கமல்ஹாசனை டைம்ஸ் நவ் உள்ளிட்ட ஆங்கில சேனல்களும் கூட தலைமேல் தூக்கி வைத்து கூத்தாடும் போக்கு எதுவரை செல்லும்?

வட மரைக்காயர் பதில்கள்

கமல்ஹாசனை டைம்ஸ் நவ் உள்ளிட்ட ஆங்கில சேனல்களும் கூட தலைமேல் தூக்கி வைத்து கூத்தாடும் போக்கு எதுவரை செல்லும்? சாம்ராஜ்ராயன், சென்னை-40.


கமலை நடுத்தெருவில் நிறுத்தும் வரை.

ஓ.பி.எஸ். & இ.பி.எஸ். கூட்ட முடியாத கூட்டத்தை திருச்சியில் டி.டி.வி. திரட்டி இருக்கிறாரே இது எதனை காட்டுகிறது? எம்.கலிக்குஸ்ஸமான்,திருச்சி. 

அந்த இருவருக்குமே ஒரு காலத்தில் ஓனராக இருந்தவர் தான் என்பதை டிடிவி காட்டி இருக்கிறார்.

பேரறிவாளன் பரோல் மேலும் ஒருமாதம் நீட்டிப்பு குறித்து? சனாவுல்லா கான், சென்னை1.


தொடர்ந்து மனதிற்கு கவலை தரும் வறண்ட தகவல்களே இன்றைய காலகட்டத்தில் சுற்றி சுற்றி வரும் நிலையில் பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு ஆறுதலான செய்தி . இது போல் நெடுநாள் சிறைவாசிகளுக்கும் நல்லவை நடந்தால் மனம் மகிழும்.


தற்போது செயல்படும் முதல் அமைச்சர்களில் மரைக்காயரை கவர்ந்தவர் யாரோ? எம்.யூசுப்கான், சென்னை&45.


நல்லவேளை செயல்படும் முதல்வர் என்று குறிப்பிட்டு கேள்வியை எளிதாக்கிவிட்டீர். எளிமையில் சிறந்த திரிபுராவின் தோழர் மாணிக் சர்க்காரை, சுதந்திரதின விழாவில் அரசு உதவி பெறும் பள்ளியில் தேசியக்கொடியை ஏற்றிய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லாத ஆர்.எஸ்.எஸ்.ன் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் மீது துணிச்சலுடன் வழக்கு தொடர்ந்த கேரள முதல்வர் தோழர் பினராய் விஜயன், அழுத்தப்பட்டு கிடக்கும் சிறுபான்மை முஸ்லிம்களுக்கு 12 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிய தெலங்கானாவின் சந்திர சேகர ராவ், மத்திய அரசின் ஏஜென்ட் என பகிரங்கமாக காட்டிக்கொண்டு மாநில உரிமைகளுக்கு எதிராக குடைச்சல் கொடுத்துக்கொண்டு இருந்த கிரண்பேடியையே சமாளித்த முதல்வர் புதுவை நாராயணசாமி என பலர் நம்மை கவர்ந்தவர்கள் எனினும் அண்மையில் அதிரடி கிளப்பிய மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி நம் சிந்தையை மிகவும் கவர்ந்தவராக திகழ்கிறார். தமிழகத்தில் விநாயகர் ஊர்வலத்தை வைத்து சகோதரத்துவத்துடன் வாழும் இந்து & முஸ்லிம் மக்களிடையே வேற்றுமையை வளர்த்து வன்முறைக்காடாக்க துடிக்கும் சக்திகளைப்போல மேற்கு வங்கத்திலும் இதுவரை இல்லாத அளவு மக்களை பிளவுபடுத்தும் சக்திகள் துர்கா பூஜையை பயன்படுத்தி கலவரம் விளைவிக்க முயன்றனர். துர்கா சிலைகளை நீரில் மூழ்கடிக்கும் நிகழ்ச்சியை வைத்து பதட்டம் ஏற்படுத்த முயன்றதை மம்தா தடுக்க ஆணையிட்டார். குறிப்பாக முஹர்ரம் நாளன்று துர்கா சிலைகளை கரைக்கும் நிகழ்ச்சிக்கு தடை போட்டார். அதே நேரம் இதே விவகாரத்தில் கருத்து சொன்ன கல்கத்தா உயர் நீதிமன்றம் எல்லா நாட்களிலும் முஹர்ரம் நாள் உள்பட எந்த நாளிலும் சிலை கரைக்க அனுமதி உண்டு என நீதிமன்றம் கூறியதற்கு பதில் அளித்த மம்தா என் குரல் வளையை துண்டுகளாக்கினாலும் சரி நான் என்ன செய்யவேண்டும் என யாரும் கட்டளையிட முடியாது என இடி முழக்கம் செய்துள்ளார் செப்டம்பர் 30 மற்றும் 1 ல் என்ன நடக்கும் என்பது கடும் எதிர்பார்ப்பிற்குள்ளாகி இருக்கிறது. என்ன செய்வது மேற்கு வங்காளத்திற்கு ஒரு துணிச்சலான ஆம்பளை முதல்வர் கிடைத்திருக்கிறார் என உங்களுக்கு ஏக்கமாக இருக்கிறதல்லவா?


பாஜகவோடு ஐக்கியமாகிவிட்ட நிதிஷ் எப்படி இருக்கிறார்? ஜி.அப்துல்ரஹீம், சென்னை&14.


பத்தோடு 11 ஆக இருக்கிறார். மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கே வெகுண்டு எழுந்தவர் பிரதமர் ஆன பின்பு பீகாரின் பன்னீர் செல்வமாக பம்முகிறார். 389 கோடி செலவில் கதீஸ்வர் பன்ச்அணை திறப்பு விழா இவர் தலைமையில் கோலாகலமாக ஏற்பாடான நிலையில் சரியாக 24 மணி நேரத்தில் ஹ¨ம் இவரெல்லாம் திறந்து வைக்கவேண்டுமா என மனதில் நொந்து கொண்டதோ என்னவோ தானாகவே திறப்பு விழா செய்து கொண்டது ஆம் அணை உடைந்தது . தண்ணீர் நிரம்பி விட்டதால் அணை உடைந்துவிட்டது என நீர்வளத்துறை அமைச்சர் லல்லான்சிங் சொல்கிறார். நல்லாத்தான் சப்பை கட்டு கட்டுகிறார் லல்லான்சிங். நிதிஷின் கதை அந்த அணையின் கதை போலவே டமார். ஐயோ பாவம்.