அல்லாஹ்வின் உயர்வான பண்புகளை அறிவோம்

புத்தகப் பூங்கா

அல்லாஹ்வைப் பற்றிய அறிவானது அறிவுகளில் அதி சிறந்த அறிவாக இஸ்லாமிய மார்க்கத்தில் கருதப்படுகின்றது. இந்தக் கல்வியானது மனிதர்களால் அறியப்பட்டவனாகிய அல்லாஹ்வைப் பற்றிய அறிவை உள்ளடக்கி இருப்பதும் இதற்கான சிறப்பின் மற்றொரு முக்கிய காரணமாகும்.


அல்லாஹ்வின் இலக்கணங்கள், பெயர்கள், பண்புகள், அவனுக்குரிய தனித்தன்மைப் பற்றி ஒரு முஸ்லிம் அறிவது, அல்லாஹ்வைச் சீராகப் புரிந்து சரியாக வணங்கிட வழிவகுக்கும் என்பதில் சந்தேகமில்லை. பல சிறப்புக்களை உள்ளடக்கிய இந்தக் கல்வி அறிவு பற்றி பல்லாயிரக்கணக்கானோர் பேசுகின்ற தமிழ் மொழியில் இதுவரைக்கும் ஒரு நூல் வெளிவராதிருப்பது துரதிஷ்டமே! இது சார்ந்துள்ள அறிவில் மனிதர்களிடம் பல வழிகேடுகள் உள்ளன என்பது மறுக்க முடியாத ஒன்றாகும். இந்த குறையை போக்கும் வகையில் அமைந்துள்ளது அல் அஸ்மா வஸ்ஸிஃபாத் என்னும் இந்த நூல்.


மதீனாப் பல்கலைக்கழகத்தில் ஹதீஸ் கலைப் பிரிவில் சிறப்பு பட்டதாரியான இலங்கையை மன்னாரைச் சேர்ந்த எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி அவர்கள் அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் மற்றும் அவனது உயர்ந்த பண்புகள் பற்றி இந்த நூலில் அல்லாஹ்வின் உயர்வான பண்புகளை விரிவாக அளித்துள்ளார். அல்லாஹ்வின் பேச்சாகிய திருக்குர்ஆனில் இருந்தும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளில் இருந்தும், சங்கைமிக்க இமாம்களின் கருத்துக்களில் இருந்தும் அஹ்லுஸ்ஸ§ன்னா வல்ஜமாஆ பிரிவின் இது பற்றிக் கொண்டுள்ள நம்பிக்கை தொடர்பாக பொருத்தமான தலைப்புக்களையும், சான்றுகளையும் தேர்வு செய்து இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. அஸ்மா, ஸிஃபாத் - அல்லாஹ்வின் பெயர்கள், பண்புகள் பற்றிய நம்பிக்கை இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கைகளுள் ஒன்றாகும். எனவே, அவற்றை பற்றித் தெளிவாகவும், விரிவாகவும் அறிந்திருப்பது நம் அனைவர் மீதும் கடமையாகும். அந்த கடமையை ஆற்ற இந்த நூல் பெருமளவில் உதவிடும் வகையில் அமைந்துள்ளது. இஸ்லாத்தின் பெயரால் உருவாகிய பிரிவுகள் மத்தியில் அஸ்மா, ஸிஃபாத் பற்றிய விஷயத்தில் தான் பெரும் வழிகேடுகள் தோன்றியுள்ளன என்பதை இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாடு தொடர்பான ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. அகிலங்களின் இரட்சகனாகிய அல்லாஹ் தன்னைப் பற்றி அறிமுகம் செய்திருப்பது போன்றும், அவனுடைய இறுதித்தூதர் முஹம்மத் நபி(ஸல்) அவர்கள் அவனைப் பற்றி அறிவித்துத் தந்த வழியிலும் அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்வது முஃமின்கள் அனைவர் மீதுமுள்ள கடமையாகும். அதற்கான அடிப்படைகள் நோக்கிய நகர்வு ஒன்றிற்கான நூலாக இந்த நூல் அமைந்துள்ளது. அனைத்து தரப்பினருக்கும், குறிப்பாக கல்வி படிக்கும் மாணவர் சமுதாயத்திற்கும் இது மிகவும் பயனுள்ள ஒரு நூலாக விளங்குகின்றது. நூல் ஆசிரியர் இதனை மிகவும் எளிய நடையிலும், அனைவரும் புரியும் விதமாகவும் தொகுத்தளிக்க முயன்றுள்ளார். முஸ்லிம்கள் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய அத்தியவசியமான நூல்.


நூல்: அல் அஸ்மா அஸ்ஸிஃபாத் (அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் உயர்வான பண்புகள்)
ஆசிரியர்: எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி
பக்கங்கள்: 376
விலை: ரூ150
வெளியீடு: சாஜிதா புக் சென்டர்
248 தம்பு செட்டி தெரு
சென்னை 600 001.