மோடி புல்லட் ட்ரெயின் அது குறித்த பில்டப்புகள் பற்றி

வட மரைக்காயர் பதில்கள்

மோடி புல்லட் ட்ரெயின் அது குறித்த பில்டப்புகள் பற்றி ? டி.எம்.சம்சுதீன்,சங்கரன்பந்தல்.


புல்லட் ட்ரைனா? புளுகு ட்ரைனா? என்று சிலரும் அது புரளி ட்ரெயின்தான் என்று பலரும் கருத்து சொல்லி வருகின்றனர். அது பாஜகவின் தலைமை அமைச்சர் அவரது சொந்த மாநிலத்தில் தொடங்கி வைத்தார் என்பதற்காக விமர்சிக்க வேண்டியதில்லை. அதன் உண்மை தன்மையினை காய்தல் உவத்தல் இன்றி ஆய்வோம்.


பிரதமர் மோடி உலகின் எல்லா நாடுகளுக்கும் சுற்றுப்பயணம் செய்வது போல ஜப்பானுக்கும் விஜயம் செய்தார். அப்போது ஜப்பானின் பொது பயன்பாட்டிற்கான அணு தொழிற் நுட்பம் ஜப்பானின் அம்பியன் உஎஸ் 2 விமானங்கள் மற்றும் புல்லட்ட்ரெயின் ஆகியவற்றை இந்தியாவுக்கு விற்க இருதரப்பிலும் முடிவு செய்யயப்பட்டது உலக அளவில் எல்லா தொழிற்கட்டமைப்புகளிலும் சீனா முழுக்க மேலாதிக்கம் செலுத்தி வரும் வரும் நிலையில்; ஏறக்குறைய 10 ஆண்டுகளாக தொடர்ந்து சீனாவுடன் மோதி பின்னடைவை சந்தித்து வரும் ஜப்பான் புல்லட் ட்ரெயின் வாங்கலையோ புல்லட் ட்ரெயின் வாங்கலையோ என அமெரிக்காவரை சென்று கூவிப்பார்த்தும் தைவானை தவிர யாரும் மயங்கவில்லை. அதில் அப்படி ஒன்றும் விசேசமில்லை என தைவான் புலம்புவதை பார்த்தாவது மோடி வகையறாக்கள் சுதாரித்திருக்கவேண்டாமா? வலியப் போய் வம்பில் மாட்டியாகிவிட்டது. இது ஒன்றும் பிரத்யேகமாக போடப்பட்ட திட்டம் அல்ல. அணு தொழில் நுட்பம் உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் போடப்பட்டதால் சேர்க்கப்பட்டுள்ள கொசுறு திட்டம் தான் இது.
ஜப்பான் இந்த திட்டத்தில் 88 ஆயிரம் கோடி தர இருப்பதாக தகவல். 500 ஆண்டுகள் ஆனாலும் இந்த கடனை அடைக்க முடியாது என நிபுணர்கள் அடித்துக்கூறுகிறார்கள். 68000 கோடி ஊழலாம் இதனையும் அவர்கள் கணக்கில் சேர்த்து கொள்ளுங்கள்.


உபியில் என்ன நடக்கிறது? யோகி ஆட்சியில் மக்கள் அமைதியாக வாழ்கிறார்களா?எம்.அனீஸ் அஹ்மது வாணியம்பாடி.


மக்கள் மயான அமைதியுடன் வாழ்கிறர்கள். பரேலி பகுதியில் சவுக்கி சவுரா என்ற மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் பார்ஹத் நக்வி என்ற பெண்மணி யின் காரை பின் தொடர்ந்து ஒரு ரவுடி கும்பல் ஆபாச பேச்சுக்கள் கொச்சைப்படுத்தும் சைகைகளை செய்து அந்த பெண்மணியை இழிவு படுத்தி மான பங்கப்படுத்தியுள்ளனர். மிக அருகில் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் , மகளிர் காவல் நிலையம் மற்றும் பரபரப்பான வர்த்தக நிறுவனங்களும் அங்கு உண்டு. நடப்பது ரவுடிகள் ராஜ்யமா? காமவெறியர்களின் கொண்டாட்டமா? என்ற ஆத்திரம் எழுகிறதல்லவா?
அந்த சமூக விரோதிகளின் ரவுடித்தனத்தால் பாதிக்கப்பட்ட பெண்மணி யார் தெரியுமா ? மத்திய அமைச்சரும் பாஜக செய்யும் அத்தனை தவறுகளுக்கும் வக்காலத்து வாங்கி செய்தியாளர்களிடம் சப்பை கட்டு கட்டும் முக்தார் அப்பாஸ் நக்வி யின் சகோதரிதான் இந்த பர்ஹாத் நக்வி .


தூய்மை இந்தியா கோஷம் இன்று எந்த அளவு உள்ளது?.ஆர்.எம்.சம்சுதீன், சென்னை & 79.


மோடி ஸ்மிரிதி ராணி கமல்ஹாசன் என முக்கிய புள்ளிகள் எல்லோரும் குப்பைகளே இல்லாத தரையை கூட்டி பெருக்கினார்கள். .அந்த அளவோடு தூய்மை இந்தியா கோஷம் இருக்கிறது. ஆனால் தூய்மையான உயர் கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலை அன்மையில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது அதில் இந்தியாவில் முதல் 25 இடங்களை பிடிக்கும் உயர் கல்வி நிறுவனங்களில் 12 கல்வி நிறுவனங்கள் தமிழகத்தை சேர்ந்தவை . தூய்மை என்பதை வெறும் வாயளவில் பேசிக்கொண்டு இருப்பவர்களல்ல தமிழர்கள் என்பதை நிலை நிறுத்தும் விதமாக இந்த பட்டியல் அமைந்துள்ளது. அது மட்டுமா திராவிட கட்சிகள் என்ன செய்து கிழித்தன என நீட்டி முழக்கிய சக்திகளுக்கு சரியான பதிலடியை இந்த தர வரிசை நிருபித்து காட்டியுள்ளது. ஸ்வச் பாரதத்திலும் உச்ச பாரத் தமிழ்நாடு தான் மீதி மாநிலங்களெல்லாம் மிச்ச பாரத்தான்.