அமைதியான மனிதர், அடாவடித்தன செய்திகளில் அடிபடாதவர் என்றால் நல்லவர் என்றுதானே எடுத்துக்கொள்ள வேண்டும்? அவர்களைபோன்றவர்கள் முன்னணிக்கு வருவதில் என்ன தவறு இருக்கமுடியும்?

வட மரைக்காயர் பதில்கள்

அமைதியான மனிதர், அடாவடித்தன செய்திகளில் அடிபடாதவர் என்றால் நல்லவர் என்றுதானே எடுத்துக்கொள்ள வேண்டும்? அவர்களைபோன்றவர்கள்  முன்னணிக்கு வருவதில் என்ன தவறு  இருக்கமுடியும்? மரைக்காயரே உமது கருத்து என்னவோ? ரிழ்வான், கிருஷ்ணகிரி.

புரிகிறது  சகோதரா நீங்கள் எங்கு வருகிறீர்கள்  என்று. அமைதி   எந்த   வம்பு  தும்புவுக்கும்    போகாதவர்  என்று  சொல்லப் படுபவை  எல்லாம்   செயல்படாமை என்ற  சொல்லுக்கு  அரசியலில் மற்றொரு பொருள்  தான் அது.  அந்தந்த அதிகாரத்திற்கு உரிய கடமைகளை உரிய முறையில்  செயல்படுத்தாதபோது  அமைதியானவர்கள்   என்று  அழைக்கப்படும்   செயல்படாதவர்கள்   மீது  ஏதோ ஒரு சக்தி  நிர்வாக ரீதியிலோ  சித்தாந்த ரீதியிலோ   ஆதிக்கம்  செலுத்தும்போது  மக்கள் தாங்கவொண்ணா  துயரங்களை  அனுபவித்து  வந்தனர்  என்பது தான்  வரலாறு. இதனை யாராலும் மறுக்க  முடியாது. வரலாற்று  ரீதியாக  பல்வேறு  நிகழ்வுகளின்  காட்சியை   வைத்து   நாம் உணர்ந்து  கொள்ள முடியும். 

காங்கிரஸ் கட்சியில் மூத்தவர்கள் எல்லாம் கட்சிப்பணிக்கு  செல்ல வேண்டும்  என்று அன்றைய அகில இந்திய காங்கிரஸ்  கமிட்டி தலைவர் காமராஜர்   அரசியல் ரீதியான அறிவிப்பினை வெளியிட்டார். அது ‘‘கே பிளான்’’ என அறியப்பட்டது. இதற்கு தானே  முன்  உதாரணமாக இருக்கவேண்டும் என்று    அன்றைய முதல்வர் காமராஜ்  1963 ல்  தனது பதவியை ராஜினாமா செய்தார். (அதைவிட  சக்தி மிகுந்த )  அகில இந்திய காங்கிரஸ் தலைவர் பதவியில் தொடர்ந்தார்  அன்று காங்கிரஸ்  அமைச்சரவையில்  பிரபலமான ஆளுமைகளான சி சுப்பிரமணியம்,   ஆர் வெங்கடராமன், கக்கன், மஜீத்  போன்றவர்களை தவிர்த்து  பக்தவத்சலம் காமராஜரின் தெரிவாக தேர்ந்தெடுக்கப்பட்டு  தமிழக முதல்வரானார். அவரும் அமைதியானவர்.  எந்த வம்பு (!)  தும்புக்கும்  செல்லாதவர் என்று  பேர் வாங்கியவர் தான் ஆனால்  என்ன நடந்தது?

1965 ல் அமைதியின்  உரு (!) பக்தவத்சலம்    காலத்தில்   டெல்லியின்  தூண்டுதலால்  இந்தி எதிர்ப்பு போராட்டத்தை  மூர்க்கத்தனமாக   ஒடுக்கினார்  அவை எல்லாம்  தமிழக சரித்திரத்தில்   கருப்பு பக்கங்கள் என வர்ணிக்கப்பட்டன. காங்கிரசின் கடைசி  முதல்வர் என வரலாற்று  ஏடுகளில் குறிக்கப்படுகிறார். 1991  ல் ராஜீவ் காந்தியின்  படுகொலைக்குப்பிறகு  சோனியா காந்தி அரசியல் துறவற நிலையை மேற்கொண்டதால்  ஆந்திராவை சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர்  நரசிம்ம ராவ் இந்தியாவின்  பிரதமர்   ஆனார்.

1992 ல் அந்த  அமைதியின்  உரு (!)  நரசிம்மராவ்   காலத்தில்  தான்  அவரது   மனதை ஆட்கொண்ட சித்தாந்த பாசிச  வெறியால்   450  ஆண்டுகால பெருமை கொண்ட  பாப்ரி மஸ்ஜிதை இடிக்கவிட்டு   (அல்லது ஊக்குவித்து )   வேடிக்கை பார்த்தார். மும்பை உட்பட பல்வேறு பகுதிகளில்  நிகழ்ந்த  வன்முறை  வெறியாட்டங்களை  அவர் தடுக்கவேயில்லை.  அகில உலக அளவில்  இந்தியாவின்  மாண்பை குலைத்த  நிகழ்வுக்கு  சொந்தக்காரராக  நரசிம்மராவ் திகழ்ந்தார்.

 மீண்டும்   தமிழ்நாட்டுக்கு வாங்க...   ஓபிஎஸ் உருவில் ஒரு பக்தவத்சம்  நரசிம்மராவ் என இரண்டும் கலந்த கலவையை நாடு  கண்டது.    தமிழர்  கடல்  என அழைக்கப்பட்ட மெரினாவில் நடந்த மாணவர் போராட்டத்தை மூர்க்கத்தனமாக  நசுக்கினார். தமிழகத்தில்   அமைதியின்  உரு (!)  ஓ.பி.எஸ்.  ஆட்சியில்   தான்  மெரினாவில்  அரச  வன்முறைகள்   வரலாறு  காணா  அளவு அரங்கேறின.   மாணவர்கள், மீனவர்கள்,  ஏனையவர்கள்  அனைவரும் அடித்து  நொறுக்கப்பட்டனர்.  ஆகையினால்  மஹா  ஜனங்களே   நாட்டை  வழி  நடத்த   ஏதோ ஒரு சக்தியின்    கருவியாக  செயல்படக்கூடியவர்கள்  தேவையா  என்பதை உணரவேண்டும்.