ரோஹிங்கியா முஸ்லிம்கள்: முடிவு பெறாத ரணங்களின் தொகுப்பு

புத்தகப் பூங்கா

வரலாறு என்பது உண்மை நிகழ்வுகளின் பிரதிபலிப்பு. அது நமக்கும் ஒரு படிப்பினை. நமது அடுத்து தலைமுறைக்கும் ஒர் அரிய பாடம். அதில் கற்பனை கலப்பு கூடாது. உண்மை திரிபும் கூடாது. நடந்தவை நடந்தவையாக இருக்க வேண்டும். நடுநிலை பிரளா மனம் வேண்டும். இத்தகைய சீரிய வரையறையோடு தமிழ்கூறும் நல்லுலகிற்கு ரோஹிங்கியா முஸ்லிம்கள் குறித்து அபூஷேக் முஹம்மத் எழுதிய ‘கரையேறாத அகதிகள்’ நூல் வெளிவந்துள்ளது.


ரோஹிங்கிய முஸ்லிம்கள் படும் இன்னல்கள் குறித்த பதிவுகள் ஊடகங்கள் வாயிலாக போதிய அளவில் உலகிற்கு கொண்டு செல்லப்படவில்லை. மியான்மாரில் அரக்கன் பகுதியில் வாழும் சிறுபான்மை சமூகமான ரோஹிங்கிய முஸ்லிம்களை பர்மிய தேசியவாதிகளும் பவுத்த மதவெறியர்களும் இனப்படுகொலை செய்து குவிப்பதனையும், அவர்கள் அண்டை நாடுகளாலும் அலைகழிக்கப்படுவதையும் மிகுந்த கவலையோடு இந்நூல் பதிவு செய்துள்ளது.


“உலகை உற்றுநோக்குவதன் மூலமும், கண்டறிந்த உண்மைகளைத் தொகுத்து வகைப் படுத்துவதன் மூலமும், அவற்றிலிருந்து பொது விதிகளை வகுத்துக் கொள்வதன் மூலமும் அறிவை விரிவாக்கிக்கொள்ளலாம்” என்பது அறிஞர் ஃபிரான்ஸிஸ் பேகனின் கூற்று. இந்நூல் வாயிலாக அறிவை விரிவாக்கிக் கொள்வதற்கு பதில் வஞ்சிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை வாசகர்கள் எடுப்பதற்கு சகோதரர் அபூஷேக் முஹம்மத் அவர்களின் எழுத்து பெரிதும் உதவி இருக்கிறது.ஒரு நாட்டின் பூர்வ குடிமக்களாக வாழ்ந்து வரும் ஒரு இனத்தை அழிக்க வேண்டுமெனில் அவர்களை அந்நியர்கள், வந்தேறிகள், தேசவிரோதிகள் என்ற புனைவுகள் வாயிலாக மக்களின் மனங்களில் விதைத்து தொடர்ச்சியான செயல்திட்டங்களின் வழியே அழித்தொழிப்பில் ஈடுபடுவது என்பதே பாசிசத்தின் கொள்கை ஆகும். மியான்மரிலும் ரோஹிங்கிய முஸ்லிம்கள் மீது அதே செயல்திட்டமே கட்டவிழ்க்கப்பட்டுள்ளது.


1300 ஆண்டு கால வரலாறு


அரக்கன் பகுதியின் புவியியல் அமைப்பு, முஸ்லிம்களின் வரலாற்று பாத்திரம் போன்றவற்றை அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் விவரிக்கிறது இந்நூல். 1300 ஆண்டுகால முஸ்லிம்களின் வசிப்பிடத்தை 11ம் நூற்றாண்டிலிருந்து காலூண்றிய பவுத்த சாம்ராஜியம்16-ம் நூற்றாண்டிலிருந்து வேட்டையாடத் தொடங்கி விட்டது. தொடர்ச்சியாக ஆங்கிலேய ஆட்சியிலும் பின்னர் வந்த சோஷலிச ஆட்சியிலும், தற்போதைய ஆட்சியிலும் இனப்படுகொலை தொடர்ந்து கொண்டேதான் உள்ளது.


