மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நெல்லை வீரவநல்லூர் பள்ளி ஆசிரியரைக் கைது செய்ய வேண்டும்!

மமக அறிக்கைகள்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நெல்லை வீரவநல்லூர் பள்ளி ஆசிரியரைக் கைது செய்ய வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி கோரிக்கை!! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பேரூராட்சியில் உள்ள பாரதியார் அரசு மேல்நிலை பள்ளியில் இருபாலருமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த 23.-01.20-18 அன்று இந்தப் பள்ளியின் தாவரவியல் ஆசிரியர் அல்கீஸ் அமல்ராஜ் என்பவர் அந்த பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவி ஒருவரை ஆய்வகத்திற்கு அழைத்து ஆபாசமாகப் பேசி பாலியல் தொல்லை செய்துள்ளார். இப்பிரச்சினையில் மாணவியின் பெற்றோர் தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்த போது அவர் நடவடிக்கை எடுக்காமல், பணம் பெற்று தருவதாக கட்டப் பஞ்சாயத்து செய்துள்ளார்.

வீரவநல்லூர் காவல் நிலையத்தில் சிறுமியின் தந்தை புகார் அளித்ததன் பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 12.02.2018 அன்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி மற்றும் காவல்துறை பெண் அதிகாரி முன்னிலையில் முப்பது மாணவிகள் குற்றவாளிக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளனர்.

இரண்டு முறை மாவட்ட நீதிமன்றம் முன்பிணை மனுவை தள்ளுபடி செய்த சூழலில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் குற்றவாளியின் முன்பிணை மனு நிலுவையில் இருக்கும் போது குற்றவாளியின் நெருங்கிய உறவினர் மற்றும் நண்பர் என அதே பள்ளியின் இரண்டு ஆசிரியர்கள் சாட்சியம் அளித்த மாணவிகளிடம் காவல்துறையின் நிர்பந்தம் காரணமாகவே தாங்கள் சாட்சியம் அளித்ததாக தலைமை ஆசிரியர் மூலமாக மாவட்ட ஆட்சியருக்கு மனு அளிக்குமாறு நிர்பந்தம் செய்துள்ளனர்.

இது குறித்தும் கடந்த 22.02.2018 அன்று புகார் அளிக்கப்பட்டும் நடவடிக்கை இல்லை. இச்சம்பவம் நடைபெற்று ஒன்றரை மாதம் கடந்தும், இரண்டு முறை மாவட்ட நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்திலும் முன்பிணை மறுக்கப்பட்ட பின்னரும் குற்றவாளியை கைது செய்யாமல் காவல்துறை மெத்தனப் போக்கில் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. காவல்துறையால் இக்குற்றவாளிகளைக் கையாளும் மெத்தனப் போக்குதான் குற்றவாளிகளுக்கு சாதமாக உள்ளது.

எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மேற்படி பாலியல் தொல்லை கொடுத்த குற்றவாளி அமல்ராஜை உடனடியாகக் கைது செய்வதோடு குற்றவாளிக்கு உதவி செய்யும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.