பிரதமர் மோடி இது வரை 65 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று உள்ளார் அத்தகை பயணம் நாட்டிற்கு பயனுள்ளதாக அமைந்துருக்கிறதா...?

வட மரைக்காயர் பதில்கள்

 பிரதமர் மோடி இது வரை 65 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று உள்ளார் அத்தகை பயணம் நாட்டிற்கு பயனுள்ளதாக அமைந்துருக்கிறதா...? ரி. ஹபீப் முகம்மது, பொதக்குடி.

2014 தேர்தலின் போது தனக்கு பெருமளவு உதவிய அம்பானி மற்றும் அதானி ஆகிய பெரும் முதலாளிகளின் எண்ணத்தை நிறைவேற்றுவதற்காகவே மோடியின் பயணம் அமைந்தது என நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.


சமீபத்தில் இஸ்ரேல் சென்றார் மோடி அப்போது அதானியும் இஸ்ரேலின் எல்பிட் நிறுவனமும் ஆளில்லா விமானங்கள் தயாரிப்பதற்கான கூட்டு முயற்சி உடன்பாட்டில் கைழுத்திட்டனர்.ரஷ்யா சென்றார் மோடி. அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் ரஷ்யாவின் ஆயுத தயாரிப்பு நிறுவனத்துடன் 6 பில்லியன் டாலருக்கு உடன்பாடு செய்து கொண்டது


பிரான்சுக்கு சென்றார் மோடி. அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் டஸால்ட் நிறுவனத்துடன் வணிக உடன்பாடு செய்துக் கொண்டது. வங்காள தேசம் சென்றார் மோடி. அதானியின் நிறுவனம் அங்கு மின்உற்பத்திக்கான உடன்பாடு செய்துக் கொண்டது. அமெரிக்கா சென்றார் மோடி. ரிலையன்ஸ் நிறுவனம் அமெரிக்க கடற்படையுடன் போர்கப்பல்களை பழுது பார்க்கும் உடன்பாட்டை செய்துக் கொண்டது. இதன் காரணமாக அடுத்த மூன்று முதல் ஐந்தாண்டுகளுக்கு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ரூ15 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும். ஆஸ்திரேலியா சென்றார் மோடி. அதானிக்கு அங்குள்ள நிலக்கரி சுரங்கங்கள் கிடைப்பதற்கு வழிவகுத்தார்.


இவையெல்லாம் தற்செயலாக நடந்தவை அல்ல. அதானி மற்றும் அம்பானியின் வணிக வளர்ச்சி மேலாளராகவே நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார். அவரது வெளிநாட்டு பயணங்களால் நமது நாட்டின் ஏழைகளுக்கோ, விவசாயிகளுக்கோ அல்லது மத்திய தர வர்க்கத்திற்கோ எவ்வித பயனும் இல்லை என்பதே எதரர்த்தமான உண்மை.

 

ஆர்.எஸ்.எஸ்.க்கும் விடுதலை போராட்டத்திற்கும் உள்ள தொடர்பு குறித்து விளக்குங்களேன்.? ஜே.எம்.ஜமாலுத்தீன், திருச்சி

மைசூர் பாகு க்கும் மைசூருக்கும் உள்ள தொடர்பு போன்றதுதான் ஆர்.எஸ்.எஸ். க்கும் விடுதலைப்போராட்டத்திற்கும் உள்ள தொடர்பு. விடுதலைப்போராட்ட வரலாற்றில் களமாடிய ஹீரோக்களில் ஆர் எஸ்.எஸ்.ஐ. சேர்ந்தவர்கள் எவரும் இல்லை. வி.டி.சாவர்க்கர் ஒரு விடுதலைப்போராட்ட வீரர்தான் தெரியுமோ? என அவர்கள் மார் தட்டிக்கொள்ள இருந்த வாய்ப்பையும் சாவர்க்காரே கெடுத்துக்கொண்டார். ஆங்கிலேயருக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்து அனைத்தையும் கெடுத்துக்கொண்டார்.


வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் 75ம் ஆண்டை நினைவுபடுத்தும்போது வாஜ்பாயை மறக்கமுடியாது ஆங்கிலேயரிடம் பிடிப்பட்டபோது தாம் போராட்டத்தில் ஈடு படவே இல்லை எனக்கூறி சரணாகதி கடிதம் எழுதி கொடுத்ததோடு போராட்டத்தில் ஈடு பட்டவர்களை காட்டி கொடுத்து விடுதலை போராட்ட களத்தில் அருஞ்சாதனை (!) படைத்தார் . இந்திரா காந்தி எமெர்ஜென்சியை அறிவித்த போது நாட்டில் உள்ள ஜன நாயக சக்திகள் எதிர்த்தபோது இந்திராவின் இரும்பு பிடிக்கு பயந்து அன்றைய ஆர் எஸ் எஸ் தலைவரான தேவரஸ் எழுதிய சரணாகதி கடிதங்களின் வரிசை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலின் நீளத்தை விட அதிகமாக இருந்ததாக ஒரு தகவல் உண்டு.


அண்மையில் வரலாற்று ஆய்வாளர் இர்பான் ஹபீப் அவர்கள் டெல்லியில் இந்திய விடுதலையின் 70ஆண்டு விழா சிறப்பு உரையில் முகல்சாராய் ரயில் நிலையத்திற்கு தீனதயாள் உபாத்யாயா பேர் சூட்டியதையும் நவ இந்தியாவின் சிற்பி நேருவை தொடர்ந்து இருட்டடிப்பு செய்வதையும் வேதனையுடன் குறிப்பிட்டார். எங்கு நோக்கினும் தீன தயாள் உபாத்யாயா பெயரையே பார்க்க முடிகிறது. பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பெயர் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் 75ம் ஆண்டு நிகழ்வில் பிரதமர் மோடி தனது உரையில் வேண்டுமென்றே நேருவின் பெயரை தவிர்த்தார். ராம்நாத் கோவிந்த் குடியரசுத்தலைவராக பதவியேற்று முதல் உரை யில் நேருவின் பெயரை புறக்கணித்து வரலாற்று பழிக்கு ஆளாகினார். இவர்களும் விடுதலை போராட்டத்திற்கு பாடுபடவில்லை பாடுபட்டவர்களையும் இருட்டடிப்பு செய்வதே வாடிக்கை. விடுதலைக்கு பாடுபடா இவர்கள் கெடுதலை மட்டுமே நினைக்கிறார்கள் .


கும்பகோணம் தீ விபத்து தீர்ப்பு என்ன சொல்ல வருகிறது? டபிள்யூ. எம். வேதாசலாம், திருவாரூர்.


கடந்த 2004 ஆம் ஆண்டு, கும்பகோணம் பள்ளியில் நடந்த கோர தீ விபத்தில் 94 பச்சிளம் குழந்தைகள் நெருப்பிற்கு இரையாயினர். . 18 குழந்தைகள் படுகாயம் அடைந்தனர். இக்கோர சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இவ்விபத்து குறித்து உச்சநீதி மன்றம்,தலையிட்டு விரைவாக விசாரணையை முடிக்க வேண்டும் என கூறியது. தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றம் வழக்கை விசாரித்து கடந்த ஆண்டு ஜூலையில் வழங்கிய தீர்ப்பில் குற்றவாளிகளில் 11 பேரை விடுவித்தும், 10 பேருக்கு தண்டனையும் வழங்கி தீர்பளித்தது. 11 பேரை விடுவித்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசும், தண்டனை பெற்றவர்களும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.


சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தமிழக அரசின் மேல்முறையீட்டை ரத்து செய்ததுடன், தண்டிக்கப்பட்டவர்களையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. 94 குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர்கள் தங்களது மழலைச் செல்வங்களை இழந்து, தங்களுக்கு நீதி மன்றத்தில் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை யோடு இருந்தவர்கள், தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கருதும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.உயர்நீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்ச நீதி மன்றத்தில் காலம் தாழ்த்தாமல் உடனடியாக மேல்முறையீடு செய்திட வேண்டும். பல்வேறு மக்கள் நலன் நாடும் தீர்ப்புகளை துணிச்சலுடன் வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இருந்து இப்படியரு தீர்ப்பா ?

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.