நமது நாட்டின் பண்மை பண்பை கட்டிக் காக்க உறுதி எடுப்போமாக!

மமக அறிக்கைகள்

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் விடுதலைத் திருநாள் வாழ்த்துச் செய்தி:

 

இந்தியாவின் விடுதலைத் திருநாள் வாழ்த்துக்களை அனைவருக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இன்ன பிற மதத்தினர் மற்றும் மதநம்பிக்கையில்லாத அனைவரும் ஒன்று சேர்ந்து மிகப் பெரும் தியாகங்களைப் புரிந்து நமது நாடு இதே நாளில் 1947ல் விடுதலை அடைந்தது. நமது நாட்டின் அடிப்படை விழுமியம் வேற்றுமையில் ஒற்றுமை காண்பது. அந்த விழுமியத்தை நன்கு உணர்ந்து நமது விடுதலைப் போராட்ட வீரர்கள் நமது நாட்டை ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக சோசலிச குடியரசாக பிரகடனம் செய்தனர்.

ஆங்கிலேயர்கள் நமது நாட்டை முதலில் வர்த்தக ரீதியாகவே அடிமைப்படுத்தினர். அத்தகைய அடிமை தழை தான் விடுதலைப் போராட்டத்தின் தொடக்கமாக அமைந்தது. இன்று நமது நாடு விடுதலை அடைந்து 70 ஆண்டுகள் கழிந்த பிறகும் பல்வேறு மாறுபட்ட வடிவங்களில் நாட்டைப் பொருளாதார ரீதியில் அடிமைப்படுத்த நமது நாட்டின் ஆட்சியாளர்களின் துணையுடன் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சாதாரண இந்தியக் குடிமகன் அனுபவித்து வரும் பொருளாதாரச் சுதந்திரம் ஒவ்வொன்றாக பறிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய அபாயகரமான போக்கிற்கு எதிராகவே நமது விடுதலைப் போராட்ட வீரர்கள் அரும்பாடு பட்டு தனி மனிதனுக்கு கருத்து ரீதியாக பொருளாதார ரீதியான ஒன்று சேர்ந்து போராடுவதற்கான மற்றும் உயிர் வாழ்வதற்கான சுதந்திரத்தைப் பெற்றுத் தந்தார்கள். ஆனால் இன்று விடுதலைப் பெற்ற நமது நாட்டில் இந்த சுதந்திரங்களுக்கெல்லாம் பெரும் சவால் ஏற்படும் நிகழ்வுகள் அன்றாடம் நடைபெற்று நமக்கு கவலை அளித்து வருகின்றன.

நமது நாடு பலதரப்பட்ட மத, மொழி, கலாச்சார அடையாளங்களைக் கொண்டது. இதனை உலகிற்கு பறைசாற்றும் விதமாகவே உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில் நமது நாட்டின் ரூபாய் நோட்டுகளில் 18 மொழிகள் இடம் பெற்றுள்ளன. இந்த பன்மை பண்பை கட்டிக்காக்கவும் நமது நாட்டின் உயிர் மூச்சான வேற்றுமையில் ஒற்றுமைக் காணும் விழுமியங்களை வலுப்படுத்தவும் இந்த 71வது விடுதலைத் திருநாளில் நாம் உறுதி எடுத்துக் கொள்வோமாக.

அனைத்து சக இந்தியர்களுக்கும் மீண்டும் எனது விடுதலைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்.