ஈகையால் இதய மலர்கள் பூக்கட்டும், இந்திய தேசம் ஓங்கட்டும்

மமக அறிக்கைகள்

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா.ஜவாஹிருல்லா வெளியிடும் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி

இஸ்லாமின் இரு பெருநாட்களில் ஒன்றான ஈகைப் பெருநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் இதயகனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம்.

மனிதர்களுக்கு உதவ இரு கை இருப்பது போல, மனிதத்திற்கு உதவ ஈகை என்ற இனிய குணம் இருக்கிறது. இஸ்லாம் மார்க்கம் எளியோர்க்கு உதவும் ஈகைப் பண்பைப் பெரிதும் வலியுறுத்துகிறது. இந்த பண்பபை வளர்த்துக் கொள்ள பெரிதும் உதவிடுவதே ரமலான் மாதம். ஒரு மாதம் முழுவதும் பசித்திருந்து தாகித்திருந்து நோன்பை நிறைவேற்றினோம். ஏழை எளிய மக்களின் துயரங்களை உணர்ந்ததுடன் அவர்களுக்கு ஜகாத் என்னும் கடமையை நிறைவேற்றும் வகையில் வாரி வழங்கினோம்.

இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் வாழ்வு, ஈகை வழியிலானதாய் இருக்கிறது.

உஹது மலை (அரேபியாவின் பெரிய மலை) அளவு செல்வம் எனக்கு இருப்பினும், அது மூன்று நாளுக்கு மேல், என்னிடம் இருப்பதை விரும்பமாட்டேன் என்று கூறி, வாரி வழங்கி வந்தார்கள். ஆட்சித் தலைவராகவும், ஆன்மீகத் தலைவராகவும் திகழ்ந்த நபிகள் நாயகம், தம் வாரிசுகளுக்கு சொத்து எதுவும் வைத்துச் செல்லவில்லை.

எளிய வாழ்வைத் தான் தேர்ந்தெடுத்துக் கொண்டு, ஏழையர்க்கு வழங்குவதையே தன் வழிமுறையாக்கி வைத்தார்கள்.

விவசாயிகளும், சிறு வியாபாரிகளும், பெரும் நெருக்கடியை சந்தித்து வரும் இந்நாளில், அவர்கள் மீதும், அடித்தட்டில் உழல்கின்ற அனைவரின் மீதும் சமூகத்தின் அக்கறையும், அன்பும் குவிய வேண்டும். ஏழை, எளியோரை அரவணைப்பதன் மூலம் இந்த தேசத்தின் எழுச்சிக்கு நாம் உதவ வேண்டும். வறிய மக்களுக்கு உறுதுணையாக நிற்க இந்நன்னாளில் உறுதி எடுப்போம். சகோதரத்துவமும் சமூக நல்லிணக்கமும் நமது நாட்டில் தலைதோங்க பாடுபடுவோம்.

வறிய மக்களின் வாட்டம் நீங்கவும் வளம் பெற்றும் தேசம் ஓங்கவும், மழைப் பொழிந்து வறட்சி நீங்கவும் இந்த நன்னாளில் பிராத்திப்போம். அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்.