பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரனின் அதிகாரம் குறைப்பு! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

மமக அறிக்கைகள்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் உதயச்சந்திரனின் அதிகாரத்தை பறிக்கும் வகையில் பள்ளிக் கல்வித்துறையின் முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவை தமிழக அரசு நியமித்துள்ளது. இதன்மூலம் இனிவரும் காலங்களில் உதயச்சந்திரன் பிரதீப் யாதவின் கீழ் செயல்பட வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ். பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் பதவியின் அதிகாரத்தைப் பறித்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.

உதயச்சந்திரனை பள்ளிக்கல்வி செயலாளர் பதவியிலிருந்து நீக்க தமிழக அரசு முயற்சி எடுத்த போது மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி மற்றும் கல்வியாளர்களின் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். அவரை அப்பொறுப்பிலிருந்து நீக்க கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை சுற்றி வளைத்து மீறும் வகையில் பள்ளிக்கல்வி துறைக்கு முதன்மை செயலாளர் ஒருவரை நியமித்து திரு. உதயசந்திரனின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன.

தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் உருப்படியாக ஒரு துறை செயல்பட்டதென்றால் அது பள்ளிக்கல்வித்துறை மட்டுமே, கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக எந்தவித முன்னேற்றமும் இல்லாத பள்ளிக் கல்வித் துறையை 5 மாதங்களில் எண்ணற்ற திட்டங்களைக் கொண்டுவந்து அத்துறைக்கு புத்தொளி கொடுத்து மாணவர்கள்,ஆசிரியர்கள், பெற்றோர்களின் பாராட்டுக்களைப் பெற்றவர் உதயசந்திரன்.

ஊழலில் ஊறியிருந்த பள்ளிக்கல்வித் துறையில் ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம் தேவையென நடவடிக்கை எடுத்த உதயசந்திரனை தனது ஆட்சியை தக்கவைக்க பல தில்லுமுல்லுகளை செய்து ஆட்சியில் தொடரும் திரு.எடப்பாடி பழனிசாமி அரசு இதுபோன்ற ஒரு திறமையான நேர்மையான அதிகாரியின் அதிகாரத்தைக் குறைந்துள்ளது கண்டனத்திற்குரியது.

பள்ளிக் கல்வித்துறையில் திரு. உதயசந்திரனின் அதிகாரத்தை குறைத்திருப்பது பள்ளிக்கல்வித் துறைக்கு ஒர் பேரிழப்பாகவே மனிதநேய மக்கள் கட்சி கருதுகிறது.

எனவே, தமிழக அரசு உடனடியாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயசந்திரனுக்கு மீண்டும் முழுமையான அதிகாரத்தை வழங்கி பழைய நிலையிலேயே அவர் பணியைத் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.