விடுதலைப் பெற்ற இந்தியாவின் முதல் பயங்கரவாதியை அம்பலப்படுத்தும் ஆவணம்:

புத்தகப் பூங்கா

காந்தியை கோட்சே கொலை செய்தான் என்ற ஒற்றை வரியோடு இந்த படுகொலை முடிந்துவிடவில்லை.முன்னும் பின்னும் உள்ள உண்மை வரலாற்றை வெளிக்கொணர்ந்து சிறந்த ஆவணமாக படைத்திருக்கிறார் பேராசிரியர் அருணன். ஒருபுறம் காந்தியை புகழ்வதும் மறுபுறம் அதே நாவால் கோட்சேயின் புகழ் பாடுவதும் நடைபெற்றுவரும் இச்சூழலில் " கோட்சேவின் குருமார்கள் "எனும் நூல் நான்காவது பதிப்பாக கூடுதல் தகவல்களுடன் விரிவான தரவுகளுடன் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காந்தியின் படுகொலையில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேர் குழுவில் சாவர்கர் மட்டும் சர்தார் பட்டேல் உதவியால் சாதுர்யமாக தப்பிக்க வைக்கப்பட்டார் என்பதனையும், சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் சியாம் பிரசாத் முகர்ஜி என்ற இந்து மகாசபையை சார்ந்தவர் அமைச்சராக பொறுப்பேற்று இருந்தார் என்பதனையும் இந்நூலில் பதிவு செய்திருப்பதன் வாயிலாக படுகொலையின் பின்னனியை நமக்கு உணர்த்துகிறார் அருணன். தேசப்பிதாவின் படுகொலையில் அரசு எந்திரமும் காவல்துறையும் எவ்வளவு மெத்தனமாக செயலாற்றியது என்பதனை இந்நூல் வழி உணரமுடியும்.


காந்தியின் கொலை என்பது இரண்டு மாறுபட்ட அரசியல் கோட்பாடுகளுக்கு இடையிலான மோதல். மனிதநேய அரசியலுக்கும், மதவெறி அரசியலுக்கும் இடையே நடந்த போர். அந்த மோதலை ஒரு கொடூரமான பயங்கரவாதத்தின் மூலமாக தீர்த்துவிட முனைந்தது ஆரியத்துவ மதவெறி கும்பல்.


இந்திய பிரிவினைக்கு யார் காரணம்?, நேருவுக்கும் படேலுக்கு மான மோதல், இந்துத்துவ கும்பல்களிடம் சர்தார் பட்டேலின் தள்ளாட்டம், கோட்சேயின் வாக்குமூலம், சாவர்க்கருக்கும் கோட்சேவுக்குமான தொடர்பு என பல்வேறு தலைப்புகளில் கோட்சேவையும் அவனது கும்பலையும் அம்பலப்படுத்துகிறார் ஆசிரியர். கோட்சே தனி மரமல்ல, அவனுக்கென்று ஒரு கொள்கை இருந்தது. ஒரு கூட்டம் இருந்தது. சதி வேலைகள் இருந்தது. தலைவர்கள் இருந்தனர்.செயல்திட்டம் இருந்தது என்பதனை இந்நூலை வாசிக்கும் அனைவரும் உணரலாம்.


குறிப்பாக அவுட்லுக் இதழில் வெளிவந்த ராகேஷ் ராமசந்திரன் எழுதிய இவரே சூத்திரதாரி? எனும் தலைப்பிட்ட கட்டுரை நூலின் பிற்சேர்க்கையில் இணைக்கப்பட்டுள்ளது.காந்தியார் படுகொலையில் சாவர்கருக்கும் கோட்சேவுக்குமான தொடர்பு குரு சீடன் உறவின் அடிப்படையிலானது. இது இந்துராஷ்டிரம் எனும் சித்தாந்தத்தில் பின்னப்பட்டிருக்கிறது.


காந்தியை துளைத்த தோட்டா கோட்சேவினுடைய துப்பாக்கியிலிருந்து வெளி யாகி இருந்தாலும் அந்த குற்றப் பின்னனியில் ஒரு பெருங்கூட்டம் மறைந்திருக்கிறது எனும் உண்மையை உலகிற்கு உரைக்கிறது இந்நூல்.


புரூட்டஸின் வாள் புனிதமானது என்ற முதல் அத்தியாயம் தொடங்கி சாவர்க்கர் காலடியில் கோட்சே எனும் அத்தியாயம் வரை ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மதவெறி அரசியலை தோலுரிக்கிறது. கோட்சேயின் தோட்டாக்கள் தற்போதும் பலரை பலி வாங்கிக் கொண்டு இருக்கும் சூழலில் அருணனின் எழுதுகோல் பயங்கரவாதத்திற்கெதிராக சுழன்று கொண்டே இருக்கிறது.

பக்கங்கள்: 72 விலை: 40
கோட்சேயின் குருமார்கள்
ஆசிரியர்: பேராசிரியர் அருணன்,
வசந்தம் வெளியீட்டகம்,
69/24ணீ, அனுமார் கோயில் படித்துறை, சிம்மக்கல்,
மதுரை-- & 625001.
தொடர்புக்கு: 0452-2625555.