அண்ணல் நபிகளாரின் அறியப்படாத ஆளுமைத் திறன்

புத்தகப் பூங்கா

அண்ணல் நபி(ஸல்)அவர்களை ஆன்மீகத் தலைவராக, ஆட்சித் தலைவராக, வீரம் செறிந்தவராக, தளபதியாக, தோழராக, நல்ல குடும்பத்தலைவராக, சமூக நல்லிணக்கம் பேணியவராக, சட்ட வல்லுநராக, தத்துவ அறிஞராக, கண்ணிய மிக்கவராக என பல்வேறு பரிணாமங்களில் நாம் அறிந்து வைத்துள்ளோம்.


ஆனால் நாமெல்லாம் அதிகம் அறிந்திடாத பக்கம் ஒன்று உள்ளது. சிறந்த ஆசிரியராக நாம் அவரை உணர முற்படவில்லை என்பதே அது. அண்ணலம் பெருமானாரை சிறந்த ஆசிரியராக வாசகர்களிடம் அறிமுகம் செய்வதில் உம்மு நுமைரா எழுதிய பேராசிரியர் பெருமானார் எனும் இந்நூல் வெற்றி கண்டு இருக்கிறது.


ஒரு நல்ல ஆசிரியர் மாணவர்களிடம் என்னென்ன உத்திகளைக் கையாண்டு கற்பித்தால் சிறப்பாக இருக்கும் என்பதனை கற்பித்தல் முறைகளை வகுத்து சொல்லிக் கொடுப்பதை நாம் கண்டு வருகிறோம். தற்கால சூழலில் என்னென்ன கற்பித்தல் முறைகளைக் கையாண்டு வருகிறோமோ அதனை 1400 ஆண்டுகளுக்கு முன்பே நடைமுறைப்படுத்தி சென்று இருக்கிறார்கள் நபிகளார் என்பதனை 30 தலைப்புகளின் வழி நமக்கு உணர்த்துகிறார; நூலாசிரியர்.


கற்பித்தல் என்பது தெளிவாக இருக்க வேண்டும், கற்பவர்கள் புரியும் விதத்தில் இலகுவாக அமைய வேண்டும். இவை இரண்டையும் தமது கற்பித்தலில் நடைமுறைப்படுத்தியவர்கள் நபிகளார்.
நடைமுறைகள், செயல்கள், சொற்கள் அடங்கிய நபிமொழித் தொகுப்புகளை நாம் தொடர்ந்து வாசித்து வந்தால் தற்போது வரையறுக்கப்பட்டுள்ள பயிற்றுவிக்கும் முறைகள் அனைத்தையும் விட மிகச்சிறந்ததாக அண்ணல் நபி(ஸல்)அவர்களின் கற்பித்தல் முறைகள் அமைந்திருந்தன என்பதனை உணர முடிகிறது.


அல்லாஹ்வின் அருள்மறையையும், தனது அழகிய வாழ்வியல் நடைமுறைகளையும் அருமைத் தோழர்களுக்கு எடுத்து விளக்கும் போது பல்வேறு கற்பித்தல் முறைகளை பெருமானார; அவர்கள் பயன்படுத்தி உள்ளார்கள். கேட்பவர்கள் சோர்வடையச் செய்யாதிருத்தல், மொழி நயம், வினாக்கள் மற்றும் விவாதங்கள் மூலம் புரிய வைத்தல், உதாரணங்களைப் பயன்படுத்துதல், வரைபடங்கள் மூலமாக விளக்குதல், சைகைகள் காட்டி விளக்குதல், பொருட்கள் கொண்டு விளக்குதல், கேள்வி, பதில்கள் போன்ற கற்பித்தல் உத்திகளை பெருமானார் அவர்கள் கையாண்டுள்ளார்கள் என்பதனை சரியான ஆய்வு நோக்குடன் கட்டுரைகளை வடித்திருக்கும் விதம் கவனத்தை ஈர்க்கிறது.


நபியவர்களின் கற்பித்தலில் நபித்தோழர்கள், தாபியீன்கள், தபவு தாபியீன்கள், இமாம்கள்' என்று வழி வழியாக ஹதீஸ்கள் தொகுக்கப்பட்டு, கலப்படங்கள் மற்றும் பொய்களிலிருந்தும் பாதுகாக்கப்பட்டும் உயிரோட்டமுள்ளதாக இன்றளவும் நமது கரங்களில் தவழ்கிறது என்பதனை சான்றாதாரங்களுடன் நிறுவுகிறார் உம்மு நுமைரா என்னும் பேராசிரயிர் சித்தி லரிபா சித்திக்கியா. கல்வியியல் நோக்கில் தமிழ் வாசிப்புத்தளத்தில் நபிகளாரை அறிமுகம் செய்து இருக்கும் முதல் நூல் இது என்றால் மிகையல்ல.

பக்கங்கள் :160
விலை: ரூ80
பேராசிரியர் பெருமானார்
நூலாசிரியர்: உம்மு நுமைரா
வெளியீடு: தாருஸ் ஸலாஹ்,
92,தேவராஜ முதலி தெரு,
பூங்கா நகர் சென்னை - 600 003.
அலைபேசி: 9171846184

புத்தகப்பூங்கா பகுதியில் தங்கள் நூல் விமர்சனம் இடம்பெற  2 புத்தகங்கள் அனுப்பவும்.

 அனுப்பவேண்டிய முகவரி: மக்கள் உரிமை. எண்: 7 வடமரைக்காயர் தெரு, மண்ணடி, சென்னை-600 001.