கலைஞர் மட்டும் முழு உடல் ஆரோக்கியத்தோடு இருந்திருந்தால் இன்றைய தமிழக அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு கண்டிருப்பாரா?

வட மரைக்காயர் பதில்கள்

கலைஞர் மட்டும் முழு உடல் ஆரோக்கியத்தோடு இருந்திருந்தால் இன்றைய தமிழக அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு கண்டிருப்பாரா? எச்.அனஸ் ரஹ்மான் பாடி,சென்னை-50.

உங்கள் கருத்தினை ஒட்டி சிலர் கூறுகிறார்கள் கலைஞர் மட்டும் பழைய துடிப்போடு இருந்து இருந்தால் இன்றைய ஆட்சியை எப்போதோ கவிழ்த்து இருப்பார் என்றும் அவர் உடனடியாக ஆட்சியை பிடித்து இருப்பார் என்றும் சிலர் பரப்புரை செய்கிறார்கள். அது அறிவார்ந்த பரப்புரையா என்றால் இல்லை . அது பதட்ட பரப்புரை மட்டுமே. மேலும் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கலைஞர் போல் இல்லை இன்னமும் கவிழ்க்காமல் இருக்கிறாரே? என்று உசுப்பேற்றி கட்சியை அவரது அரசியல் எதிர்காலத்தை ரணகளமாக்கும் முயற்சியே . 1989 ல் எம் ஜிஆரின் மறைவினால் அதிமுக பிளவுண்டு நீயா நானா பலப்பரீட்சையில் ஈடுபட்ட போது கலைஞர் வேடிக்கை மட்டுமே பார்த்தார். அதை பயன்படுத்தி ஆட்சியை பிடிக்க எந்த முயற்ச்சியும் மேற்கொள்ளவில்லை அடுத்த 6 மாதத்தில் ஜனநாயக முறையில் மக்களை சந்தித்து ஆட்சிக்கு வந்தார். தற்போதும் கிட்ட தட்ட அதேநிலை . அன்று ஜெயலலிதா என்ற செல்வாக்கு மிக்க நபராவது எம்.ஜி.ஆருக்கு பின் நானே என்று சொல்லாமல் சொல்லி அரசியல் அரங்கில் சுறுசுறுப்புடன் களமாடி இருந்தார். ஆனால் இன்று ஜெ பாணியில் சொல்வதானால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை அதிமுகவில் சவாலான ஆளுமை ஒன்று ஸ்டாலினுக்கு சரியான போட்டியான ஒரு அதிமுக ஆளுமை ஒன்று கூட கண்ணுக்கெட்டிய தூரம் வரை தென்படவில்லை எனும் நிலையில் ஸ்டாலின் ஏன் அவசரப்படவேண்டும்? கலைஞர் துடிப்புடன் இருந்தாலும் ஜனநாயக வழியில் தேர்தலை சந்தித்தே ஆட்சியை பிடித்திருப்பார் . ஸ்டாலினும் அதே வழியை கடைபிடிக்கிறார்.


சீனாவில் குர்ஆணை வீட்டில் வைத்து இருப்பவர்கள் உடனடியாக அரசிடம் ஒப்படைக்க வேண்டுமாமே இல்லையெனில் கடும் தண்டனையாமே.தொழுகை விரிப்பு உட்பட சமயம் தொடர்பான எந்த பொருள் இருந்தாலும் தண்டனை விதிக்கப்படும் என தகவல்கள் வருகின்றனவே உண்மைதான் என்ன ? மர்சூக் ரஹ்மான், திருப்பூர்.


