ஞானி மறைவு: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்

மமக அறிக்கைகள்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

மூத்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான ஞானி அவர்கள் மறைவடைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

நாடக ஆசிரியராக எழுத்தாளராக சுற்றுச்சூழல் ஆர்வலராக என்று பன்முக திறமை வாய்ந்தவராக விளங்கிய ஞானி அவர்கள் பழகுவதற்கு இனிமையானவராக விளங்கினார். தனது கருத்துகளை சமரசமின்றி வெளிப்படுத்தி வந்தார்.

நமது நாட்டின் பன்முகத்தன்மையை சரிவர உணர்ந்தவராகவும், மதசார்பற்றக் கொள்கையில் மாசற்ற பற்றுடையவராகவும் ஞானி விளங்கினார். நாடகம், எழுத்து. தொலைக்காட்சி விவாதம், முகநூல் பதிவு என மாறிவரும் ஊடக சூழலுக்கேற்ப தனது கருத்துகளை சளைக்காமல் ஞானி பதிவுச் செய்து வந்தார். சமீபத்தில் தான் அவர் ஒ பக்கங்கள் என்ற பெயரில் யூடியூப் சேனலையும் ஆரம்பித்து அதன் வழியாகவும் தினந்தோறும் நாட்டு நடப்புகள் குறித்த அவரது பார்வையை வெளிப்படுத்த தொடங்கினார். தனது இறுதி மூச்சு வரை மதசார்பின்மைக்கு எதிராக, சமூக நல்லிணக்கததிற்கு விரோதமாக செயல்பட்டு வருவோரை அம்பலப்படுத்தும் பணியை மேற்கொண்டு வந்தார். இதற்கு சாட்சியாக அமைந்துள்ளது அவரது கடைசி முகநூல் பதிவு.

நமது நாட்டின் மதசார்பற்ற கொள்கை மிகப் பெரும் சவால்களை எதிர்நோக்கும் இக்காலக்கட்டத்தில் ஜனநாயகத்திற்கு ஆபத்து என்று உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகள் எச்சரித்துள்ள இவ்வேளையில் ஞானி அவர்களின் மரணம் நாட்டிற்கு ஒரு பேரிழப்பாகும். ஞானி அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.