குழந்தைகளுக்கான நூல்களுக்கு விதிக்கப்பட்ட 12 சதவீத ஜி.எஸ்.டி வரியை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று ஜவாஹிருல்லா கோரிக்கை

மமக அறிக்கைகள்

குழந்தைகளுக்கான நூல்களுக்கு விதிக்கப்பட்ட 12 சதவீத ஜி.எஸ்.டி வரியை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

“ஜூலை, 1ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் பொருட்கள் மற்றும் சேவை வரி எனப்படும் ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட முடிவெடுத்திருக்கும் நிலையில் எந்தெந்த பொருட்களுக்கு எவ்வளவு வரி என்பதை நிதி அமைச்சகம் அறிவித்து வருகிறது.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் அடிப்படையில் 3 வயது முதல் 12 வயது வரை உள்ள சிறுவர்கள் பயன்படுத்தும் வண்ணம் தீட்டும் புத்தகங்கள், கூட்டெழுத்து பயிற்சி புத்தகங்களுக்கு 12 சதவீத வரி விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. மத்திய பாஜக அரசின் இந்த அறிவிப்பு கோடிக்கணக்கான குழந்தைகள் மற்றும் பெற்றோர்களுக்கு பெரும் சுமையாகவே இருக்கும். இந்த வரிவிதிப்பால் குழந்தைகளின் அறிவுத் திறன் மற்றும் கையெழுத்துத்திறன் வளர்ச்சி பாதிக்கப்படும்.

ஆபாச (மஞ்சள்) புத்தகங்கள் உட்பட இதர புத்தகங்களுக்கு ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில் குழந்தைகளின் அறிவுத் திறனை வளர்க்கும் புத்தகங்களுக்கு 12 சதவீத வரி விதிப்பு என்பது ஏற்றுக்கொள்ள இயலாதது.

ஒரு பக்கம் சர்வ சிக்ஷா அபியான் எனப்படும் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ் பயிலும் குழந்தைகளுக்கு புத்தகங்களை இலவசமாக வழங்க முயற்சிக்கும் மத்திய அரசு மறுபக்கம் குழந்தைகளுக்கான புத்தகங்களுக்கு 12 சதவீதம் வரி விதித்துள்ளது. மத்திய பாஜக அரசின் இச்செயல் குழந்தைகளின் மீது மோடி அரசிற்கு உள்ள அக்கறையின்மையை வெளிக்காட்டுகிறது.

எனவே, சிறுவர்கள் பயன்படுத்தும் புத்தகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை முழுமையாக திரும்பப் பெற்று குழந்தைகளின் அறிவாற்றலை வளர்க்க உரிய நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொளகிறேன்" என அவர் தெரிவித்துள்ளார்.