திருச்சி பாஜக கூட்டத்தில் ‘நீட்’டாக இருந்த நாற்காலிகள் குறித்து... வடமரைக்காயர் குபிர் பதில்

வட மரைக்காயர் பதில்கள்

கடலே இல்லாத திருச்சிக்கு கடலை கண்டபடி இழுத்து வந்து கடல் அலையா? மக்கள் தலையா? என திணறிவிழும் அளவுக்கு கூட்டம் கூட்டி காட்டிய பாஜகவின் நீட் எதிர்ப்பு கூட்டம் குறித்து தங்களின் கருத்து யாதோ? எம்.ஆசீர்வாதம், தஞ்சாவூர்.

ரொம்ப கிண்டல் பண்ணாதீங்க ஆண்ட்டி இந்தியன் என்று உங்களுக்கு பட்டம் கிடைக்கும். மிஸ்டு கால் குடுத்தே 50 லட்சம் உறுப்பினர்களை சேர்த்த கட்சியல்லவா? என்ன செய்வது? இப்போது எங்க அக்கா தமிழிசை மிஸ்டு கால் கொடுத்து கூட்டத்திற்கு வாங்க என்று அழைத்த போது எல்லா பய புள்ளைகளும் நாட் ரீச்சபிள் ஆகிட்டாங்க அது அவங்க தவறா? கலர் கலரா எத்தனை நாற்காலிகள். ஒருத்தருக்கும் கூட நாற்காலி மேலே ஆசை இல்லை அதனால் பாஜக காரர்கள் யாரும் வந்து உட்காரவில்லை அதை பாராட்ட உங்களுக்கு மனம் இல்லையா? பிரியாணி அண்டாக்கள் அவர்கள் கண்களில் படும்படி எங்குமே வைக்கவில்லையாமே? இது நியாயமா?

சமீபத்தில் உங்களை கவர்ந்த அரசியல் பன்ச் எது? வி.அப்துல் முனாப், சென்னை 40

தனது 'ஒன் ஹார்ட்' கன்சர்ட் படத்தின் பிரீமியர் காட்சியை வெளியிட மும்பை வந்த ரஹ்மானிடம், பெங்களூருவிடம் நடந்த கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து செய்தியாளர்களால் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது ரஹ்மான், "கவுரி லங்கேஷின் கொலை குறித்து வருத்தம் அடைந்தேன். இவை அனைத்தும் இந்தியாவில் நடக்கக் கூடாது. அப்படி நடந்தால் அது என்னுடைய இந்தியா அல்ல. என் இந்தியா வளர்ச்சியை நோக்கியும், அன்பாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புகின்றேன்'' என்றார். அமைதியாக எப்போதும் இருக்கும் ரஹ்மானை கொடுத்த அரசியல் பன்ச்அதிர்வை ஏற்படுத்தியது. போருக்கு அழைக்கும் போது வரவேண்டும் என்று கூறி களத்தை விட்டே ஓடியவருக்கும், டிவிட்டரில் குடும்பம் நடத்தும் பிக்பாஸ்களுக்கும் அவரது பதில் சரியான பாடமாக இருக்கும். கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து வாயே திறக்கவில்லையே? படுகொலை குறித்து கண்டிக்கவில்லையே? படுகோழைகள்.

ஒரு மாபெரும் நாட்டின் ஆளும்கட்சி திருச்சியில் ஏழை தமிழன் வீட்டு காதுகுத்து நிகழ்ச்சியில் கூடும் கூட்டத்தை விட குறைவான கூட்டத்தை கூட்டியுள்ளதே அனுபவசாலியான நீங்கள் ஏதாவது அறிவுரை கூறுங்களேன் பாவம் பிழைத்துவிட்டு போகட்டும். சி.விகார் அஹ்மது, வாணியம்பாடி.

அவர்களது முதன்மையான சபதமே திராவிட கட்சிகள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதுதான். அந்த அடிப்படையில் பார்த்தால் திராவிட கட்சிகளில் இருப்பதிலே சிறிய கட்சியான புதிய கட்சியான எம்ஜி ஆர் அம்மா தீபா பேரவையுடன் தமது அரசியல் போட்டியை தொடங்கலாம். பாஜகவைவிட ஜெ.தீபா பேரவை மாபெரும் இயக்கம் என கமலாலயத்தில் இருக்கும் 80 வயதாகியும் இன்றும் அம்பி என அழைக்கப்படும் நம்பி நாராயணன் கூறுகிறார். அதற்காக நம்பிக்கை இழக்கலாமோ? கூடாது. தீபாவின் கணவர் மாதவனின் பிரஸ் மீட்டை வேடிக்கை பார்க்கவரும் மக்கள் அளவுக்காவது கூட்டம் சேர்க்க முயலவேண்டும் .படிப்படியாக முன்னேறி ஜெ தீபாவை காண அவர் வீட்டு பால்கனி முன் கூடும் மக்கள் அளவுக்கு கூட்டத்தை திரட்ட கண்ணாபின்னாவென முயற்சிக்கவேண்டும். இதற்கே இன்னும் ஒரு 10வருடம் ஆகலாம் அதற்காக அலுத்துக் கொள்ளக்கூடாது. பொறுமைதான் முக்கியம். எருமையாக இருந்து பொறுமையாய் நடக்கவேண்டும் அப்போதுதான் திராவிட கட்சிகள் இல்லாத தமிழகத்தை அமைக்க முடியும்.