பர்மிய மொழியில் அரக்கன் என்ற சொல்லுக்கு என்னப் பொருளோ தெரியவில்லை. ஆனால் தமிழில் அரக்கன் என்ற சொல்லிற்கு ஏற்றபடி முஸ்லிம்கள் அரக்கத்தனமாக பவுத்த இனவாத இராணுவத்தின் மூலமாக வேட்டையாடப்படுவதை உணர முடிகிறது.பர்மா பர்மியர்களுக்கே என்ற முழக்கம் வாயிலாக முஸ்லிம்கள் நாட்டின் வந்தேறிகள் என்ற பிரச்சாரம் வீரியப்படுத்தப்பட்டு லட்சக் கணக்கில் கொன்றொழிக்கப்பட்டும் 50,000 குடும்பங்கள் வீடிழந்த வரலாறை நூல் வழி அறியும் போது இதயம் கணக்கிறது.


குடியுரிமை மறுக்கப்படுதல், வியாபாரத்தை அழித்தல், கல்வி மறுத்தல், வழிபாட்டு உரிமை மறுத்தல், வழிபாட்டுத் தலங்களை அழித்தல், குடியிருப்புகளை கொளுத்துதல், அகதிகளாக மாற்றுதல், சிறையில் கொடுமைப் படுத்துதல், பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குதல், கடத்தலுக்கு ஆட்படுத்துதல், கலவரம் ஏற்படுத்தி அழித்தொழித்தல் என ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைகளை இந்நூல் ஆவணப்படுத்தும் போது இலகிய நெஞ்சமுள்ள ஒவ்வொருவரின்கண்ணிலும் கண்ணீர் கசிவது இயல்பானதே. உலக இஸ்லாமிய நாடுகள் இவ்விஷயத்தில் மேற்கொண்ட நடவடிக்கை மற்றும் உதவிகள், ஐநாவின் முயற்சி போன்றவை போதிய பலனளிக்கவில்லை என்பதையும் கவலையோடு பதிவு செய்துள்ளார் நூலாசிரியர்.


முடிவு பெறாத ரணங்கள்

மியான்மார் முஸ்லிம்களின் மீது கட்டவிழ்க்கப்படும் அத்துமீறல்கள் முடிவுபெறாத ரணங்களாக தொடர்ந்து கொண்டே இருப்பது மிகப்பெரும் அவலம்.பயங்கரவாதத்தை யாரும் எதிர்க்காமல் இருக்க இயலாது. எவ்வளவு உயரிய அரசியல் நோக்கமாக இருப்பினும் அப்பாவி மக்களை பலியாக்குவதை யாரும் அனுமதிக்க முடியாது. மக்களின் மிக அடிப்படையான உரிமையாகிய உயிர் வாழும் உரிமையை பறிக்கிறது பவுத்த அடிப்படைவாதம். மரங்கள் சும்மா இருக்க நினைத்தாலும் காற்று விடுதில்லை. அநீதியை கண்டு அமைதியாக இருக்கமுடியுமா?இதனால்தான் தமிழகத்தில் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்கு நீதி வேண்டியும், படுகொலையை கண்டித்தும் எல்லா மாவட்டத் தலைநகரங்களிலும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டதையும் இங்கே பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளேன்.

“சுதந்திரமே எல்லாவற்றையும் விட உயர்ந்தது” என்கிறார் இங்கர்சால். தற்போது அகதிகள் முகாமில் வதைபட்டுகிடக்கும் முஸ்லிம்களின் சுதந்திரம் குறித்து கவலை நம் மனக்கண் முன்னே நிழலாடுகிறது. இந்நூலில் அளிக்கப்பட்டுள்ள தகவல்கள் சிறிது சிறிதாக இருப்பினும் அவை வரலாற்றில், ரோஹிங்கிய முஸ்லிம் சமூகம் வாழ்ந்த இருப்பையும் தெளிவாக சொல்லக்கூடியவை எளிய மொழிநடை, புகைப்படங்கள் போன்றவை வாசிப்புக்கு வலு சேர்த்துள்ளன. இது ஒரு இனத்தின் தகவல் பெட்டகம்.

சமூக அக்கரையோடு உண்மை வரலாற்றை சேகரித்து தொகுத்து வழங்கி இருக்கும் அபூஷேக் முஹம்மத் அவர்களின் பணி பாராட்டுக்குறியது.

“நம்பிக்கை கொண்டோரை உறுதியானகொள்கையின் மூலம் இவ்வுலக வாழ்கையிலும் மறுமையிலும் அல்லாஹ் நிலைப்படுத்துகிறான். அநீதி இழைத்தோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகின்றான். அல்லாஹ் நாடியதை செய்பவன்” (திருகுர்ஆன் - 14: 34)

ஆகையால் ரோஹிங்கிய முஸ்லிம்களுக்காக இறைவனிடம் கரமேந்துவோம் களமாடுவோம் இன்ஷா அல்லாஹ்.

Sign up via our free email subscription service to receive notifications when new information is available.