மதுரை வக்ஃப் வாரிய கல்லூரிக்கான பேராசியர்கள் தேர்வை வெளிப்படையாக நடத்த மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!

மமக அறிக்கைகள்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

தமிழ்நாடு வக்ஃப் வாரியத்தின் கீழ் மதுரையில் இயங்கிவரும் மதுரை வக்ஃப் வாரிய கல்லூரிக்கான பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான விளம்பரம் வெளியிடப்பட்டு தற்போது விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

மதுரை வக்ஃப் வாரிய கல்லூரிக்கான பேராசிரியர் பணியிடங்களுக்கு பல லட்ச ரூபாய் பேரம் பேசப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே அதே கல்லு£ரியில் தற்காலிக மற்றும் பகுதி நேர பேராசிரியர்களாகப் பணியாற்றி வருவோர் பலர் இருக்க, புதிய பேராசிரியர்களை வெளியிலிருந்து தேர்ந்தெடுப்பது சரியான முறையாக இருக்காது என மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது.

மேலும், மதுரை வக்ஃப் வாரிய நிர்வாகக் கமிட்டி நியமனம் தொடர்பான வழக்கு மதுரை நீதிமன்றத்திலும், சென்னை உயர்நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ள நிலையில் கல்லூரி நிர்வாகக் கமிட்டியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த பேராசிரியர் பணியிடம் தொடர்பான நடவடிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, தமிழ்நாடு வக்ஃப் வாரிய முதன்மை செயல் அதிகாரி தலைமையில் மதுரை வக்ஃப் வாரிய கல்லூரிக்கான பேராசிரியர் பணியிடங்களை வெளிப்படையான முறையில் நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.