மருத்துவ கல்லூரி சேர்க்கையில் சிபிஎஸ்சி மாணவர்களுக்கு 15% இடம் என்பது அநீதியானது

மமக அறிக்கைகள்

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

நீட் தேர்வு அடிப்படையில் இந்த கல்வியாண்டில் தமிழக மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்ற தமிழக சட்டமன்றத்தில் தமிழக அரசின் சார்பாக செய்யப்பட்டுள்ள அறிவிப்பை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 15% இடம் ஒதுக்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பும் அநீதியானது. தமிழகத்தில் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 2 விழுக்காடு தான். இத்தகைய மாணவர்களுக்கு 15% இடங்களை ஒதுக்கியிருப்பது நியாயமற்ற நடவடிக்கையாகும். தமிழக அரசு இதனை மறுபரிசீலனைச் செய்து தமிழக அரசின் பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 97 விழுக்காடு இடங்களை ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி கோருகின்றது.


தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு அளிக்க நிறைவேற்றப்பட்ட இரண்டு மசோதாக்களுக்கு குடியரசு தலைவரின் ஒப்புதலை பெறுவதற்கு உரிய அழுத்தம் கொடுக்க தமிழக அரசு தவறி விட்டது. தனது தோல்வியை மறைக்க மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு 85 விழுக்காடு இடங்கள் சிபிஎஸ்சி மாணவர்களுக்கு 15% இடங்கள் என்ற அறிவிப்பை செய்துள்ளது. ஆனால் இந்த அறிவிப்பு மூலம் தமிழக அரசு தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரி இடங்களை நீட் அடிப்படையில் ஒதுக்க ஒப்புதல் அளித்து விட்டு தமிழகத்தில் காலங்காலமாக பின்பற்றப்பட்டு வரும் சமூக நீதிக்கு அதிமுக அரசு பெரும் பங்கம் விளைவித்துள்ளது.


நீட் தேர்வு முடிவுகளும் வெளிப்படையாக அறிவிக்கப் படவில்லை. ஒத்துமொத்தமான தரவரிசை வெளியிடப்படாமல் முடிவுகள் அறிவித்திருப்பது பல்வேறு முறைகேடுகளுக்கே வழிவகுக்கும்.அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் இடஒதுக்கீடு அனுபவிக்ககும் வகுப்பாருக்கு பொது ஒதுக்கீடு இடங்களில் இடம் பெற முடியாது என்று சிபிஎஸ்சி அறிவித்திருப்து சமூக அநீதியாகும். இதன் மூலம் முற்பட்ட சமூகத்தாருக்கு ஒரு வகையான இடஒதுக்கீடு அளிக்கும் முயற்சி நடைபெற்றுள்ளது. தமிழக அரசு மத்திய அரசின் இந்த மறைமுக முற்பட்ட சாதியினருக்கான இடஒதுக்கீடு முறையை பின்பற்ற கூடாது என்று மனிதநேய மக்கள் கட்சி கோருகின்றது. இடஒதுக்கீடு பெறும் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தால் தகுதியின் அடிப்படையில் அவர்களுக்கும் பொது பட்டியலில் இடம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.