நதிகள் இணைப்பில் பன்னாட்டு சூழ்ச்சியை அம்பலப்படுத்திய ஜெயராமன் மீது தேசத் துரோக வழக்கா?'- ஜவாஹிருல்லா கண்டனம்

மமக அறிக்கைகள்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் ‘நதிகள் இணைப்பு திட்டம்- ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா’ என்ற தலைப்பில் நூலை எழுதியதற்காக அவர் மீது தேசத் துரோக வழக்கை பதிவுச் செய்துள்ளது என்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

நதிகள் இணைப்பு திட்டத்தில் பன்னாட்டு முதலாளிகளை ஈடுபடுத்தி நதிகளை இணைத்துவிட்டு, அவற்றைப் பன்னாட்டு முதலாளிகள் செய்துள்ள முதலீட்டுக்காக அந்நதிகளை அவர்களிடமே ஒப்படைத்து நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகளைப் பன்னாட்டு முதலாளிகளிடம் காசு கொடுத்து நீரை வாங்கிப் பயன்படுத்தும் சூழலை மத்திய மாநில அரசுகள் உருவாக்கி வருகின்றன  என்பது குறித்து பேரா. ஜெயராமன் அவர்களின் இந்நூல் தெளிவுபடுத்துவதன் காரணமாகவே இந்நூல் தடை செய்யப்பட்டுள்ளது. மத்திய பாஜகவின் கைப்பாவையாகச் செயல்பட்டுவரும் எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு பாஜகவின் செயல்களுக்கு எதிராக பேசிவருவர்கள் மீதும், எழுதிவருபவர்கள் மீதும் ஒடுக்குமுறையை ஏவும் செயல்களில் ஈடுப்பட்டுவருகிறது.

ஏற்கெனவே பாஜகவின் மக்கள் விரோத செயல்களை விமர்சித்த காரணத்தால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றம் விடுதலை செய்து தமிழக அரசின் சர்வாதிகார செயலுக்குக் குட்டு வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, தமிழக அரசு பேரா. ஜெயராமன் மீதான தேச துரோக வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.