7 முஸ்லிம் நாடுகளின் மக்கள் அமெரிக்காவில் நுழைய அனுமதியில்லை என்ற ட்ரம்பின் உத்தரவிற்கு அரபு நாடுகள் மவுனம் சாதிப்பது ஏன்?

வட மரைக்காயர் பதில்கள்

7 முஸ்லிம் நாடுகளின்  மக்கள் அமெரிக்காவில்  நுழைய அனுமதியில்லை என்ற ட்ரம்பின்  உத்தரவிற்கு  ஜெர்மனி  கனடா உள்ளிட்ட நாடுகள் கடுமையான விமர்சனம் செய்து வருகையில்  அரபு நாடுகள்  மவுனம் சாதிப்பது ஏன்?   தீன தயாளன், பாலவாக்கம்.

முஸ்லீம்  நாடுகளுக்கு குறிப்பாக ஈரான், ஈராக், லிபியா, சோமாலியா, சூடான், சிரியா மற்றும் யேமன்  நாடுகளில் இருந்து அகதிகளாகவோ,  பயணிகளாகவோ அமெரிக்காவில் நுழைய  தடை விதித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப்  கையெழுத்திட்டார்.  இதற்கு  ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள்  மனித உரிமை அமைப்புகள், சமூக நல ஆர்வலர்கள் உள்ளிட்ட முக்கிய புள்ளிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

 27ம் தேதி ட்ரம்பின் உத்தரவை தொடர்ந்து 28ம்  தேதி  குறிப்பிட்ட அரபு நாடுகளில் இருந்து அமெரிக்கா  செல்ல  கடவு சீட்டு வைத்திருந்தவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். விமானங்களில், சுங்க நுழைவுகளில்   தடுக்கப்பட்டவர்களும் உண்டு. உள்நாட்டுப்போரில்  பாதிக்கப்பட்ட சிரியா கிறிஸ்தவர்கள் அமெரிக்கா வர முன் உரிமை வழங்கப்படும் என்றும் ட்ரம்ப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அகதிகளுக்கான ஐநா அமைப்பும் குடியேற்ற வாசிகளுக்கான  சர்வதேச அமைப்பும் போரினாலும் துன்புறுத்தல்களினாலும்   பாதிக்கப்பட்ட மக்களுக்கு அடைக்கலம் வழங்கும்  பணியை அமெரிக்க நிர்வாகம் தொடரவேண்டும்  என வேண்டுகோள் விடுத்தன.

அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பு குறித்து ஜெர்மனியும் பிரான்சும்  தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளன. போரினால் பாதிக்கப்பட்டு வெளியேறும் அகதிகளையும் அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்டு தவிக்கும்  மக்களையும் வரவேற்பது  தமது பணிகளில் ஒரு பகுதி என பிரஞ்சு   வெளியுறவு  அமைச்சர் ஜீன்  மார்க் ஐ ரவ்லட்  தெரிவித்தார்.

இவரும் ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் சிக்மர் கேபிரியேலும் கூட்டாக செய்தியாளர்களை  சந்தித்து இதனை அறிவித்தனர்.  2015ம் ஆண்டிலிருந்து 10 லட்சம் அகதிகளை,  ஜெர்மன்     நிர்வாகம் வரவேற்று அடைக்கலம் கொடுத்துள்ளது. இவர்கள் மத்திய கிழக்கு   நாடுகளில் இருந்து    வந்தவர்கள்.  அமெரிக்காவில் அதிகாரத்திற்கு வந்துள்ள குடியரசு கட்சியினர் அகதிகளை அனுமதிக்க மறுப்பது  பிரச்னைகளை தீர்க்க உதவாது என துருக்கிய பிரதமர் பீனாலி எல்ட்ரிம் தெரிவித்தார்.  பிரிட்டன் பிரதமர் தெரேசா மேயுடன் தலைநகர் அங்காராவில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு  தனது எதிர்ப்பினை  காட்டியுள்ளார்.  இந்த பிரச்னையை பெரிதாக்கியதற்கு அமெரிக்காவே  பொறுப்பு   என்றும் பிரிட்டன் பிரதமர் மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். 

ஆனால் பெரும்பாலான ஐரோப்பிய தலைவர்கள் ட்ரம்பின் முடிவை கண்டிக்கின்றனர். லக்ஸம்பர்க்கின்  வெளியுறவுத்துறை அமைச்சர் ஜீன் அஸ்ஸெல்பர்ன் ட்ரம்பின் இந்த முடிவு ஐரோப்பாவுக்கும் கெடுதல் விளைவிக்கக்கூடியது. இது முஸ்லிம்  உலகத்திற்கும் மேற்கு நாடுகளுக்கும்  இடையிலான நம்பிக்கையின்மையையும், வெறுப்பையும் மேலும் மேலும் வலுப்படுத்தவே வகை செய்யும் என ஜீன்  அஸ்ஸெல்பர்ன்  தெரிவித்தார். இது அமெரிக்காவின் நம்பகத்தன்மையை குலைத்து போட்டு  விட்டதாகவும், வெளிநாட்டவர் மீதான அதீத  வெறுப்பையும் கொதிநிலைக்கு கொண்டு செல்ல டிரம்ப் முயன்று  வருகிறார்  என   ஜனநாயக கட்சியின் செனட்டர் எட்வார்ட் மார்கே தெரிவித்துள்ளார். விமர்சனங்களின்  கூர்மையினால்  ட்ரம்ப்  திட்டம்   செம்மையாக  கிழிக்கப்பட்டு  வருகிறது.  