நிறம் மாறும் மனிதனுக்கு சமீபத்திய உதாரணமாக யார் டக் கென்று வருகிறார்கள்? அய்யூப்கான், இராமநாதபுரம்.

வேறு யார் டாக்டர் கிருஷ்ணசாமி தான். தீவிர இடதுசாரி செயற்பாட்டாளராக வாழ்வை தொடங்கி, ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் தலைவராகி இன்று காவியில் முழ்கியுள்ளார். புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நெறியாளர் கார்த்திகை செல்வனிடம் அக்னி பரீட்சையில் வெந்துப் போனார். பெரியாரும் அம்பேத்கரும் இன்று வாழ்ந்தால் ஆர்எஸ்எஸ் கொள்கையை ஏற்றுக் கொண்டிருப்பார்கள் என்று சொன்ன போது நமது மனம் நொந்தது. மிக லாவகமாக தனது மகளுக்கு 2012ல் அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் பரிந்துரையில் சென்னை போரூர் ராமசந்திராவில் முது நிலை மருத்துவ படிப்பிற்கு இடம் வாங்கியதை மட்டும் மறைத்துவிட்டார்.

எல்லையில் ராணுவ வீரர்கள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள் உங்களுக்கெல்லாம் தேஷ் பற்று இல்லையா என எதற்கெடுத்தாலும் கூவும் பாஜக ஆட்சிக்கு வந்த பின் ராணுவ வீரர்களின் நிலை மேம் பட்டுள்ளதா ? வி.சம்சுல் ஆலம், நெல்லை.

இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ராணுவ வீரர்கள் தங்களின் ஊதியத்திற்கும் ஏன் தரமான உணவிற்கும் கூட போராடுகிறார்கள். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டுகளில் 171 ராணுவ வீரர்கள் எல்லையில் மடிந்துள்ளனர். இது ஆண்டுக்கு 17. பேர் மடிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மோடி யின் ஆட்சியில் 3 ஆண்டுகளில் 721 வீரர்கள் மடிந்துள்ளனர் அதாவது ஆண்டுக்கு சராசரியாக 240 பேர்கள் எல்லையில் பலியாகியுள்ளனர். 1400 சதவீதம் மோடி ஆட்சியில் ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். இப்போது சொல்லுங்கள் மேம்பட்டுள்ளதா மேலே அனுப்பப்பட்டுள்ளதா?

நீட் எதிர்ப்பு போராட்டத்தில் தமிழகத்தை திரும்பி பார்க்க வைத்த 15 வயதுக்குட்பட்ட நுங்கம்பாக்கம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் போராட்டமும், அதிகார வர்கத்தின் அடக்குமுறையையும் எவ்வாறு பார்க்கிறீர்கள்? ஷேக் இப்னு அப்பாஸ், புளியங்குடி.

அடக்க அடக்க புழு கூட போராடும், பூனையும் புலியாகும் என்பார்கள் நீட் என்ற கொடிய அரக்கன் தமிழக இளைய தலைமுறையின் எதிர்காலத்தை காவு வாங்க வந்தால் விடுவார்களா? நம் அன்பு தங்கைகள். பூக்கள் எல்லாம் புயலாக மாறின. இந்த பூக்களுக்குள் இத்தனை பூகம்பங்கள் எப்படித்தான் குடி கொண்டு இருந்தனவோ என வியப்புறும் வண்ணம் மாணவிகள் போர்க்கோலம் பூண்டனர். கொல்லைப்புற வழியாக ஆளவந்தவர்கள் கடைந்தெடுத்த கோழைகள் என காட்டிவிட்டனர். மெரினாவில் அப்பாவி மீனவ மக்களிடமும் மாணவர்களிடமும் தங்கள் அடக்குமுறையை வீரமென காட்டியவர்களுக்கு மாணவிகளையும் அடக்கி விடலாம் என எண்ணி இன்று அட்டூழியம் செய்துள்ளனர். நாளைய தமிழகம் இவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்கும்.