வெளிநாட்டு மணல் இறக்குமதிக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!!

மமக அறிக்கைகள்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

தமிழகத்தில் பல்வேறு கட்டுமானப் பணிகளுக்காக மணலின் தேவை நாளுக்குநாள் அதிகரித்துள்ளதால், தமிழக ஆறுகளில் உள்ள மணல்களை மணல் கொள்ளையர்கள் ஈவு இரக்கமற்ற முறையில் கொள்ளையடித்து வருகின்றனர். நமது அண்டை மாநிலமான கேரளாவிற்கு தமிழக ஆற்று மணல் தான் செல்கிறது.

இந்நிலையில் புதுக்கோட்டையைச் சேர்ந்த எம்.ஆர்.எம் ராமையா எண்டர்பிரைசஸ் என்ற தனியார் நிறுவனம் மலேசியாவிலிருந்து 54 ஆயிரம் டன் மணலை தமிழகத்தைவிட குறைந்தவிலையில் முறையான ஆவணங்களுடன் கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு கொண்டு வந்துள்ளது. ஆனால் மாவட்ட நிர்வாகமும், கனிமவள அதிகாரிகளும், தமிழகத்தை விடக் குறைந்தவிலை வாங்கப்பட்டு இறக்குமதி செய்யப்பட்ட மணலைத் துறைமுகத்தில் இருந்து வெளியே விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

மணல் கொள்ளையர்களின் நெருக்கடியின் பேரில் கனிமவள அதிகாரிகள் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரியவருகிறது. தமிழக ஆறுகளில் அளவில்லாமல் மணலை அள்ளி அதனைப் பன்மடங்கு அதிக விலைக்கு விற்றுவரும் மணல் மாஃபியாக்களின் இந்த நடவடிக்கையை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

ஆற்றில் ஒரு டன் மணல் உருவாவதற்கு 150 ஆண்டுகளும்அணைகள் இல்லாத ஆற்றில் ஆண்டுக்கொரு முறையாவது கரைபுரண்டு வெள்ளம் வந்தால், 5 ஆண்டுகளில் 1 செ.மீ. ஆழம் மணல் உருவாகும் என்றும் ஆய்வாளர்கள் கணக் கிட்டுள்ளார்கள். ஆனால் அதிகரித்து வரும் கட்டுமான வேலைகளின் காரணமாக, ஆற்று மணலின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. இதனால் ஆறுகள் பெருளவில் மணலை இழந்து, சுற்றுச்சூழலுக்குப் பாதகம் ஏற்படக்கூடிய ஒரு நிலை ஏற்படுகிறது.

எனவே, தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மணல் தட்டுப்பாட்டைப் போக்கவும், தமிழகத்தில் ஆறுகள் சூறையாடப்படுவதை தடுத்து நிறுத்தவும், மலேசிய மணலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கத் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தொடர்ந்து வெளிநாட்டு மணல் இறக்குமதிக்கு அனுமதிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.