முத்தலாக் தீர்ப்பு: புறவாசல் வழியாக பொதுசிவில் சட்டத்தைத் திணிக்க மோடி அரசு முயற்சிக்கக் கூடாது! 

மமக அறிக்கைகள்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

ஒரே நேரத்தில் “மூன்று முறை மண விலக்கு செய்கிறேன்” என்று கூறி விவாகரத்து செய்யும் முத்தலாக் விவாகரத்து முறை குறித்து இன்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, தீர்விற்கு பதிலாக குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

முத்தலாக் முறை அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணானது அல்ல என்று தலைமை நீதிபதி ஜே.எஸ் கெஹர் மற்றும் நீதிபதி அப்துல் நஜீர் ஆகியோர் தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்கள். முஸ்லிம் தனியார் சட்டத்தில் உள்ள பல்வேறு விதிமுறைகளில் முத்தலாக் முறையைஅனுமதிக்கும் விதிமுறை மட்டும் அரசிய லமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று நீதிபதிகள் லலித் மற்றும் ரோஹித் நரிமன் தெரிவித்துள்ளார்கள். முத்தலாக் விவாகரத்து முறை திருக்குர்ஆனுக்கு எதிரானது என்று நீதிபதி ஜோசப் குரியன் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

முத்தலாக் விவாகரத்து முறை செல்லத்தக்கது அல்ல என்று ஏற்கெனவே ஷமீம் ஆரா வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது. இந்த சூழலில் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் இன்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில் புதிதாக எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பது தான் எதார்த்தமான உண்மையாகும்.

நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, முத்தலாக் விவாகரத்து முறை குறித்து நாடாளுமன்றம் ஆறு மாதத்திற்குள் சட்டம் இயற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது தனது பொறுப்பை தட்டிக் கழிக்கும் நடவடிக்கையாகவே அமைந்துள்ளது.இது பல்வேறு குழப்பங்களுக்கும் வழிவகுக்கும்.

நீதிமன்றத் தீர்வை மக்கள் நாடிச் செல்லும் போது தீர்வைச் சொல்லாமல் சட்டமியற்றும் அவைக்கு அதனைத் திருப்பி அனுப்புவது சரியான நடவடிக்கையாக அமையாது. உச்சநீதிமன்றத்தின் முன்னால் பல்வேறு சமூக பிரச்னைகள் தொடர்பான வழக்குகள் வரும் போது உச்சநீதிமன்றம் பல நேரங்களில் அப்பிரச்னையில் எப்படி தொடர்புடையவர்கள் நடக்க வேண்டும் என்பது குறித்து வழிகாட்டும் நெறிமுறைகளை வகுத்துள்ளது. எடுத்துக்காட்டாக பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் தொல்லைகளைத் தடுக்க 1997ல் விசாகா வழக்கில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்களைவெளியிட்டது. குறைந்தபட்சம் அதுபோன்ற நடைமுறையைப் பின்பற்றாமல் முத்தலாக் முறை குறித்து சட்டமியற்றுமாறு நாடாளுமன்றத்திற்கு பணித்துள்ளது தேவையற்ற வழிமுறையாகும்.

முத்தலாக் முறை பாவகரமானது என்றும், திருமணத்தின் போது, முத்தலாக் முறையில் விவாகரத்து செய்யக் கூடாது என்று திருமண ஒப்பந்தத்தில் மணமகள் நிபந்தனையாக விதிக்கலாம் என்று அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் எடுத்துரைத்து அதனை பிரச்சாரம் செய்து வரும் நிலையில் இன்று வெளியாகியுள்ள உச்சநீதிமன்றத் தீர்ப்பு எந்தவொரு நன்மையையும் விளைவிக்கப் போவதில்லை.

ஆனால் இந்தத் தீர்ப்பை பயன்படுத்தி சட்ட ஆணையம் மூலம் பொது சிவில் சட்டத்தை திணிக்க மோடி அரசு முயலக் கூடும் என்ற அச்சம் சிறுபான்மை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. முஸ்லிம் தனியார் சட்டம் உட்பட தனியார் சட்டங்கள் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது அல்ல என்று ஏற்கெனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் கூட ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு பொது சிவில் சட்டம் குறித்தோ, பலதார மணம் குறித்தோ விசாரிக்க மறுத்து விட்டதையும், ஒட்டுமொத்தமாக தலாக் முறையையே தடை செய்ய வேண்டும் என்ற வாதம் உட்பட மத்திய அரசின் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களில் பல வாதங்களை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதையும் மோடி அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். இதேபோல்முஸ்லிம் தனியார் சட்டத்தை ஒட்டுமொத்தமாக அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்று இன்றைய தீர்ப்பு குறிப்பிடவில்லை. மேலும் முத்தலாக் விவாகரத்து முறை தவிர இடைவெளி விட்டு தலாக் என்னும் விவாகரத்து செய்யும் சரியான நடைமுறைக்கும் இந்த தீர்ப்பில் எவ்வித தடையும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தீர்ப்பைப் பயன்படுத்தி பொது சிவில் சட்டம் கொண்டு வர மோடி அரசு முனைந்தால் அதனை மதச்சார்பற்ற கட்சிகள் மற்றும் அமைப்புகள் துணையுடன் முஸ்லிம்கள் வலிமையாக ஒன்று சேர்ந்து முறியடிப்பார்கள் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.