மதவெறியும் மாட்டுக்கறியும் ஒர் ஆவண தொகுப்பு நூல் விமர்சனம்

புத்தகப் பூங்கா

1966-ஆம் ஆண்டு பசுவதைத் தடுப்புப் போராட்டம் என்ற பெயரில் இன்றைய பி.ஜே.பியின் அன்றைய அரசியல் வடிவமாக இருந்த ஜனசங்கமும், ஆர்.எஸ்.எஸ் சங்பரிவாரங்கள் இணைந்து நிர்வாண சாமியார்களை டெல்லியில் கொண்டு வந்து நிறுத்தி திரிசூலங்கள், ஈட்டி தடிகள் கம்புகளுடன் கலவரங்கள் செய்து தீ வைப்புகளை நடத்தினர்.

பட்டப்பகலில் நாடாளுமன்ற வீதியில் காமராஜர் வீட்டுக்கே வந்து தீ வைத்து அவரை கொல்ல முயன்றனர். அதன் தொடர்ச்சியாக தற்போது வரை பசுவை வைத்து சங்பரிவார் கும்பல் அரசியல் நடத்தி வருவதை இந்நூல் தெளிவாக விவரிக்கிறது.


மாட்டிறைச்சி குறித்து தந்தை பெரியாரும், புரட்சியாளர் அம்பேத்காரும் கூறிய கருத்துக்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. தந்தை பெரியார் அவர்கள் மாட்டிறைச்சி பற்றியும், அதன் நன்மைகள் பற்றியும் தீண்டாமை குறித்தும் ஆற்றிய உரைகள், பசுவதை தடைகோரி கலவரம் செய்த மத வெறியர்களைக் கண்டித்து அவர் எழுதிய அறிக்கையும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.


மாட்டிறைச்சி பற்றி புரட்சியாளர் அம்பேத்காரின் நூலான “THE UNTOUCHABLES” நூலிலிருந்தும், பேராசிரியர் டி.என்.ஜா அவர்கள் எழுதிய “THE MYTH OF THE HOLY COW”என்ற நூலிலிருந்தும் பேராசிரியர் ப.காளிமுத்து அவர்கள் அரிய செய்திகள் தொகுத்து மொழிபெயர்த்து தந்துள்ளார்.


இந்திய அளவில் சராசரியாக 70சதவீதம் பேர் மாமிச உணவு சாப்பிடுகிறார்கள். அவர்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கும் ஒரே சத்தான உணவு மாட்டிறைச்சியே. அதனை தடை செய்தல் எந்த வகையில் நியாயம் என்பதனை கேள்வியாக எழுப்புகிறது இந்நூல்.


பசுவதை குறித்து சுவாமி விவேகானந்தர் சி.லெட்சுமண அய்யர் ச.கு.கணேச அய்யர் ஆகியோரின் கருத்துகளுக்கும் காஞ்சி சங்கராச்சாரியரர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி எழுதிய ‘தெய்வத்தின் குரல்’ இரண்டாம் பாகத்தில் பிராமணர்கள் பசு மாமிசம் உண்டதை உறுதி செய்யும் ஆதாரத்தையும் பதிவேற்றி உள்ளார்கள்.


மகாபாரதத்தில் தடபுடலாக மாட்டிறைச்சி விருந்து நடைபெற்றதன் மேற்கோள் இந்நூலில் இடம் பெற்றுள்ளது. சீதையும் இராமனும் மான்கறி சாப்பிட்டதை ராமாயணத்திலிருந்து குறிப்புகள் வாயிலாக உணர்த்துகின்றனர். மாட்டுகறியை வைத்து மதவெறியை தூண்டி அரசியல் ஆதாயம் தேடும் காலகட்டத்தில் மனிதநேயம் நாடுவோர் அவசியம் படித்து பயன்பெற வேண்டிய நூல்.

 

நூல்: மதவெறியும் மாட்டுக்கறியும் ஒர் ஆவண தொகுப்பு
பக்கம் 96
விலை: ரூ.40
திராவிடர் கழக(இயக்க) வெளியீடு
பெரியார் திடல், ஈ.வெ.கி சம்பத் சாலை,
வேப்பேரி சென்னை -7
044-26618163.