அழைப்பியலின் புதிய பார்வை

புத்தகப் பூங்கா

தமிழ் வாசிப்புலகில் கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் எழுதிய “புறப்படு நீயும் இஸ்லாத்தை நோக்கி” ஜி.வி.உமர் ஃபாருக் எழுதிய “சாதி ஒழிந்தது””செந்தமிழ்நாட்டுச் சேரிகள்”போன்ற நூல்களை தொடர்ந்து தலித் மக்களை இஸ்லாத்தின் பக்கம் அழைக்கும் நல்ல நூலாக ஏம்பல் தஜம்முல் முஹம்மது அவர்கள் எழுதிய “தலித் மக்களின் விடுதலைப்பேறு” வெளிவந்துள்ளது.

பத்து தலைப்புகளில் செரிவான உள்ளடக்கத்துடன் தலித் மக்களுக்கு அழைப்பினை விடுக்கிறார் ஆசிரியர். தற்கால சூழலில் சாதிக்கொடுமைக்கு எதிராக போராடிவிட்டு சாதி ஒழிப்பை பற்றி சிந்திக்காமல் இருப்பதை விமர்சிக்கும் இவர் சாதி ஒழிப்பிற்க்கு தீர்வாக இஸ்லாமை முதன்மை படுத்துகிறார்.

தமது அடுக்கடுக்கான வாதத்திற்கு வலு சேர்க்க பாவேந்தரின் கவிதைகள்,அறிஞர் அண்ணா,கலைஞர்,மகாத்மா காந்தி போன்றோர் உதிர்த்த கருத்துக்களை மேற்கோள்களாக கையாண்டுள்ளார். இஸ்லாம் குறித்தும் நபிகள் நாயகம் குறித்தும் மேலை நாட்டு அறிஞர்களான தாமஸ் கார்லைல்,லமார்ட்டின், ஜான் வில்லியம் ட்ரேப்பர்,வரலாற்று ஆசிரியர்கள் வி.ழி.ராய், எட்மண்ட்,கிப்பன், ஹேவல், மேனாள் இந்திய குடியரசு தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் போன்றோர் கூறிய வார்த்தை முத்துக்களை கோர்த்து அழைப்பு மாலையாக வாசகர்களுக்கு அளித்திருக்கிறார் ஏம்பலார்.தலித்தாக பிறந்து பின்பு இஸ்லாத்தை தழுவிய ராஷித் அலி என்ற சகோதரரின் மனமாற்றத்தை உரையாடல் பாணியில் பதிவு செய்திருப்பது கவனத்தை ஈர்க்கிறது. சாதி ஒழிப்பிற்காக போராடிய தந்தை பெரியாரையும்,புரட்சியாளர் அம்பேத்கரையும் தமது அழைப்பு பணிக்கு ஆங்காங்கே துணைக்கு அழைத்து பிரச்சாரம் செய்கிறார் ஆசிரியர். புரட்சியாளர் அம்பேத்கர் அரும்பாடுபட்டு தலித் மக்களுக்காக கண்டுபிடித்த ஒரு மாமருந்தை இப்போதைய பல தலைவர்களும் மயக்க மருந்தாக ஆக்கி வைத்து இருக்கிறார்கள். இது அம்பேத்கருக்கு செய்யும் துரோகம் என சாடி இருப்பது தலித் சிந்தனை வட்டத்தில் பெரும் அதிர்வலையை உண்டாக்கக்கூடியது. எழுத்தாளர் அழகியப் பெரியன் எழுதிய சிறுகதை “நடந்த கதை” எனும் குறும்படமாக எடுக்கப்பட்டு வெளிவந்ததையும் அதில் அவர் சேரிக்குள் தலித்துகளை தணிமைப்படுத்தாமல் அன்பாக இருப்போம் என குறிப்பிடுவதாகவும் கட்டுரை வடித்துள்ளார்.அது சாத்தியமில்லை என்பதனை பெரியார் குடியரசு இதழில் எழுதிய கட்டுரையின் அடிப்படையிலும் தீர்வை திருகுர் ஆன் அடிப்படையிலும் முன்வைக்கிறார். மனிதனை மனிதன் சமத்துவத் தோடும், சகோதரத்துவத் தோடும் வாழ,தலித்துகள் சாதி இழிவுகளிலிருந்து விடுதலைப் பெற இஸ்லாத்தை ஏற்ப்பதுதான் சிறந்த தீர்வு என்பதனை வலுவான ஆதாரங்களின் வாயிலாக நிறுவி உள்ளார் ஏம்பல் தஜம்முல் முஹம்மது.

64 பக்கங்கள் விலை: ரூ 60

தலித் மக்களின் விடுதலைப் பேறு

ஆசிரியர்: ஏம்பல் தஜம்முல் முஹம்மது. வெளியீடு: இஸ்லாமிய பண்பாட்டு ஆய்வு நிருவனம், ஹஜ்ரத் கார்டன், இனாம்குளத்தூர், திருச்சி-621 303

புத்தகப்பூங்கா பகுதியில் தங்கள் நூல் விமர்சனம் இடம்பெற கீழ்கண்ட முகவரிக்கு 2 புத்தகங்கள் அனுப்பவும்.


அனுப்பவேண்டிய முகவரி: மக்கள் உரிமை, எண்: 7 வடமரைக்காயர் தெரு, மண்ணடி, சென்னை&600 001.