கவர்னர் பெத்தா (புத்தக விமர்சனம்)

புத்தகப் பூங்கா

சிறுகதைகள் ஊடாக சமூகத் தின் உள் வெளிப்பரப்பை அதன் உண்மைத் தன்மையோடும் கிளர்ச்சியோடும், ஒருவித சிலிர்ப்போடும் பதிவு செய்வதில் மீரான் மைதீன் வல்லவர்.


சிறுகதை, நாவல், கவிதை என இலக்கிய வானில் சிற கடிப்பவர். பொதுவெளியில் மிகவும் அறிமுகமான இவரது பல படைப்புகள் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கது. தமிழ் இஸ்லாமிய சிறுகதை தளத்தில் வலுவான இடத்தை கவர்னர் பெத்தா நூல் தக்கவைத்துக் கொண்டது.


மொத்தம் பத்து சிறுகதை கள் இத்தொகுப்பில் இடம்பெற் றுள்ளன. ஒவ்வொன்றும் வெவ் வேறு கதை களத்தில் இஸ்லாமிய பின்புலத்தோடு பயணிக்கிறது. 80களின் ஆரம்பத்தில் தமிழ் இஸ்லாமிய சமூகம் அரபுலக பயணத்தின் வாயிலாக நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளின் பயன்பாட்டில் தம்மை புதைத்துக் கொண்டதன் தொடக்க காலம். ஒரு தொலைக்காட்சி வரவால் அசன் கண்ணாப்பா எனும் கதை சொல்லி அடையும் விரக்தியை முதல் கதையை வாசிக்கும் அனைவரும் உணரலாம். மாணவப் பருவத்தில் குழு மனப்பான்மையின் வெளிப்பாட்டை ஓட்டு என்ற கதை காட்சிப்படுத்துகிறது.


பதின்ம வயதைக் கடந்தவர்கள் தமது பால்யகால நினைவுகளை அசைபோட வைக்கும் சிறந்த புனைவு அக்கதை.. தங்ககால் எனும் கதையும் நெகிழ்வானவை. கவர்னர் பெத்தா சிறுகதை குறித்து திறனாய்வு செய்தால் அதுவே தனி நூலாக அமையும்.


ஊருக்கு வரும் பெண் கவர்னரைக் காண காத்திருந்து, கூட்டத்தில் இடுபட்டு, கைகுலுக்கி மகிழ்ந்து ஊர் மக்களால் கவர்னர் பெத்தா என்றே அழைக்கப்படும் பீர்மாதான் கதை நாயகி. பெண் கல்வி குறித்த விழிப்புணர்வை இதனைவிட எளிய, அழகிய நடையில் யாரும் சொல்லியது இல்லை. பள்ளிவாசலின் கடைநிலை ஊழியரான மோதினார் படும் வேதனைகளை பெஞ்சி கதை அம்பலப்படுத்துகிறது. ரோஜாப்பூ கைத்துண்டு ஒரு அழகிய காதலை கவித்துவமாய் செதுக்கி இருக்கிறார்.


இத்தொகுப்பில் கதைகள் வர்ணனை, உவமை போன்ற வற்றை விட உரையாடல்களா லேயே வெற்றி பெறுகிறது. நாஞ்சில் நாட்டு வட்டார மொழியில் கதைகள் உயிர்ப்புடன் மிளிர்கிறது. கதைமாந்தர்கள் அனைவரும் நடுத்தர, விளிம்பு நிலை மக்களே. எல்லா கதைகளுக்குள்ளும் இஸ்லாமிய பொருளாதார, அரசியல், பண்பாடு, இல்லறக் கூறுகள் நுட்பமாகக் கையாளப்பட்டு புதிய சிந்தனை சாளரத்தைத் திறந்து வைக்கிறது. ஒவ்வொரு கதையைப் படித்து முடித்த உடன் நமது மன ஓட்டத்தில் ஒரு பெரும் பாரம் இயல்பாகக் குடிகொண்டுவிடும்.ஒவ்வொரு பாத்திரமும் மனக்கண்ணில் வந்து உலாவும். வீரியமான எழுத்துக்களால் தமிழ் இஸ்லாமிய சிறுகதை தோப்பில் மிகப்பெரிய மரமாக தன்னை தகவமைத்துக்கொண்டு விட்டார் மீரான் மைதீன். கனிகளை சுவைப்பதும், நிழலில் ஓய்வெடுப்பதும் வாசிப்பின் வாயிலாக நாம் செய்யவேண்டியது.


96 பக்கங்கள்.
விலை: ரூ 100
கவர்னர் பெத்தா
மீரான் மைதீன்,
காலச்சுவடு பதிப்பகம்,
669,கே.பி.சாலை,
நாகர்கோவில்- 629001