வைகோ சினிமாவில் குதிக்கப்போகிறாராமே?

வட மரைக்காயர் பதில்கள்

வைகோ வீர வேலு நாச்சியார் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் குதிக்கப்போகிறாராமே? கா.ரமேஷ் குமார், சென்னை 5.

சபாஷ் நடிகர்கள் மட்டும் அரசியலில் குதித்து அரசியல் உலகை அல்லோலகல்லோல படுத்தலாம்.அரசியல்வாதி சினிமாவில் குதித்து அதை சீரழிக்க கூடாதா?தட்டிக்கேட்க ஆளில்லாமல் தட்டு கெட்டு ஆடினார்கள் இப்போது என் குருநாதருக்கு பதில் சொல்லட்டும் என மீசை முறுக்குகிறார்.கோடம்பாக்கத்துக்கு தனது குடி இருப்பை மாற்றிக்கொண்டிருக்கும் அதிரடி அரசியல்வாதி ஒருவர்.

மரைக்காயரை சமீபத்தில் கவர்ந்த பத்திரிகையாளர் யாரோ? கே. எம். அப்துல் லத்தீப் மதுரை 20

தி வைர் இணையதளத்தின் பத்திரிகையாளர் ரோகிணி சிங் பத்திரிக்கையாளர் அனைவரும் பெருமிதப்படும் அளவுக்கு சாதனை புரிந்த ஊடகப்போராளி.இந்நாட்டின் அதிகார உச்சத்தின் இரட்டையர்களில் ஒருவரான அமித்ஷாவின் அருமை புத்திரன் ஜெய்ஷா ஊழல் முறைகேடுகள் குறித்து அம்பலப்படுத்தியவர்.கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இது குறித்து கடும் உழைப்பை கொடுத்து புலனாய்வு செய்து லாலா சேட்டுக்கடை கல்லாவில் உக்காரும் நபர்களை போல் தோற்றமளிக்கும் அமித்ஷா, மற்றும் அவரது மகனின் கொட்டத்தை எழுதுகோலால் கிழித்தறிந்துள்ளார்.அவர் இது குறித்து ஆய்வு செய்த கால கட்டத்தில் தான் கவுரி லங்கேஷ் சிட்டுக்குருவியை போல் அவர் வீட்டு வாசலில் சுட்டு வீழ்த்தப்பட்டார்.அது குறித்த அச்சம் சிறிதும் இன்றி உண்மைகளை உணர்த்த களமாடினார் . இதே காலகட்டத்தில் அமித்ஷா மகன் விவகாரம் குறித்து விவாத நிகழ்ச்சி நடத்த தயங்கி குளிர் ஜுரத்தில் நடுங்கிய தேசிய மற்றும் மாநில ஊடகங்கள் ரோகிணி சிங்கின் காலில் ஒட்டிய துரும்புக்கு கூட இணையாக மாட்டார்கள் ஆர்னாப் ஊடக உலகின் அவமானம் என்றால் ரோகிணி சிங் ஊடக உலகின் அலங்கார மகுடம் எனலாம்.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறித்த சர்ச்சைகள் அடங்கிவிட்டதா ? ஏ.தஸ்லீம்,பெங்களுரு.

ட்ரம்ப் அடங்கினால் தானே அவரை குறித்த சர்ச்சைகள் அடங்கும். தன்னை சேர்ந்தவர்களால் கூட சர்வதேச சமூகத்திற்கு ஏதாவது நன்மைகள் நடந்து அதனால் தனக்கும் நல்ல பெயர் வந்து சேர்ந்து விடக்கூடாதே? என்ற கூடுதல் எச்சரிக்கையுடன் கோக்கு மாக்கு தனமாக அலப்பறை செய்கிறார்.இவரது ஆட்டம் குறித்து புரட்சியாளர் சேகுவாராவின் புதல்வி சமீபத்தில் கூறிய கருத்து கவனிக்கத்தக்கது ட்ரம்பின் பைத்தியக்கார தனத்தால் ஒட்டுமொத்த மனித குலமே அழிந்து விடும் அபாயம் இருப்பதாக சே வின் புதல்வி அலெய்டா அடித்து கூறிவிட்டார் அமெரிக்கா வேண்டுமானால் அடங்கலாம் ஆனால் ட்ரம்ப்? ம்ஹ¨ம்.

