொல்லி சொல்லியே சின்னமே இல்லாத அம்மாவாக்கி விட்டார்கள் பாவம் சசிகலா. இரட்டை இலை விஷயத்தில் சசிகலா தரப்புக்கு தோல்வி என்றால் மோடி ரசிகர் மன்ற தளபதி ஓ.பி.எஸ்.க்கு படுதோல்வி என்றே சொல்லவேண்டும். தியானம் தர்ம யுத்தம் எல்லாம் வீணாகிவிட்டதே. இனி சன்யாசம் என்று ஒரு வியூகத்தை அறிவித்து ஒரேயடியாக சாமியாராக போவதுதான் அவருக்கு முன் உள்ள ஒரே வழி.

நாட்டை காப்பாற்ற தேசிய வெறி கொண்டவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என வேண்டுகோள் விடுத்த குஜராத் மாநில ஆர்ச் பிஷப் தாமஸ் மேக்வானுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளதே?
எம்.ஆரோக்கியராஜ், திருச்சி.

தேர்தல் ஆணையத்தின் இந்த செயல் கண்டு புல்லரிக்குதல்லவா. உபியின் ஆதிதயநாத் , சாக்ஷி மகராஜ், சாத்வி பிராய்ச்சி போன்ற ஏராளமானவர்கள் ஆளும் நாட்டில் கிறிஸ்தவ பிஷப்புக்கு நோடீஸ் அனுப்பாமல் சங்கரமடத்திற்காக அனுப்புவார்கள் ?