முன்மாதிரி கணவன் - மனைவி இலக்கணங்கள்

புத்தகப் பூங்கா

இன்று இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ள உரிமைகள் குறித்து பலத்த சர்ச்சைகள் நமது நாட்டில் எழுப்பபட்டு வருகின்றன.இஸ்லாம் ஒரு முழுமையான வாழ்வியல் நெறி என்ற அடிப்படையில் குடும்பவியலுக்கும் தெளிவான வழிகாட்டலை அளித்துள்ளது.


குடும்ப வாழ்வில் கணவனின் கடமைகள் மற்றும் உரிமைகள் யாவை? மனைவியின் கடமைகள் மற்றும் உரிமைகள் யாவை? என்பதை தெளிவாக வரையறுத்துள்ள மார்க்கம் இஸ்லாம் ஆகும்.


ஆயிஷா லெமு இங்கிலாந்தில் 1961இல் பிறந்து இஸ்லாத்தை தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டவர். தனது கணவருடன் 1966ல் நைஜீரியாவில் குடியேறினார். முதலில் பள்ளிக்கூட ஆசிரியைவாகவும் பிறகு கல்லூரியின் முதல்வராகவும் கல்வி பணியாற்றினார். இத்துடன் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளுடன் இணைந்து மார்க்க மற்றும் சமுதாய பணியாற்றி வருபவர்.


ஒரு மாணவர் அமைப்பு நடத்திய பயிலரங்கத்தில் 'முன்மாதிரி முஸ்லிம் மனைவி' என்ற தலைப்பில் உரையாற்ற இவர் அழைக்கப்பட்டார். அப்போது முன்மாதிரி முஸ்லிம் கணவர் என்ற தலைப்பிலும் உரையாற்றலாமே என்ற எண்ணம் இவருக்குள் உதித்தது. இதன் விளைவாக அவர் எழுதிய இரண்டு சிறு நூல்கள் தான் 'முன்மாதிரி முஸ்லிம் கணவன்' மற்றும் 'முன்மாதிரி முஸ்லிம் பெண்மணி' ஆகிய இரண்டு நூல்களும்.


முன்மாதிரி முஸ்லிம் கணவன் நூலில் ஒரு முன்மாதிரி முஸ்லிம் கணவனின் பண்புகள் எப்படியிருக்க வேண்டும் என்பதை திருக்குர்ஆன் மற்றும் நபிவழி வழியாக விவரிக்கிறார். திருமணம் ஏன் செய்துக் கொள்ள வேண்டும் என்பதில் தொடங்கி மணமகளை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும், கணவனின் கடமைகள், குழந்தைகளுக்கு செலுத்த வேண்டிய கடமைகள், மனைவிகளின் உரிமைகள் என உளவியல் ரீதியாக ஆழமான கருத்துகளை எடுத்துரைக்கிறார். முத்தாய்ப்பாக முன்மாதிரி கணவனிடம் மனைவியர் எதிர்பார்க்கும் 25 பண்புகளை பட்டியலிட்டு மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறார்.


முன்மாதிரி முஸ்லிம் மனைவி நூலில் பொருத்தமான வாழ்க்கை துணையை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என தொடங்கி கணவரை புரிந்து கொள்ளுதல், இல்லம், பணம், நண்பர்களும், சமூக வாழ்க்கையும், என 13 இயல்களில் முன்மாதிரி முஸ்லிம் மனைவி கைக்கொள்ள வேண்டிய பண்புகளை உளவியல் ரீதியாக எளிமையாக விளக்குகிறார். நல்லதொரு மனைவியாக வாழ துடிக்கும் ஒவ்வொரு பெண்மணிக்கும் பயனுள்ள துணைவனாக இந்த நூல் அமைந்துள்ளது.


இன்றைய காலக்கட்டத்தில் கணவனும், மனைவியும் பரஸ்பரம் தங்கள் கடமைகளை அறியாததாலும், பரஸ்பரம் உரிமைகளை உணராததாலும் குடும்பங்களில் பிளவு ஏற்படுகின்றது. இந்த அறியாமையை போக்கும் சீரிய வழிகாட்டியாக இந்த இரு நூல்களும் அமைந்துள்ளன. திருமணம் செய்யவிருப்போர் மட்டுமல்ல, சுயபரிசோதனைக்காக தம்பதியினராக வாழ்வோரும் இந்த இரு நூல்களையும் படிப்பது அவசியமாகும்.


புதிய தம்பதியினருக்கு பரிசளிக்க சிறந்த நூல்கள் இவை இரண்டும்.

நூல்கள்:

1. முன்மாதிரி முஸ்லிம் கணவன்
ஆசிரியர்: பி. ஆயிஷா லெமு
பக்கங்கள் 36 விலை ரூ 20


2. முன்மாதிரி முஸ்லிம் மனைவி
ஆசிரியர்: பி. ஆயிஷா லெமு
பக்கங்கள் 68 விலை ரூ 40


வெளியீடு

மாற்றுப் பிரதிகள்
1205 கருப்பூர் சாலை
புத்தாநத்தம் 621310
தொலைபேசி 04322 273055.