ரஜினியும் கமலும் சேர்ந்து வந்தாலும் அரசியலில் வெல்ல முடியாது என்கிறாரே அவரது அண்ணன் நடிகர் சாருஹாசன் ? ஐ. அஷ்பாக் அஹ்மது ஜித்தா (மின்னஞ்சல்)

யதார்த்தம் அதுதான்.60ல் இருந்து 70 விழுக்காடு அதிக பட்சம் வாக்குகள் பதிவாகும் நிலையில் அரசியல் மயப்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் மனம் விரும்பும் கட்சிக்கு மட்டுமே வாக்களிப்பார்கள்.அதில் ரஜினியும் கமலும் சேர்ந்து 10 விழுக்காடு வாங்க முடியும் என சாரு கணிப்பது கூட அவரது ஒரு பக்க சார்பு மட்டுமே. எம்ஜி ஆர் திமுகவின் மாநில பொருளாளராக இருந்தார் .தனிக்கட்சி தொடங்கிய போது திமுகவின் முக்கிய புள்ளிகளை தன்கட்சியில் இணைத்தே தேர்தலை சந்தித்தார்.திமுகவின் வாக்குகளில் பிளவை ஏற்படுத்தினார்.காமராஜின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடம் பழைய காங்கிரஸ் வாக்காளர்களை எம்.ஜி.ஆருக்கு வாக்களிக்க வைத்தது. காமராஜின் மறைவிற்கு பிறகு அவருக்கு என்று இருந்த வாக்குகளை பங்கு போட அன்று தமிழகத்தில் அடித்தளமே இல்லாத இந்திரா காங்கிரசும் எம்.ஜி ஆரின் அதிமுக மட்டுமே இருந்தது.மேலும் காமராஜருக்கான வாக்கு வங்கியை 1971 தேர்தலில் கலைஞர் கருணாநிதி கடுமையாக சூறையாடி இருந்தார் இன்று ஜெயலலிதா மறைவால் ஏற்பட்ட வெற்றிடம் அதிமுகவின் பிரிந்த அணிகளால் கண்ணா பின்னாவென சின்னாபின்னப்படுத்தப்படும். இதில் அதிமுகவிற்கே ஒரு நயா பைசா அளவு நன்மையையும் கிடைக்காது என்பதே உண்மை நிலை . இதில் ரஜினியும் கமலும் எங்கே வெற்றியினை ஈட்டப்போகிறார்கள் ? என்பதை தான் ஸ்ரீனிவாச ஐயங்காரின் குருவான விடுதலை போராட்ட வீரர் யாகூப் ஹாசனின் பெயரில் ஹாசன் என்பதை தன் பெயரோடு சேர்த்து அழைக்கப்படுபர்களில் மூத்தவரான திரு சாருஹாசன் சொல்லி இருக்கிறார் ஆனால் அவரது மற்றொரு கருத்து தான் சற்றேநெருடுகிறது.மோடியை ,பாஜகவை இன்னும் பல காலத்திற்கு யாரும் அசைக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார்.பாவம் 2014ம் ஆண்டு நியூஸ் பேப்பர்களை மட்டுமே தூசு தட்டி மீண்டும் மீண்டும் படிக்கிறாரோ? யார் அங்கே தாத்தாவுக்கு புதிய பேப்பர்களை கொடுங்கப்பா !


மாமியார் உடைத்தால் மண் சட்டி மருமகள் உடைத்தால் பொன்சட்டி என்ற பழைய மொழிக்கு புதிய உதாரணம் ப்ளீஸ்! பாத்திமா ஆப்ரீன், ராஜபாளையம்.

மிக உயர்ந்த சமூகத்தின் அறிவாளிகள் உருவாவதாக நம்பப்படும் ஐ ஐ டி சென்னையில் 2014 முதல் 2016ம் ஆண்டு வரை 220 மான்களும், எட்டு கலைமான்களும் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் 517 விலங்குகள் அங்கு இறந்துள்ளன என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் விலங்குகள் நல வாரியமும் இதனைப் பற்றி விரிவாக விசாரித்து வருகிறது. இது தகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி அறியப்பட்ட உண்மையாகும். இது குறித்து பசுமை தீர்ப்பாயமும் விசாரிக்கிறதாம். ஐ.ஐ.டி. வளாகத்தில் வாகனங்களால் மோதியும், உணவு கழிவுகளை புள்ளி மான்களும் கலை மான்களும் உண்டு நோயற்று உயிரிழக்கிறதாம்.நன்றாக சிந்தித்து பசுவை கொன்றதாக கூச்சல் போட்டு எத்தனை உயிர்கள் காவு வாங்கப்பட்டன. மான் வேட்டையாடியதற்காக ஹிந்தி நடிகர் ஒரு மான் கான் என்ற, சல்மான்கானை என ஆண்டுக்கணக்காக சிறைச்சாலைகளுக்கும் நீதிமன்றங்களுக்கும் இழுத்தடித்த நடவடிக்கை எங்கே? ஐ.ஐ.டி. வளாக மான்கள் படுகொலை பெரிய செய்தியாக கூட பேசப்படாத நிலை எங்கே? பழமொழி கச்சிதமாக பொருந்துகிறது.