காரைக்காலில் சிறுமி பலாத்காரம்: நீதிக்காகப் போராடியவர்கள் மீது பொய் வழக்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

மமக அறிக்கைகள்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், சேத்தூர் பகுதியில் உள்ள ஸ்ரீ விக்னேஸ்வரா உயர்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி பயிலும் 4 வயது சிறுமி அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பக்கிரிசாமியால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டாள் என்ற அதிர்ச்சியான செய்தி கிடைத்ததையடுத்து தமுமுக, மனிதநேய மக்கள் கட்சியினர் உட்பட பல்வேறு சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர், பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளி தலைமை ஆசிரியர் பக்கிரிசாமியை கைது செய்ய வலியுறுத்தி சிறுமியின் குடும்பத்தாருடன் திருநள்ளார் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். இதனிடையே அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குற்றவாளியைக் கைது செய்ய வலியுறுத்தி சேத்தூரில் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தின் எதிரொலியாக குற்றவாளி தலைமை ஆசிரியர் பக்கிரிசாமி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் புகாரை வாபஸ்பெற பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோரிடம் பேரம் பேசிய பள்ளியின் தாளாளர் அன்பழகன் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையைக் கண்டித்தும், குற்றவாளிக்கு ஜாமின் வழங்கக்கூடாது என வலியுறுத்தியும் அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் காரைக்காலில் போராட்டம் நடைபெற்றது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்காகப் போராடிய 13 நபர்கள் மீதும், காரைக்காலில் போராட்டம் நடத்திய 15 பேர் மீதும் ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளது காரைக்கால் காவல்துறை. ஜனநாயக ரீதியில் போராடியவர்களின் மீது பொய்வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ள மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

எனவே, புதுச்சேரி முதல் அமைச்சர் மாண்புமிகு நாராயணசாமி அவர்கள் இவ்விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டவர் மீதும், பாலியல் குற்றவாளியைத் தப்பவைக்க முயற்சி செய்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கவும், சிறுமிக்காகப் போராடியவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்கை உடனே ரத்து செய்து அனைவரையும் விடுவிக்க வேண்டுமெனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.