தமிழக அரசு நிர்வாக பணிகளில் தலையிடும் ஆளுநர்! மாநில சுயாட்சிக்கு ஆபத்து!!

மமக அறிக்கைகள்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கோவையில் உள்ள பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு அதற்குப்பிறகு அம்மாவட்ட உயர் அதிகாரிகளிடம் அரசுப் பணிகள் தொடர்பாக ஆலோசனை செய்து வந்ததாகச் செய்திகள் வந்துள்ளது. 
ஒரு மாநில அரசின் அரசுப் பணிகளின் ஆளுநர் நேரடியாகத் தலையிடுவது ஏற்புடையது அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு தமிழகத்தில் இருக்கும் போது ஆளுநர் நேரடியாக அரசு உயரதிகாரிகள், அலுவலர்களை அழைத்துப் பேசி அவர்களுக்கு ஆணையிடுவது, மாநில சுயாட்சிக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் செயல்.

எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு மத்திய பாஜகவின் கைப்பாவையாகச் செயல்பட்டுவரும் சூழலிலும், மத்திய அரசு தமிழக ஆளுநரைத் தனது நேரடி ஏஜென்டாக பயன்படுத்தி மாநில அரசின் அதிகாரத்திற்குள் தலையிடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஏற்கெனவே புதுச்சேரி மாநில ஆளுநரின் தலையீடு காரணமாகப் புதுச்சேரி மாநிலத்தின் அரசு நிர்வாகம் செயலிழந்து நிற்கிறது. அதேபோன்று ஒரு நிலையைத் தமிழகத்திலும் உருவாக்க மத்திய பாஜக அரசு தீர்மானித்துள்ளதாக தோன்றுகிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆட்சியில் நீடித்திருக்கும் போது, நியமிக்கப்பட்டவர்கள் அதில் தலையிடுவது ஜனநாயக மாண்புகளுக்கு எதிரானது.

எனவே, தமிழக ஆளுநர் இதுபோன்ற நடவடிக்கைகளில் தன்னை ஈடுப்படுத்தாமல் அவருக்குள்ள அதிகார வரம்பிற்கு உட்பட்டு ஜனநாயக பணிகளை ஆற்ற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில்  கேட்டுக்கொள்கிறேன்.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.