சீன சின்ஜியாங் மாகாணத்தில் இருந்து தன்னாட்சி கேட்டு போராடி வெளியேறி நாடு கடந்த உகர் முஸ்லிம் காங்கிரஸ் என்ற அமைப்பின் செய்தி தொடர்பாளர் டில்ஸாட் ரஷீத் இத்தகவலை ஊடகங்களிடம் தெரிவித்துளார்.குர்ஆன் வைத்துள்ளவர்கள் கடும் சோதனைக்கும் தண்டனைக்கும் ஆட்படுத்தப்படுவதாக கூறினார்.அதனை சீன அரசு மறுத்துள்ளது. அது அடிப்படையற்ற குற்றசாட்டு என்றும் கூறியுள்ளது.ஒருவேளை இந்த குற்றசாட்டு உண்மையாக இருக்கும் பட்சத்தில் உலக பொருளாதார வல்லரசாக உச்சாணி கொம்பில் இருக்கும் சப்பை மூக்கன்களுக்கு அது சரிவின் தொடக்கமாக இருக்க கூடும் பார்க்கலாம்.

பாஜக,கமல், ரஜினி திடீர் என தமிழக அரசியல் களத்தில் வேகமாக வீரமாக களமிறங்கியுள்ளது எதை காட்டுகிறது ? த.செந்தில்நாதன், சென்னை&20


அனாதைகளின் சொத்தை (அதிமுக வாக்கு வங்கி) ஆட்டையை போட நினைக்கும் பேட்டை தாதாக்களை போல அவர்கள் தமிழக அரசியலை குறிவைக்கிறார்கள். ஆனால் அப்படி ஒன்றும் எந்த வாக்குவங்கியும் இல்லை என்பதை அறியும்போது நொந்து போவார்கள்.


மோடி ஆட்சியில் பத்திரிக்கை சுதந்திரம் எப்படி இருக்கிறது? ஐ.எம்.பாரூக்,நாகப்பட்டினம்


முதல் நாள் மோடி பத்திரிக்கை அதிபரை சந்தித்து விட்டு மறுநாள் பத்திரிகை ஆசிரியர் ராஜினாமா செய்துவிட்டார் என்று அந்த அதிபரை வைத்தே அறிவிக்கும் அளவுக்கு பத்திரிகை சுதந்திரம் கொடி கட்டி பறக்கிறது. புகழ்பெற்ற ஆங்கில ஏடான ஹிந்துஸ்தான் டைம்ஸ் முதன்மை ஆசிரியர் பாபி கோஷ் ராஜினாமா செய்துவிட்டார். சொந்த காரணங்களுக்காக அவர் பதவி விலகி விட்டார் என ஹிந்துஸ்தான் டைம்ஸ் மீடியாவின் தலைவி ஷோபா பார்ட்டியா தனக்கு மின்னஞ்சல் வந்ததாக தெரிவித்தார். ஹிந்துஸ்தான் டைம்ஸ் அரசியல் கட்டுரைகளால் பாஜக குறிப்பாக மோடி கோபம் அடைந்ததாக தெரியவந்த நிலையில் மீடியாவின் அதிபர் மூடப்பட்ட அறையில் சந்திப்பு நடத்தினார். மறுநாள் அதன் முதன்மை ஆசிரியர் கழற்றி விடப்படுகிறார். ஆசிரியர் பாபிகோஷ் புகழ் பெற்ற ஊடகவியலாளர் ஆவர்.உலக புகழ் பெற்ற டைம் பத்திரிகையின் ஆசிய பகுதியின் எடிட்டராக பணியாற்றி பஹ்தாத் , பலஸ்தீன் ஆகிய பகுதிகளின் துயரங்களை, உண்மை நிலவரங்களை உலகுக்கு உணர்த்தியவர். எவர் எப்படி இருந்தால் என்ன மோடிக்கு பிடிக்கவில்லை என்றால் வீட்டுக்கு போகவேண்டியதுதான். பத்திரிக்கை சுதந்திரம் இன்றைய ஆட்சியில் சு(தந்திரம்) என்றாகி விட்டது.

தேசத்தந்தை காந்தியடிகள் பற்றி சில வரிகள் ம.மன்சூர்அலி, கும்பகோணம்.

நம் சுதந்திரத்திற்கான விலையை அவர் நெஞ்சாங்கூட்டிற்குள் குண்டுகளாக ஏந்திக்கொண்டார். இந்தியனின் நிலையை எண்ணி கரன்சி நோட்டுக்களில் சங்கடமாக சிரித்துக்கொண்டு இருக்கிறார்.