உழைப்பாளிகளை மதிப்போம்! உலகத்தைக் காப்போம்! மமக மே தின வாழ்த்துச் செய்தி

மமக அறிக்கைகள்

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா வெளியிடும் மே தின வாழ்த்துச் செய்தி:

உலகம் முழுவதும் வேலை செய்யும் தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலைக்காக கடந்த 130 ஆண்டுகளுக்கு முன்பு மே1 தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்ட எழுச்சி மே தினமாக உருவாகி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உழைக்கும் மக்களின் மகத்துவத்தை உலகிற்குப் பறைசாற்றும் நாள் தான் இந்த மே தின நாள்.

இந்திய நாட்டின் வளர்ச்சிக்காகவும், பொருளாதார முன்னேற்றத்திற்காகவும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் அயராது உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் மே தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தனியார்மயம், உலகமயம் என்ற கொள்கையை மத்திய, மாநில அரசுகள் கடந்த 25 ஆண்டுகளாக தீவிரமாக அமல்படுத்தி கார்ப்பரேட் முதலாளிகளின் இலாபவெறிக்கு தொழிலாளிகளை மட்டுமின்றி விவசாயிகள், சிறுவணிகர்கள், நெசவாளர்கள் உள்ளிட்ட அனைத்து வர்க்கங்களையும் பேரழிவில் தள்ளி வருகின்றன. நாட்டில் உள்ள இயற்கை வளங்கள், தாது வளம், ஆயிரக் கணக்கான சிறுதொழில்கள் ஆகிய அனைத்தையும் சூறையாடி வருகின்றன.

வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு எங்குபார்த்தாலும் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, கார்ப்பரேட் மற்றும் பாசிசத்தின் கூட்டாட்சி நாட்டையும், வீட்டையும் நாசப்படுத்திக் கொண்டிருக்கும் இந்த வேளையில் தொழிலாளர்கள் தமது உழைப்பாலும், ஒற்றுமையாலும் இந்த சதிகளை முறியடிக்க உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். மனிதநேய தொழிற்சங்கம் உட்பட அனைத்து தொழிற் சங்கங்களை சார்ந்த தொழிலாளர்கள் எல்லா வளங்களும், நலங்களும் பெற்று நல்வாழ்வு வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன். அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்.