திருநெல்வேலி முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி படுகொலை! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

மமக அறிக்கைகள்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா.எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

திருநெல்வேலி மாநகராட்சியின் முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் அவருடைய வீட்டின் பெண் பணியாள் ஆகியோர் நேற்று அவருடைய வீட்டிலேயே கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த படுகொலை செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த படுகொலையை வன்மையாக கண்டிக்கின்றேன்.

உமாமகேஸ்வரியின் இந்த மரணத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திமுக சார்பில் போட்டியிட்டு திருநெல்வேலி மாநகராட்சியின் முதல் பெண் மேயராக பொறுப்பு வகித்த உமாமகேஸ்வரி அவர்கள், மாற்றுக் கட்சியினரையும் அரவணைத்துக் கொண்டு மாநகராட்சி நிர்வாகத்தைக் குறை சொல்ல முடியாத அளவிற்கு நடத்தியவர்.

தமிழகம் அமைதி பூங்காவாகத் திகழ்கிறது எனத் தமிழக முதலமைச்சர் உட்பட மாநில அமைச்சர்கள் தெரிவித்து வரும் நிலையில் இதுபோன்ற படுகொலைகள் நடந்துவருவது மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதை பறைசாற்றுகிறது.
உமாமகேஸ்வரி அவரது கணவர் உள்ளிட்டோரைப் படுகொலை செய்தவர்களை உடனே கண்டுபிடித்து கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.