ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தி.மு.க.விற்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு!

மமக அறிக்கைகள்

பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவு அளிக்க மனிதநேய மக்கள் கட்சி தீர்மானித்துள்ளது. இத்தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திரு. மருது கணேஷ் அவர்களை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சி  பரப்புரைச் செய்யும்.

 குடிநீர்ப் பஞ்சம், நியாயவிலைக்கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு,  விவசாயிகள் துயரம், மீனவர்களின் மீதான தாக்குதல், நிதி நெருக்கடி பிரச்சினை உள்ளிட்ட பல பிரச்சினைகளில் தற்போதைய அதிமுக அரசு எந்தவித உருப்படியான நடவடிக்கையையும் எடுக்காததால் தமிழக மக்கள் கடுமையான பாதிப்பிற்கு இலக்காகியிருக்கிறார்கள்.
மேலும் மத்திய பாஜக நீட் தேர்வு உள்ளிட்ட விவகாரத்தில் தமிழக அரசின் உரிமைகளுக்கு எதிராக செயல்பட்ட போதினும் அதனை எதிர்த்து உரிமைகளை மீட்க திராணியில்லாத அரசாக எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு உள்ளது. 
 

இதன் உச்சமாக இந்தியாவில் வேறு எந்தவொரு மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு அரசு இயந்திரத்தில் ஆளுநர் தலையிட்ட போதினும் அதனை வரவேற்று மாநில அரசின் உரிமையை அதிமுக அரசு மத்திய அரசுக்கு அடகு வைத்துள்ளது.

பாஜகவின் கைப்பாவையாக இருந்துவரும் எடப்பாடி தலைமையிலான இந்த அரசை எதிர்க்கவும், தமிழகத்தில் ஆட்சி புரியும் மக்கள் விரோத, தமிழக மக்கள் நலனுக்கு எதிரான அதிமுக  அரசுக்கு தகுந்த தண்டனை வழங்கவும், ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் நல்லதொர் வாய்ப்பாக அமைந்துள்ளது. 

தமிழகத்தில்  ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக  செயலாற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் ஆர் கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் திரு மருது கணேஷ் அவர்களுக்கு வாக்களித்து மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.