மனங்களை செதுக்கும் மறுமை சிந்தனை

புத்தகப் பூங்கா

இஸ்லாமிய அடிப்படைக் கோட்பாடுகளில் இறைநம்பிக் கையுடன் மறுமையின் மீதுள்ள நம்பிக்கையும் சேரும்போதுதான் அது முழுமை பெறுகிறது.

இந்த உலகில் மனிதன் மரணித்தப் பின் என்ன நடக்கிறது என்பதனை இஸ்லாமியப் பார்வையில் விளக்கும் நல்ல நூலாக மலர்ந்துள்ளது ‘திருக்குர்ஆனில் மறுமை’ எனும் நூல். 

இஸ்லாமியப் பேரறிஞர்களில் ஒருவரான கே. சி. அப்துல்லாஹ் மௌலவி அவர்கள் எழுதிய “பரலோகம் குர்ஆனில்” எனும் மலையாள நூலினை தமிழில் கே.எம்.முஹம்மத் எளிய நடையில் மொழி பெயர்த்துத் தந்திருக்கின்றார். இஸ்லாத்தின் மறுமை கோட்பாட்டை முழுமையாக நம்பும் முஸ்லிம்கள் அது பற்றிய செய்திகளை குர்ஆனிலிருந்தும், நபிமொழிகளிலிருந்தும் குறைந்த அளவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். இந்த நூல் மறுமை நிகழ்வின் காட்சிகளை குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நம் மனக்கண் முன் நிறுத்துகிறார். மொத்தம் ஏழு அத்தியாயங்களில் பல்வேறு உட்தலைப்புகளுடன் வாசகர்களுக்கு மறுமை சிந்தனைகளை விதைத்திருக்கிறார் ஆசிரியர். இம்மை வாழ்வு, மண்ணறை வாழ்வு, மறுஉலக வாழ்வு என மறுமை வாழ்க்கையை மூன்று வகையாக பிரிக்கலாம். இறைவன் மனிதனை படைத்ததின் நோக்கம் குறித்து குர்ஆன் கூறுவதையும், நபிமார்களுக்கு இறைவன் கொடுத்த பொறுப்புக்கள் என்ன என்பதனையும் விளக்குகிறார்.. மரணம் எத்தகையது? அது இரண்டு வகையிலானது. நல்லவர்களின் மரணம் இலகுவானதாகவும் தீயவர்களின் மரணம் கடினமானதாகவும் இருக்கும் என்பதனையும் மார்க்க அடிப்படையில் நிறுவுகிறார்.

பர்ஸக் எனும் ஆன்மாக்கள் வாழுமிடம் குறித்த பதிவில் தூய ஆன்மாவின் நிலை, தீய ஆன்மாவின் நிலைகள் குறித்து விரிவாக விளக்கி கூறியுள்ளார். பூமி முழுவதும் அழிக்கப்பட்டு மறுகட்டமைப்புக்கு உள்ளாக்கப்படும் நிகழ்வை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உலகம் எவ்வாறு அழிக்கப்படும் என்பதனையும் அந்த நாளில் மனிதர்களின் நிலை எவ்வாறானதாக இருக்கும் என்பதனையும் வாசிக்கும் போது வாசகர்கள் மனங்களில் இயல்பாக இறையச்சம் ஊடுருவுவதை தவிர்க்க முடியாது.

மஹ்ஷர் (நியாய தீர்ப்பு நாள்) பெருவெளியில் நடைபெறும் விசாரணை, குற்றவாளிகள் பிடிக்கப்படுதல், கேள்விக் கணக்குகள், நல்லோர் தீயோரின் நிலைகள் போன்றவற்றை விரிவாக எடுத்துரைக்கிறார். தீர்ப்பு நாளில் விசாரணை முடிந்தவுடன் நரகத்திற்கு செல்பவர்கள் எவ்வாறு புகுவர் சொர்க்கத்திற்கு செல்பவர்கள் எவ்வாறு நுழைவர் என்பதனையும் அறிய முடிகிறது.

நரகத்தில் குற்றத்திற்கு ஏற்றவாறு வழங்கப்படும் தண்டனைகளையும் அதன் கடுமைகளையும் அடுக்கடுக்காய் பட்டியலிடுகிறார்.. சொர்க்கத்தில் நுழைபவர்களுக்கு அங்கு எந்த மாதிரியான வசதிகளை இறைவன் ஏற்படுத்தி வைத்துள்ளான் என்பதனையும் எடுத்தியம்பி ஆர்வமூட்டுகிறார். சமகாலச் சூழலில் இயக்கவாதிகள் செய்யும் மார்க்க விரோத போக்குகளையும் மேற்கோள் காட்டி இதனால் சுவர்க்கம் நுழைவதற்கு தடை உண்டாகும் என்பதனை சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர்;. இந்நூலை முழுமையாக வாசித்து முடித்தப்பின் மனத்தில் அழுக்குகள் களைந்து இறையச்சம் அதிகரிக்கச் செய்யும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

பக்கங்கள்: 276
விலை: 210
திருக்குரானில் மறுமை
கே.சி.அப்துல்லாஹ் மௌலவி,
இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், 138, பெரம்பூரர் நெடுஞ்சாலை,
சென்னை&12, 044-&26624401