புயலில் மாயமான மீனவர்கள் விவகாரம்: 14,500 பேர் மீது வழக்குப் பதிவு: ஜவாஹிருல்லா கண்டனம்

மமக அறிக்கைகள்

புயலில் மாயமான மீனவர்கள் விவகாரம்: 14,500 பேர் மீது வழக்குப் பதிவு: ஜவாஹிருல்லா கண்டனம்

ஒக்கி புயலின் போது மாயமான மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ரயில் மறியலில் ஈடுபட்ட 14.500 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலின் போது மாயமான மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் ரயில் மறியலில் ஈடுபட்டனர்.

ரயில் மறியல் போராட்டத்தை முன்னின்று நடத்தியதாக பாதிரியார்கள் கென்னடி, ஜஸ்டஸ், டார்வின், செல்வன், அன்பரசு, சாம்மேத்யூ, செல்வராஜ், கிறிஸ்துராஜ், கிறிஸ்டின், பொனிப்பாஸ் லூசியான், அருள்சீலன் உட்பட 17 பேர் மற்றும் பச்சைத் தமிழகம் அமைப்பாளர் சுப.உதயகுமார், குமரி கடலோடிகள் இயக்கச் செயலாளர் சஜிம்சன் உள்ளிட்ட 14,500 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எதிர்ப்பு, மாற்றுக் கருத்து ஆகியவை ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறுகள். அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரான போராட்டம் என்பதை அரசுக்கு எதிரான வன்முறை என்றால், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கம் வகிக்கும் அதிமுக, மக்களின் பிரச்சினைகளுக்காகவும், தமது கட்சிக்காகவும் போராட்டங்களை நடத்தவில்லையா? அறவழியில் வெளிப்படுத்தும் எதிர்ப்பையும், எதிர்ப்பாளர்களையும் நசுக்கி மத்திய மாநில அரசுகள் சர்வாதிகாரத்தை நோக்கிச் செல்கின்றனவா என்ற அச்சம் தமிழக மக்கள் மத்தியில் நிலவுகிறது.

பேரிடர் போன்ற பிரச்சினையில் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் போது மக்களை பாதுகாக்கவும், மாயமான மீனவர்களை மீட்கவும் மீனவ மக்கள் தன்னெழுச்சியாகப் போராடுவது நியாயமானதே. அப்போராட்டங்களுக்குப் பின்னால் உள்ள நியாயங்களை அறிந்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர போராடுபவர்கள் மீது அடக்குமுறைகளை ஏவக்கூடாது.

எனவே, மாயமான மீனவர்களை மீட்கப் போராடிய மக்களின் மீது தொடுக்கப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெறவும், இப்போராட்டங்களின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்'' என்று ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.