இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலம் அறிவிப்பு: அமெரிக்க அதிபருக்கு கண்டனம்

மமக அறிக்கைகள்

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா.எம்.எச்-.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலமை அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

ஏற்கெனவே பாலஸ்த்தீன பகுதியை அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளின் ஆதரவுடன் ஆக்கிரமிப்பு செய்து அதனை யூதர்களின் நாடு என்று அறிவித்துக்கொண்ட இஸ்ரேல் தனது தற்காலிக தலைநகரத்தை டெல்அவிவ் என அறிவித்தது.

ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்துக்கொண்டே அப்பாவி பாலஸ்தீன குழந்தைகள் பெண்கள் என அனைவரையும் சொல்லொண்ணா துயரங்களுக்கு உள்ளாக்கியது இஸ்ரேல்.

1967ல் நடைபெற்ற யுத்தத்தில் கிழக்கு ஜெருசலத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்தது.  இதன் பின் ஜெருசலத்தின் உரிமையை இஸ்ரேல் கொண்டாடிய போதிலும், அதை சர்வதேச சமூகம் இதுவரை ஏற்கவில்லை. ஆக்கிரமிப்பு நகரம் என்றே சர்வதேச நாடுகள் ஜெருசலத்தை குறிப்பிட்டு வந்தன. ஆனால் அமெரிக்க அதிபர் டிரம்ப் மட்டும் தற்போது இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலத்தை அங்கீகரித்துள்ளது சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  டிரம்பின் அறிவிப்பு ஒரு தலைபட்சமானது. அவரது முஸ்லிம் விரோத மனப்பான்மையின் பிரதிபலிப்பாகவே அது அமைந்துள்ளது.

முஸ்லிம்களின் புனிதத் தலங்களில் ஒன்றாக ஜெருசலத்தில் அமைந்துள்ள அல்அக்ஸா பள்ளிவாசல் திகழ்கிறது. அதேபோல் கிறிஸ்துவர்களுக்கும் அது புனித பூமியாக அமைந்துள்ளது. இச்சூழலில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு அங்கு வசிக்கும் பூர்வகுடி பாலஸ்தீனர்களை முற்றிலுமாக வெளியேற்றி அகதிகளாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்த அறிவிப்பை அமெரிக்க அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என்றும், உலக நாடுகளும், ஐ.நா.சபையும் இந்த அறிவிப்பைக் கைவிட வலியுறுத்த வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.