ஆளுநர் மாளிகையில் அசைவ உணவுகளுக்குத் தடை! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

மமக அறிக்கைகள்

 

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவின் அடிப்படையில் சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அசைவ உணவுகளைச் சமைத்து உண்ணவோ, வெளியிலிருந்து கொண்டுவந்து உண்ணவோ கூடாது என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆளுநர் மாளிகையில் தங்கும் விருந்தினர்களுக்கும், அலுவலர்களுக்கும் அவர்களின் விரும்பபத்திற்கு ஏற்றவாறு சைவம் மற்றும் அசைவ உணவுகளைச் சமைப்பது வழக்கம். இந்த வழக்கத்தை மாற்றும் முயற்சியில் ஆளுநர் ஈடுப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே தமிழக அரசின் அலுவலக விவகாரங்களில் தலையிட்டு அதற்காக பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புக்களைப் பெற்றுள்ள தமிழக ஆளுநர் தற்போது தனிமனித உணவு உரிமையில் தலையிட்டிருப்பது ஏற்புடையது அல்ல.

இந்திய அரசியல் அமைப்பு சட்டம் ஒவ்வொரு தனி மனிதரும் வாழ்க்கைக்கான அடிப்படைத் தேவையை பெறுவதற்கும், உணவு, சுத்தமான குடிநீர், ஆகியன பெறவும் நமக்கு உரிமை அளித்துள்ள நிலையில் அச்சட்டத்தைக் காக்கும் பொறுப்பில் உள்ள ஒரு ஆளுநர் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

எனவே, ஆளுநர் மாளிகையில் அசைவ உணவுக்குத் தடை என்ற உத்தரவை உடனே திரும்பப் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.