இந்நிலையில்   பெரும்பாலான  முஸ்லிம்  நாடுகள்  இது குறித்து  அமைதி காப்பது  உலகை  கவலையுடன்   திரும்பி  பார்க்க வைத்துள்ளது. இரு புனித தலங்களின் பராமரிப்பாளரும்   சவூதி   மன்னருமான  சல்மான் இது குறித்து  எதுவும்  பேசவில்லை.   . இந்த உத்தரவு  பிறப்பிக்கப்படும்  முன்பு சவூதி  மன்னர் சல்மானுடன் ட்ரம்ப் தொலைபேசி  உரையாடல் நடத்தி   இருக்கிறார். இருதரப்பும்   அதில் என்ன  பேசப்பட்டது  என்பதை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.  

அதிக அளவு  இஸ்லாமிய பேரறிஞர்களையும்  புகழ்   பெற்ற  மார்க்க கேந்திரத்தையும்    தன்னகத்தே கொண்டுள்ள  எகிப்தும்  தனது  கருத்தை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. எகிப்தை  கடந்த   இரு ஆண்டுகளாக  ஆட்சி செய்வது   அமெரிக்கா  ஆதரவாளர் அல்சிசி  அல்லவா?  அவர்  எங்கே  எதிர்க்கப்போகிறார்? 57 முஸ்லிம்  நாடுகளின்  கூட்டமைப் பான   ஓ.ஐ.சி   எந்த கருத்தையும்   இதுவரை வெளியிடவில்லை.   முஸ்லிம்  உலகத்தின் ஒட்டுமொத்த குரலாக   கருதப்படும் ஓ ஐ சியின்   நிலையே  இதுதான்.  இஸ்ரேலில்  உள்ள அமெரிக்க தூதரகத்தை   டெல்அவிவில் இருந்து    ஜெருசலேமுக்கு  மாற்றுவாரா? எகிப்தின்   இஹ்வான்கள்   அமைப்பை  தீவிரவாத   அமைப்பாக    அறிவிப்பாரா?   இன்னமும்  எத்தனை   சர்ச்சைக்குரிய   திட்டங்களை  அவர் கைவசம் வைத்திருக்கிறார் ?  என சந்தேகம்  எழுப்புகிறார்  ஜார்ஜ் வாஷிங்க்டன்   பல்கலைக்கழகத்தின்   மத்தியகிழக்கிற்கான  நிபுணர்   நாதன் ஜேரோன். அவர்  கூறுகிறார்.  ட்ரம்ப் என்ன திட்டமிடுகிறார்   என்பதை யாராலும்   அறியமுடியாது  எனினும்   இது  ஆரம்பகட்ட  சூரத்தனமாக  தான் இருக்கமுடியும்  என்கிறார் .

 ஆனால் அரபு நாடுகளின் மவுனம் தமது குறுகிய தேச நலன் குறித்து மட்டுமே  அக்கறை செலுத்துவதை    கண்டறிய முடிகிறது.   நேச நலன்   எல்லாம்    இந்த சூழலில்  காண முடியவில்லை. தத்தம்  நாடுகளின் மக்கள் கூட்டம்   ட்ரம்பப்  மீது     கோபம்  திரும்பட்டும்    தம்மீது திரும்பாமல்   இருந்தால்  போதும்   என்ற  நிலையே நிலவுகிறது. இது  நிச்சயம்  வேதனை அளிக்கக்கூடியது என்கிறார் பெய்ரூட்டின் அமெரிக்க  பல்கலைக்கழகத்த்தின்  முன்னணி  ஆய்வாளர் இஸ்ஸாம் பெரேஸ். தீவிரவாதிகளை   தமது  நாட்டிற்குள்  நுழைய விடாமல்  தடுக்கும்  முயற்சி இது  என  ட்ரம்பப் தரப்பில்   கூறப்படுகிறது. குறிப்பிட்ட 7 நாடுகளுக்கும்  அமெரிக்காவுக்கும்  எவ்வித ராணுவ பொருளாதார  வாணிக  ஒப்பந்தங்கள் எதுவும்  சொல்லிக்  கொள்ளும்படியாக  இல்லை. 

ஆனால்   செப்டம்பர்   தாக்குதலின் போது  தாக்குதல்காரர்கள்   என அமெரிக்கா குறிப்பிட்ட 19 பேரில் 15 பேர் சவூதி  நாட்டை சேர்ந்தவர்கள்.  ஆனாலும்   சவூதி   மீது எவ்வித தடை ஆணையும் பிறப்பிக்கவில்லை.  காரணம்  அமேரிக்கா சவூதி  இரண்டும் 60 ஆண்டுகளுக்கு  மேலாக நட்பு  நாடுகள். போகட்டும்   வீராதி  வீராதி வீரர்   ட்ரம்ப்,  இப்போது   சவூதி மீது  தடை  விதிப்பாரா?    மாட்டவே   மாட்டார். காரணம்  அதிபர் டிரம்ப்  மட்டுமே எட்டு நிறுவனங்களை  சவூதி  கூட்டுறவுடன்  நடத்தி வருகிறார்.  துறைமுக நகரான ஜித்தாவில்  டிரம்புக்கு  பல நவீன உணவகங்கள்  உண்டு . அரசியல் காரணங்களுக்காக சில அறிவிப்புகளை    அதிரடி அரசியல் வாதிகள்   வெளியிடுவார்கள்.  அதனை  நாம் கண்டுகொள்ளாமல்  விடுவோம்  என்பதே   முஸ்லிம் உலகின்  முக்கிய நாடுகளின்   எண்ணமாக இருக்கிறது.  எவ்வாறு இருந்தாலும்  கண்டிக்க வேண்டிய நேரத்தில்  கண்டிக்காமல் இருப்பது   மாபெரும் அரசியல்  பிழையாகும்.