எங்கள் தாமிரபரணி எங்கள் உரிமை- நெல்லையில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்.

மமக போராட்டங்கள்

4 மாதங்களுக்கு முன்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாமிரபரணியில் நீர் பற்றாக்குறை காரணமாக ஆற்றில் இருந்து, எடுக்கப்பட்ட தண்ணீரை கங்கைகொண்டான் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள கோக் பெப்சி குளிர் பான ஆலைகளுக்கு வழங்க கூடாது என தொடரப்பட்ட வழக்கில், பதில் மனு தாக்கல் செய்த நெல்லை மாவட்ட ஆட்சி தலைவர் கருணாகரன், தாமிரபரணி நதியின் உபரி நீரை மட்டுமே பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு வழங்குவதால் நெல்லை மற்றும் அதன் சுற்று வட்டார மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்ற அறிக்கையின் விளைவாக தாமிரபரணி நதி நீரை பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்க கூடாது எனும் தனது இடைக்கால தீர்ப்பை உயர்நீதி மன்றம் விளக்கி கொண்டது.

மத்திய அரசு இந்தியாவில் பிரம்மபுத்திரா நதியை தவிர வேறு எந்த நதியிலும் உபரி நீர் இல்லை என அறிக்கை அளித்தது. இதனால், மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசின் மக்கள் விரோதப்போக்கை கண்டித்து மனித நேய மக்கள் கட்சி மார்ச்:25-ம் தேதி அன்று நெல்லை கிழக்கு மாவட்டம் சார்பில், பாளை ஜவஹர் திடலில் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நடத்தியது.

இதில் கலந்து கொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் ; மமக தாமிரபரணி போராட்டத்தை இந்த பல்லாயிரக்கணக்கானோரை திரட்டி நடத்தி இருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தின் மூலம் போராட்டத்தின் அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளது என குறிப்பிட்டு பேசினார். இதனை தொடர்ந்து பேசிய சமூக செயற்பாட்டாளர் முகிலன், மமக வின் ஒரு வார கால தொடர் பிரச்சார இயக்கம் அனைத்து தரப்பு மக்களிடமும் மிகுந்த எழுச்சியை உருவாக்கி உள்ளது என்றும், மமக வின் முயற்சிக்கு உறு துணையாக நிற்பேன் என உறுதி கூறி பேசினார்.

மமக மாநில துணைத் தலைவர் ஜே,எஸ்,ரிபாயீ நெல்லை மாவட்டம் சந்தித்து வரும் வறட்சி குறித்து பல்வேறு புள்ளி விபரங்களை தொகுத்து பேசினார், இறுதியில் கண்டன உரையாற்றிய மமக தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் தேம்ஸ் நதியை பாழ்படுத்திய நிறுவனங்களுக்கு அபராதம் விதித்ததை போல நடவடிக்கை எடுக்க அரசு நிறுவனங்கள் தவறுவதை சுட்டி காட்டி, உடனடியாக அரசு; தாமிரபரணி தண்ணீரை குளிர்பான ஆலைகளுக்கு விற்கும் உத்தரவை ரத்துச் செய்ய வேண்டும் என்றும், ஆற்றில் கழிவு நீர் கலக்கும் செயலை மாநகராட்சி உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும், தாமிரபரணியில் மணல் அள்ள உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்றும், இந்த போராட்டம் ஒரு துவக்கம் மட்டுமே தாமிரபரணி பாதுகாக்கப்படும் வரை மமக தொடர்ந்து போராடும் எனவும் குறிப்பிட்டு பேசினார்.

மனிதநேய மக்கள் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட பொறுப்புக் குழுத் தலைவர் உஸ்மான் கான் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், தமுமுக மாநிலச் செயலாளர் மைதீன் சேட் கான், மனிதநேய மக்கள் கட்சி அமைப்புச் செயலாளர் முஹம்மது கவுஸ், நெல்லை மேற்கு மாவட்ட மமக செயலாளர் நைனார், தமுமுக செயலாளர் யாகூப், தூத்துக்குடி மாவட்ட மனிதநேய மக்கள் கட்சிச் செயலாளர் ஆசாத், தமுமுக மாவட்டச் செயலாளர் யூசுப் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் தங்கள் குழந்தைகளுடன் சுட்டெரிக்கும் வெயிலைப் பொருட்படுத்தாது கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை முன்னணி தொலைக்காட்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்தன.